‘அழுத்தத்தை கையாள்வதே முக்கியம்’: அஞ்செலோ மெதிவ்ஸ்

689

எதிர்வரும் உலகக் கிண்ணத்தில் அழுத்தமான சூழலை கடந்து வருவதே தமது அணியின் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 1996 உலக சம்பியனும், இரண்டு முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை முன்னேறிய அணியுமான இலங்கை, ஒருநாள் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருந்தே இம்முறை உலகக் கிண்ணத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த 2019 ஜனவரி தொடக்கம் இலங்கை அணி ஆடிய 22 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆறில் மாத்திரமே வென்றுள்ளது.

ஜீவன் மெண்டிஸின் கனவு நனவான உலகக் கிண்ணம்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய…

இலங்கை உலகக் கிண்ணக் குழாத்தில் இருக்கும் பல வீரர்களும் நீண்ட இடைவெளிக்குப் பின்னரே அணிக்குத் திரும்பியவர்களாவர். அணித் தலைவர் திமுத் கருணாரத்ன கூட, கடந்த வாரம் வரை, கடைசி உலகக் கிண்ணத்தில் இருந்து எந்த ஒரு ஒருநாள் சர்வதேச போட்டியிலும் ஆடியிருக்கவில்லை.

இந்நிலையில், தமது அணி கடந்த காலத்தை கைவிடவேண்டும் என்று அனுபவ வீரர் மெதிவ்ஸ் வலியுறுத்தியுள்ளார். ‘இந்தத் தருணத்தை அனுபவியுங்கள். அழுத்தமான சூழலில் இருந்து வெளிவருவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது’ என்று ஐ.சி.சி. இணையதளத்திற்கு மெதிவ்ஸ் குறிப்பிட்டார். ‘எம்மில் பலரும் இங்கிலாந்தில் விளையாடி உள்ளனர். எனவே, இந்த சூழல் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அழுத்தம் மற்றும் நிலைமையை கையாள்வது சவாலாக இருக்கப்போகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.  

கடந்த உலகக் கிண்ணத்தில் இலங்கை அணித் தலைவராக செயற்பட்ட மெதிவ்ஸ், சவாலை ஏற்று சுதந்திரத்துடன் தம்மை வெளிப்படுத்துவதற்கு சக வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

‘இது போன்ற ஒரு மிகப்பெரிய தொடரில், உங்களுக்குள் அதிகம் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு பதில், அதனை தழுவி நீங்கள் சுதந்திரத்துடன் ஆட வேண்டும். ஆம், உலகக் கிண்ணம் தான், அதில் வெற்றி பெறுதவற்கு சிறந்த திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதேநேரம், நீங்கள் சவாலை தழுவிக்கொள்ள வேண்டும். உங்களுக்குள் நீங்கள் அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டால், அது உங்களுக்கு சுமையாக மாறும். ஆனால், அதனைத் தழுவ முயற்சித்தால் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்து நாட்டுக்காக ஏதாவது சிறந்ததைச் செய்ய முடியும்’ என்று அவர் விபரித்தார்.  

தற்போது 31 வயதையடைந்துள்ள மெதிவ்ஸின் உடல்நிலை மற்றும் திறமை அடிப்படையில் கடந்த ஆண்டு அணியில் உள்ளேயும் வெளியேயும் இருந்து வந்தார். எவ்வாறாயினும் அவர் கடைசியாக ஆடிய ஐந்து 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கையின் பயிற்சிப் போட்டியில் 64 ஓட்டங்கள் உட்பட ஒரு சதம் மற்றும் இரண்டு அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.

தனது பொறுப்புக்கள் தொடர்பில் தெளிவாக இருக்கும் திமுத் கருணாரத்ன

முதல் 10 ஓவர்களுக்குள் சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தை பெறுவதும், வீரர்களை…

அண்மைய மாதங்களில் மெதிவ்ஸ் தனது துடுப்பாட்டத்தில் சோபித்து வருகிறார். குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துள்ளார். எனினும், உலகக் கிண்ணத்தில் தனது இடத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ‘ஒவ்வொரு போட்டியும் உங்களது திறமையை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பமாக உள்ளது. அதனைச் செய்தால், அணிக்கு சாதகமாக அமையும்’ என்று கூறினார்.  

லசித் மாலிங்கவுக்கு அடுத்து இலங்கை அணியின் அதிக அனுபவம் பெற்ற வீரராக உள்ள மெதிவ்ஸ், அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு தமது அனுபவத்தை வழங்குவதை நோக்காகக் கொண்டுள்ளார். ‘தொடர்ச்சியான திறமையை வெளிக்காட்டுவதே எனது இலக்காக உள்ளது. அதற்காக எனது உடற்தகுதியை பேணி என்னால் முடியுமான முழுமையை வழங்குவேன். எனது அனுபவத்தை இளம் வீரர்களுக்கு கடத்துவதும் சாதகமாக அமையும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அணி இன்று (27) தனது இரண்டாவது பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடுகிறது. அதற்குப் பின்னர் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் வரும் ஜூன் முதலாம் திகதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<