ஆஸிக்கு எதிராக தமது பலத்தை நிரூபித்ததாக கோஹ்லி பெருமிதம்

273
Getty

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனாள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெற்றுக்கொண்ட தோல்விக்கான பதிலைக் கொடுக்கவும், இந்திய அணியின் பலத்தை மீண்டும் நிரூபிக்கவும் அவுஸ்திரேலியாவுடனான இந்த வெற்றி ஊக்கமளித்து இருந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

தவானின் சதத்தோடு அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியை 36 ……..

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (10) நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. இந்த முடிவானது இம்முறை உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் 2ஆவது வெற்றியாகவும், அவுஸ்திரேலியாவின் முதல் தோல்வியாகவும் பதிவாகியது.  

இதேநேரம், கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்யணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. குறித்த ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய வீரர்கள் 3-2 என கைப்பற்றியிருந்தனர்.

எனவே, அந்து தொடர் தோல்விக்கான பதிலடியை இம்முறை உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி வழங்கியதாக கோஹ்லி தெரிவித்தார்.  

நேற்றைய போட்டியின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி அளித்த பேட்டியில்,

உண்மையில் இது மிகச் சிறந்த வெற்றியாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த பிறகு எங்களுக்கு கிடைத்த சிறந்த முதல் வெற்றியும் இதுவாகும். எங்களுக்கு அதை நிரூபிப்பதற்கான தேவையும் இருந்தது.  

Photos : CWC19 – Sri Lanka training session ahead of Bangladesh match

அதேபோல, நாங்கள் அந்த நோக்கத்துடன் தான் இங்கு வந்தோம், அதிலும் குறிப்பாக அந்தத் தொடரில் மிட்செல் ஸ்டார்க் விளையாடவும் இல்லை. அத்துடன், கடந்த தொடரைவிட இன்றைய போட்டியில் மிகவும் பலமாக பந்துவீச்சு அணியொன்று தான் களமிறங்கியிருந்தது. எனினும், நாங்கள் இன்றைய போட்டியில் 3 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம்.

எமது ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் மிகவும் பாராட்டத்தக்கது. என்னுடன் ஹர்திக் பாண்டியா, டோனி, கே.எல் ராகுல் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடியிருந்தனர். உண்மையில் நாங்கள் தொழில்முறை வீரர்கள் என்பதை நிரூபித்து வருகின்றோம். அதனால் தான் ஒரு தலைவராக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோல, இன்றைய போட்டியில் நாங்கள் மிகவும் சிறந்ததொரு ஒருநாள் போட்டியை விளையாடியிருந்தோம்என தெரிவித்தார்.

இதேநேரம், நேற்றைய போட்டியில் வேகப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் ஆஸி வீரர்களுக்கு எதிராக இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தமது அபார திறமையைக் காண்பித்திருந்தனர். எனவே, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு குறித்து கருத்து வெளியிட்ட கோஹ்லி,

”350 ஓட்டங்களை எடுத்த பிறகு அதை நீங்கள் துரத்தியடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் அதற்காக நான் ஒருவரை வைத்திருந்தேன். ஹர்திக் பாண்டியாவுக்கு முதல் பந்திலிருந்தே சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதை நான் தெரிந்து வைத்திருந்தேன்.

அதேபோல மொஹமட் ஷமி இப்போட்டியில் விளையாடியிருந்தால் அவரது ஓட்ட வேகத்துக்கும், ஆடுகளத்தின் தன்மைக்கும் மிகப் பெரிய ஒத்துழைப்பை வழங்கியிருக்கும். எனினும், புவனேஷ்வர் குமார் புதிய மற்றும் பழைய பந்துகளில் சிறப்பாக செயற்பட்டு ஸ்மித் மற்றும் ஸ்டொய்னிஸின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.  

உண்மையில் எமது பந்துவீச்சாளர்களும் மிகவும் அனுபவமிக்க வீரர்கள். எங்களிடம் மிகச் சிறந்த பந்துவீச்சு வரிசையொன்று உள்ளது. எனவே, நீங்கள் அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர்களிடம் திறமை உண்டு. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லைஎன அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் ஏற்கனவே இடம்பெற்ற தமது முதல் லீக் ஆட்டத்தில் பலம் கொண்ட தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய நிலையிலேயே நேற்றைய போட்டியில் மற்றொரு பலமான தரப்பான அவுஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டிருந்தனர்.  

இந்நிலையில், முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றமை அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான அறிகுறியாக இருக்குமா? என ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு கோஹ்லி பதிலளிக்கையில்,

Photos : CWC19 – Sri Lanka training session ahead of Bangladesh match

இல்லை. ஏனெனில் தற்போது நாங்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம். எனவே, அதுபற்றி சிந்திப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை. 6 போட்டிகளின் பிறகு நாங்கள் இந்தத் தொடரில் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை அவதானிப்போம். எனினும், நாங்கள் பலம்வாய்ந்த இரண்டு அணிகளை வீழ்த்தியுள்ளோம். அந்த அணிகள் தான் உலக தரவரிசையில் முன்னிலையில் உள்ள அணிகளாகவும் உள்ளன.

எனவே, இந்த வெற்றியானது எமக்கு இன்னும் அதிக நம்பிக்கையை கொடுத்துள்ளது. நான் ஏற்கனவே கூறியது போல நாங்கள் ஆரம்ப கட்டப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் அரையிறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி நியூசிலாந்துடன் மோதுகிறது. அவுஸ்திரேலிய அணி 15ஆம் திகதி இலங்கையை எதிர்கொள்கிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<