பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை

489

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையில் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரினை பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் கராச்சி ஆகிய மைதானங்களில் நடாத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இலங்கை தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணை வெளியீடு

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வளர்ந்துவரும்…

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரினை பாகிஸ்தானின் நகரங்களான லாஹூர் மற்றும் கராச்சி ஆகிய மைதானங்களில் நடாத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட விடயத்தினை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரான எஹ்சான் மாணி, அதன் முகாமைத்துவ இயக்குனர்  வசீம் கான் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

இதேநேரம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் இலங்கை – பாகிஸ்தான் அணிகளிடையிலான இந்த டெஸ்ட் தொடர் பற்றி குறிப்பிடுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வீரர்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான விடயங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை கிரிக்கெட் சபை பாகிஸ்தான் சுற்றுப் பயணத்திற்கான திகதியினை உறுதி செய்யும் வரையில் காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களால், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வெளிநாட்டு அணிகள் மறுப்புத் தெரிவித்திருந்தன. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தமது நாட்டில் வெளிநாட்டு அணிகளுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீள நடாத்த பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தது.

>>“நாட்டு மக்கள் எமக்கு பக்கபலமாக உள்ளனர்”- குசல் மெண்டிஸ்

அந்தவகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியின் சுற்றுப் பயணம் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் மீண்டும் கொண்டுவந்த போதிலும் பெரிய அணிகள் பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடர்ந்தும் மறுத்திருந்தன.

எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அண்மைக்காலங்களில், வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்ற பாகிஸ்தான் சுபர் லீக் T20 தொடர், ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி, மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணி ஆகியவை பங்குபெற்ற T20 தொடர் என்பவற்றை பாகிஸ்தான் மண்ணில் மிக வெற்றிகரமாக நடாத்தியிருந்தது. இப்படியான நிலைமைகள் காரணமாக பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகள் நடைபெறுவதற்கான சாதக நிலைமைகள் உருவாகியிருக்கின்றது.

இதனால், இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுவது, எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஏனைய அணிகளையும் பாகிஸ்தான் வந்து விளையாடுவதற்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<