அடித்தாடும் துடுப்பாட்டம் வெற்றிக்கு வழியல்ல – லஹிரு திரிமான்ன

705
AFP

ஒருநாள் போட்டிகளில் அடித்தாடுவதன் மூலம் (Power Hitting) விரைவாக ஓட்டங்கள் சேர்ப்பது இப்போது வழமையாகிவிட்டது. இதன் காரணமாக கிரிக்கெட் விளையாடும் அணிகள் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் 300 இற்கு குறைவான ஓட்டங்கள் பெறுவது என்பது அரிதான விடயமாக மாறியிருக்கின்றது.

“உபாதையுடன் முதல் போட்டியில் விளையாடுவேன்” – மொர்டஷா

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் …………

எனினும், அடித்தாடும் உக்திகள் (Power Hitting Techniques) இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் வெற்றிக்கான வழியாக இருக்காது என இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்ன குறிப்பிடுகின்றார்.

உலகக் கிண்ணத்திற்கு தயாராகி வரும் லஹிரு திரிமான்னவிடம் இலங்கை அணியில் அடித்தாடும் துடுப்பாட்ட வீரர்கள் குறைவாக இருப்பது ஏன் என வினவப்பட்டது. அதற்கு அவர் இவ்வாறு பதில் தந்தார்.

“நான் எண்ணும்படி, 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் நடைபெற முன்னர், சிலர் எங்களது அணியின் அடித்தாடும் உக்தியினை மேம்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தனர். பின்னர் நாம் குறித்த உலகக் கிண்ணத்தை வென்றோம்.”

திரிமான்ன குறிப்பிட்டிருந்த 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட, 131 ஓட்டங்களை மிகவும் இலகுவாக துரத்தி அடித்தது. அந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியினை குமார் சங்கக்கார அரைச்சதம் (52) ஒன்றுடன் உறுதி செய்திருந்ததார்.  

இதேநேரம் குறித்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியினர் ஒரேயொரு போட்டியில் மாத்திரமே 170 இற்கு மேலான ஓட்டங்களை குவித்தனர்.  எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் சராசரியான ஓட்டங்கள் பெற்றே இலங்கை அணி, சம்பியன்களாக மாறியது.

இதனால் 50 ஓவர்கள் கொண்ட இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி, துடுப்பாட்ட வீரர்களில் பெரிதும் தங்கியிருக்காமல் பந்துவீச்சாளர்களின் உதவியினையும் எதிர்பார்க்கின்றது. இலங்கை அணி 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரை வெல்ல பந்துவீச்சாளர்கள் மிக முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். அதற்கு உதாரணமாக 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தொடரில் இலங்கை அணி ரங்கன ஹேரத்தின் மாய சுழல் மூலம் நியூசிலாந்து அணியினை வீழ்த்திய போட்டியினை குறிப்பிட முடியும். குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடி வெறும் 119 ஓட்டங்களையே பெற்ற இலங்கை, நியூசிலாந்து அணியினையும் 60 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது.

பொதுவாகவே T20 போட்டிகள் என்பது ஆக்ரோசம் கொண்ட,  பந்துகளை பெளண்டரி எல்லைகளுக்கு அப்பால் விரட்டும் ஆற்றல் கொண்ட துடுப்பாட்ட வீரர்களின் விளையாட்டாகும். ஆனால் இப்படியான துடுப்பாட்ட வீரர்களை குறைவாக கொண்ட நிலையிலையே இலங்கை அணி 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் சாதித்தது. இதேமாதிரியான ஒரு சாதனை அடைவை இலங்கை அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் எதிர்பார்க்கின்றது.

