உலகக் கிண்ண பயிற்சியின் போது மோர்கன், விஜய் சங்கருக்கு காயம்

315
India vs England
Getty

உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளின் முதல் நாளான நேற்று (24) இலங்கை, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் உபாதை மற்றும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இலங்கை வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ, இசுரு உதான, இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன், இந்திய வீரர்களான விஜய் சங்கர் மற்றும் ஷிகர் தவான் ஆகிய வீரர்கள் இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உலகக் கிண்ணத்திற்கு முன்னரே அவிஷ்க பெர்னாண்டோவுக்கு உபாதை

தென்னாபிரக்காவுக்கு எதிராக காடிப்பில் இன்று (24) நடைபெறும் உலகக் கிண்ண பயிற்சிப்…

இதில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நேற்று (24) கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் போது இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ, களத்தடுப்பில் ஈடுபடும் போது காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேநேரம், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான இசுரு உதானவுக்கு நேற்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் போது வலது மணிக்கட்டில் பந்து தாக்கியது. இதனால் அவர் துடுப்பெடுத்தாட வரவில்லை. எனினும் இந்த இரண்டு வீரர்களினதும் காயம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், உலகக் கிண்ணத்தில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவுஸ்திரேலியா அணியுடன் இன்று (25) நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்திற்கான வலைப் பயிற்சிகளில் இங்கிலாந்து அணி கலந்துகொண்டது. இதன்போது இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கனின் இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக வெளியேறி சிகிச்சைகளுக்குகாக சென்றார். முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஒருவேளை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் மோர்கன் உலகக் கிண்ணத்தில் ஒருசில லீக் ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், இன்று (25) நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியில் இயன் மோர்கன் விளையாடமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எனவே அவருக்குப் பதிலாக ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார்.

இங்கிலாந்து அணியின் அண்மைக்கால வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்த மோர்கனின் இந்த திடீர் காயமானது இங்கிலாந்துக்கு மிகப் பெரிய நெருக்கடியையும், பின்னடைவையும் கொடுத்துள்ளது.

இதேவேளை, நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் இன்று (25) நடைபெறவுள்ள பயிற்சி கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய வீரர்கள் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதில் இந்திய அணியின் சகலதுறை வீரரான விஜய் சங்கர் துடுப்பாட்ட பயிற்சியின் போது காயமடைந்தார். கலீல் அஹமட் வீசிய பந்து அவரது வலதுகையை வேகமாக தாக்கியது. இதனால் அவர் பயிற்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.

உலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ள அணித் தலைவர்கள் பற்றிய சிறப்புப் பார்வை

கிரிக்கெட் உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகக்…

இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும், இன்றைய பயிற்சி போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்குப் பதிலாக இன்றைய பயிற்சி ஆட்டத்தில் கே.எல் ராகுல் விளையாடலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐ.பி.எல் தொடரின் போது உபாதைக்குள்ளாகி அணிக்கு திரும்பிய கேதர் ஜாதவ் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் உலகக் கிண்ண இந்திய அணியில் இடம்பெற்ற இரண்டு சகலதுறை வீரர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன செய்வது என பதற்றத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ண வலைப் பயிற்சியின் போது இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவானின் தலைக் கவசத்தில் பந்து பலமாக தாக்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறிய அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், இன்று நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியில் அவர் விளையாடுவது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் டொம் லெதம் விளையாட மாட்டார் என அந்த அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

அவரது விரலில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமடையாத காரணத்தால் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் அவர் களமிறங்குவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்குப் பதிலாக டொம் பிளெண்டல் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<