மக்காவுவிற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் உறுதியான பதில்

449

கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஆசிய கிண்ண போட்டிகளுக்கான கூட்டு தகுதிகாண் பூர்வாங்க சுற்றின் மக்காவு அணிக்கு எதிரான 2 ஆம் கட்டப் போட்டி பொதுவான இடத்திற்கு மாற்றப்பட மாட்டாது என்று இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) குறிப்பிட்டுள்ளது.

இந்த 2 ஆம் கட்டப் போட்டிக்காக இலங்கை வராமல் இருப்பதற்கு மக்காவு கால்பந்து சங்கம் (MFA) எடுத்த முடிவுக்கு பதில் அளித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதி சீனாவின் சுஹாய் அரங்கில் நடைபெற்ற முதலாம் கட்ட போட்டியின் இரண்டாவது பாதியில் பிலிப் டுவார்ட் அடித்த கோல் மூலம் இலங்கைக்கு எதிராக மக்காவு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

>>பாதுகாப்பு காரணத்தினால் இலங்கை வர மக்காவு அணி மறுப்பு

“குறிப்பாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உத்தியோகபூர்வ பிஃபா தகுதிகாண் போட்டியில் தமது சொந்த மண்ணில் உள்நாட்டு ரசிகர்கள் முன் விளையாடுவது எந்த ஒரு தேசிய அணிக்கும் மிக முக்கியமானதாகும்.   

அனைத்து பாதுகாப்பு தேவைகளையும் நாம் பூர்த்தி செய்துள்ளோம். போட்டி குறித்த எமது பாதுகாப்புத் திட்டங்களுக்கு பிஃபா மற்றும் AFC ஒப்புதல் அளித்துள்ளன. மக்காவுவிடம் இருந்து எந்த ஒரு உத்தியோகபூர்வ மறுப்பும் கிடைக்கவில்லை. மக்காவு அணியின் முடிவு குறித்து AFC இதுவரை அறிவிக்கவில்லை” என்று அந்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பு நிலை குறித்து அவதானம் செலுத்தி மக்காவு கால்பந்து சங்கம் சில வாரங்களுக்கு முன் FFSL,  AFC மற்றும் பிஃபாவுக்கு கடிதம் எழுதி இருந்தது. மக்காவு அணிக்காக வலுவான பாதுகாப்பை வழங்குவதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் உறுதி அளித்திருந்தது.

வருகை தரும் மக்காவு அணிக்காக இராணுவம், பொலிஸ் மற்றும் அமைச்சு பாதுகாப்பு தரப்பினருடன் (MSD) தனிச்சிறப்புக் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய இலங்கை அரசுடன் இணைந்து FFSL நடவடிக்கை எடுத்துள்ளது என்று பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். AFC பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே இலங்கை வந்துள்ளதோடு ஏனைய மக்காவு அதிகாரிகள் திட்டமிட்டவாறு மைதானத்திற்கு வருகை தர ஆரம்பிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.  

போட்டிக்கான ஏற்பாடுகளை இலங்கை கால்பந்து சம்மேளனம் மேற்கொள்வதோடு மக்காவு இலங்கைக்கு வருகை தரத் தவறினால் அது பற்றிய முடிவு AFC இடம் தங்கியுள்ளது என்று அந்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

>>மக்காவு கால்பந்து சம்மேளனத்தின் தீர்மானத்தை எதிர்த்த மக்காவு தேசிய அணி வீரர்கள்

“இதுவரை மக்காவு FFSL இற்கு கோரிக்கை ஒன்றை விடுத்த நிலையில் திட்டமிட்டபடி இலங்கையில் போட்டி நடைபெறும் என்று FFSL பதிலளித்தது. உத்தியோகபூர்வ போட்டி ஒருங்கிணைப்பு சந்திப்பு 10 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 10.00 மணிக்கு கலதாரி ஹோட்டலில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதோடு மக்காவு அணி வருகை தர தவறினால் AFC உத்தியோகபூர்வ முடிவை எடுக்கும்.    

AFC இடம் ஆலோசனை கேட்ட பின்னர் FFSL செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும். அதுவரையில் திட்டமிட்டபடி ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

மக்காவு அணி போட்டிக்கு வருகைதரத் தவறினால் ஒழுங்குமுறைகளுக்கு அமைய இலங்கை அணிக்கு வெற்றி வழங்கப்பட்டு இலங்கை அணி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் குழு நிலை போட்டிக்கு முன்னேறும் என்று குறித்த மூலங்கள் கூறுகின்றன” என்று இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<