“உங்களுக்கு இங்கே 50 ஓவர்கள் இருக்கின்றது. இது நீண்ட போட்டி. உங்களுக்கு 300 பந்துகளுக்கு விளையாட்டினை காட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. நான் இது ஒரு நீண்ட விளையாட்டு என நம்புகின்றேன்.” எனக் குறிப்பிட்ட திரிமான்ன இந்த உலகக் கிண்ணத்தில் தான் புதுவிதமான துடுப்பாட்ட உக்திகள் எதனையும் உபயோகம் செய்ய நினைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். “நான் எனது போட்டித் திட்டங்களுடன் மாத்திரம் இருக்கின்றேன். ஆனால், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் வித்தியாசமான துடுப்பாட்ட முறைகளை கையாள்வேன்.”

உலகக் கிண்ணத்தில் சுழலில் மிரட்டக் காத்திருக்கும் நட்சத்திர வீரர்கள்

கிரிக்கெட் உலகின் அடுத்த வல்லரசு யார் என்பதை………..

லஹிரு திரிமான்ன 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் மட்டுமல்லாது 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணமும், இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி நல்ல  பெறுபேறு ஒன்றை பெற முன்னுதாரணமாக இருப்பதாக குறிப்பிட்டார். “நாம் அப்போதும் (1996இலும்), உலகக் கிண்ணத்திற்கு முன்னர் சிறப்பாக இருக்கவில்லை. ஆனால், உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடி அதில் வெற்றியாளர்களாக ஆகினோம்.”

ஆனால், லஹிரு திரிமான்னவின் இந்த கூற்றுக்கு அமைவாக 1996ஆம் ஆண்டில் இருந்தது போல் இலங்கை அணி இப்போது இல்லை எனலாம். அப்போது 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு முன்னர் தாம் விளையாடிய கடைசி 15 ஒருநாள் போட்டிகளில் ஏழு போட்டிகளில் வென்ற இலங்கை அணி, இப்போது நடைபெறவுள்ள 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு முன்னர் தாம் விளையாடிய கடைசி 15 ஒருநாள் போட்டிகளில் இரண்டில் மாத்திரமே வென்றிருக்கின்றது. அதிலும் ஒரு வெற்றி பலம் குறைந்த ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெறப்பட்டதாகும்.

இதேநேரம் அப்போது இலங்கை அணிக்கு அதிரடி துடுப்பாட்டம் மூலம் சிறந்த ஆரம்பத்தை கொடுத்த சனத் ஜயசூரிய, ரொமேஷ் கலுவிதாரன ஜோடியும் துணையாக இருந்தது. எனவே, இம்முறைக்கான உலகக் கிண்ணத்தில் விடயங்கள் எவ்வாறு நடைபெறுகின்து என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

உலகக் கிண்ணத்தில் கலக்க காத்திருக்கும் சகலதுறை வீரர்கள்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள…….

இதேவேளை லஹிரு திரிமான்ன 2017ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதன் பின்னர், இம்முறைக்கான இலங்கையின் உலகக் கிண்ண குழாமில் இடம்பிடித்த காரணத்தினையும் விளக்கியிருந்தார்.

“நான் கடந்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு முன்னர் (இலங்கையின்) டெஸ்ட் அணியில் இடம்பெற்றேன். எனவே, அது கடினமாக இருக்கவில்லை.”

“ஆனால் ஒரு மாதத்திற்கு முன்னர் நாம் உள்ளூர் தொடர் ஒன்றினை நடாத்தியிருந்தோம், அணியில் இடம்பெறுவதற்காக எனது திறமையினை நிரூபிக்க அங்கே எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதே நேரம் கடைசியாக இடம்பெற்ற உலகக் கிண்ணத்தில் நான் விளையாடிய காரணத்தினால், அந்த (உள்ளூர்) தொடர் எனக்கு நல்ல விதத்தில் அமைந்திருந்தது. மேலும், அனைவரும் நான் இந்த உலகக் கிண்ணத்தில் ஏதாவது பங்களிப்பு வழங்குவேன் என எண்ணியிருந்தனர். அதன்படி, உள்ளூர் பருவகால தொடரில் சிறப்பாக செயற்பட்டு (இலங்கை) அணியில் இடம்பெற கிடைத்த சந்தர்ப்பத்தினை அதிர்ஷ்டமாக கருதுகின்றேன்.” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<