கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணப் போட்டி மற்றும் 2023 AFC ஆசிய கிண்ணப் போட்டிக்கான பூர்வாங்க தகுதிகாண் முதல் சுற்றுப் போட்டியில் மகாவு அணியை எதிர்கொள்ளும் இலங்கை தேசிய கால்பந்து அணி அதற்கு தயார்படுத்தலாக லாவோசில் அந்நாட்டு கால்பந்து அணியுடன் இரண்டு நட்புறவுப் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதன் முதல் போட்டி வரும் மே மாதம் 28 ஆம் திகதியும் இரண்டாவது போட்டி மே மாதம் 31 ஆம் திகதியும் நடைபெறள்ளது.
>> உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இறுதி குழாம் அறிவிப்பு
இரண்டு நட்புறவுப் போட்டிகளில் லாவோஸ் அணியை எதிர்கொள்வதற்கு 23 பேர் கொண்ட இலங்கைக் குழாம் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி லாவோஸ் தலைநகர் வியன்டியனுக்குப் பயணித்தது. அணித் தலைவரான அனுபவ கோல்காப்பாளர் சுஜான் பெரேரா மற்றும் உப தலைவர் பவிந்து இஷான் இருவரும் 2018 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக 2015 இல் பூட்டானுக்கு எதிராக விளையாடியவர்களாவர்.
லாவோசுக்கு பயணிக்கும் முன்னர் இலங்கை அணி கட்டாரின் டோஹா நகரில் 10 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்றது. 31 பேர் கொண்ட குழாத்தினர் டோஹாவில் முக்கியமான தகுதிகாண் போட்டிக்கான தயார்படுத்தலில் ஈடுபட்டது. அந்த அணி கட்டார் இராணுவ அணியுடன் நட்புறவு போட்டியில் ஆடியது. அந்தப் போட்டியில் இலங்கை 2-0 எனத் தோற்றது. இதனைத் தொடர்ந்து அந்தக் குழாம் 23 வீரர்களாக குறைக்கப்பட்டது.
உலகத் தரவரிசையில் 202 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி தற்போது 184 ஆவது இடத்தில் உள்ள லாவோஸை கடைசியாக 2016 ஆம் ஆண்டு எதிர்கொண்டது. மலேசியாவில் நடந்த AFC ஒற்றுமைக் கிண்ணத்திற்கான அந்தப் போட்டியில் இலங்கையை லாவோஸ் 2-1 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்தது. அந்தப் போட்டியின் பிந்திய நேரத்தில் ஆசிகுர் ரஹ்மான் கோல் ஒன்றை இலங்கைக்காக புகுத்தினார்.
முதல் போட்டி மே மாதம் 28 ஆம் திகதி இலங்கை நேரப்படி பி.ப. 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. லாவோஸ் தேசிய அரங்கில் அந்தப் போட்டி நடைபெறுகிறது. மே மாதம் 31 ஆம் திகதி அதே மைதானம் மற்றும் அதே நேரத்தில் இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.
இந்த இரு நட்புறவு போட்டிகளுக்குப் பின், 23 வீரர்கள் கொண்ட இலங்கைக் குழாம் லாவோசில் தொடர்ந்து தமது தயார்படுத்தல்களை செய்யவிருப்பதோடு ஜுன் மாதம் 3 ஆம் திகதி சீனாவின் சஹாய் சென்று ஜுன் மாதம் 6 ஆம் திகதி மகாவு அணியை எதிர்கொள்ளவுள்ளது.
தற்போதைய உற்சாகத்துடன் இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெல்லும் என எதிர்பார்ப்பதாகவும் அணி தயார் நிலையில் இருப்பதாகவும் இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
>> கால்பந்து உலகை வியக்க வைக்கவுள்ள 2022 உலகக் கிண்ணம்
ஜுன் மாதம் 7 ஆம் திகதி இலங்கை அணி நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதோடு எதிர்வரும் ஜுன் மாதம் 11 ஆம் திகதி கொழும்பு சுகததாச அரங்கில் இரண்டாவது கட்ட தகுதிகாண் போட்டியில் ஆடவுள்ளது.
லாவோஸ் போட்டிகள்
- மே 28 – இலங்கை எதிர் லாவோஸ் – பி.ப. 5.00 (இலங்கை நேரம்)
- மே 31 – இலங்கை எதிர் லாவோஸ் – பி.ப. 5.00 (இலங்கை நேரம்)
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<