உலகக் கிண்ணத்துக்கு முன் உபாதைகளால் தவிக்கும் இங்கிலாந்து அணி

213
Getty image

உலகக் கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய சில வீரர்கள் தொடர்ந்து காயங்களுக்கு உள்ளாகி வருவதால், அந்த அணி மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.

இங்கிலாந்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (30) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதுவரை உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து, கடந்த உலகக் கிண்ணத்திற்குப் பிறகு பலமிக்க ஓர் அணியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது.

இலங்கை அணி தோல்விகளை பெற வரவில்லை – ஜெப்ரி வன்டர்செய்

இலங்கை கிரிக்கெட் அணியின் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான ஜெப்ரி வண்டர்செய்…

இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கின்ற முக்கிய அணிகளில் ஒன்றான இங்கிலாந்து அணியில் ஏராளமான சகலதுறை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட், ஜொப்ரா ஆர்ச்சர், மொயின் அலி என சகலதுறை வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியா அணியுடன் கடந்த சனிக்கிழமை (25) நடைபெற்ற பயிற்சி ஆட்டத்திற்கு முன் இடம்பெற்ற வலைப் பயிற்சிகளில் இங்கிலாந்து அணி கலந்துகொண்டது.

இதன்போது இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கனின் இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மோர்கன் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறி சிகிச்சைகளுக்குகாக சென்றார். முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அன்றைய தினம் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

இதேநேரம், இன்று (27) ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியிலும் மோர்கன் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இங்கிலாந்து அணியின் அண்மைக்கால வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்த மோர்கனின் இந்த திடீர் காயமானது இங்கிலாந்துக்கு மிகப் பெரிய நெருக்கடியையும், பின்னடைவையும் கொடுத்துள்ளது. ஒருவேளை மோர்கனின் காயம் குணமடையாவிட்டால் உலகக் கிண்ணத்தில் ஒருசில லீக் ஆட்டங்களில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், அவரது 4ஆவது ஓவரை வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு மாற்று வீரராக மைதானம் நுழைந்த ஜொப்ரா ஆர்ச்சர் களத்தடுப்பில் ஈடுபடும்போது காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்குப்பின் மீண்டும் களம் இறங்கினார்.

இருவரது காயங்களும் எந்த கட்டத்தில் இருப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. எனினும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 140 கிலோமீற்றர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள் முக்கிய வீரர்ககள் என்பதால் இங்கிலாந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, குறித்த போட்டியின் போது சுழற்பந்து வீச்சாளரான லியாம் டோசனின் வலது கையில் உள்ள மோதிர விரலின் தோல் கிழிந்தது. இதனால் அவர் துடுப்பாட வரவில்லை.

எனவே ஒரேநாளில் இங்கிலாந்து அணியின் மூன்று வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் அன்றைய தினம் மிகப் பெரிய பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் களத்தடுப்பு செய்ய வேறு வீரர் இல்லை. அப்போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய உதவி பயிற்சியாளருமான போல் கொலிங்வுட் களத்தடுப்பில் ஈடுபட்டார்.

சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை இளையோர் பாகிஸ்தானை வீழ்த்தினர்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையில்…

இது இவ்வாறிருக்க, மார்க் வுட்டுக்கு முன்னெச்சரிக்கையாக ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறிய காயமாக இருந்தால் அவருக்கு இன்றைய பயிற்சிப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, ஆர்ச்சரின் காயமும் அந்தளவு பாரதூரமானது அல்ல. அதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இம்முறை உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற 15 பேரில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, இது இங்கிலாந்து அணிக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<