நாம் உலகக் கிண்ணத்தில் நாளை விளையாடவும் தயார்: மோர்கன்

232
Getty Images

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இங்கிலாந்தின் லண்டனில் ஆரம்பமாக இன்னும் ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியிருக்கின்ற நிலையில், இந்த உலகக் கிண்ணத்தொடர் பற்றிய எதிர்பார்ப்புக்களும் அதிகரித்திருக்கின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைவரான இயன் மோர்கன் தமது உலகக் கிண்ண சீருடை (World Cup Jersey) வெளியிடும் நிகழ்வில் உலகக் கிண்ணத் தொடருக்கான தயார்படுத்தல்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.  

உலகக் கிண்ண இங்கிலாந்து அணியில் ஜொப்ரா ஆர்ச்சர் இணைப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB), உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான …….

இதில் மோர்கன், தாம் அண்மையில் இடம்பெற்று முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியினை 4-0 என வைட்வொஷ் செய்தது உலகக் கிண்ணத்திற்கான சிறந்த உத்வேகத்தை தந்திருந்ததாக குறிப்பிட்டு, இந்த ஒருநாள் தொடர் வெற்றி மூலம் உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தல்களில் இங்கிலாந்து அணி சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்திருந்தார்.  

“நாங்கள் எப்பொழுதும் இருப்பது போல (உலகக் கிண்ணத்திற்கும்) தயாராகியிருக்கின்றோம்.”

“இத்தருணத்தில் நாம் (உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான மிகப் பொருத்தமான நிலையிலும் உள்ளோம். எங்களுக்கு (உலகக் கிண்ணத்தில்) நாளையே விளையாட விருப்பமாக இருக்கின்றது.”

உலகக் கிண்ணத் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் மற்றும் அதன் சிரேஷ்ட தேர்வாளர் எட் ஸ்மித் ஆகியோர் உலகக் கிண்ணத் தொடருக்கான இறுதி இங்கிலாந்து வீரர்கள் குழாத்தினை தெரிவு செய்வதில் சில இறுக்கமான முடிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன்படி, உலகக் கிண்ண உத்தேச இங்கிலாந்து குழாத்தில் இடம்பெறாத ஜொப்ரா ஆர்ச்சர், வேகப் பந்துவீச்சாளரான டேவிட் வில்லியின் இடத்தினை உலகக் கிண்ண இறுதி இங்கிலாந்து வீரர்கள் குழாத்தில் பிரதியீடு செய்ததோடு, லியம் டாவ்சன் உலகக் கிண்ண உத்தேச குழாத்தில் உள்வாங்கப்பட்ட சகலதுறை வீரரான ஜோ டென்லியின் இடத்தினை எடுத்திருந்தார். அதிரடியான முறையில் இடம்பெற்ற இந்த மாற்றங்கள் குறித்தும் இயன் மோர்கன் கருத்து தெரிவித்தார்.

“அவையெல்லாம் மிகவும் இறுக்கமான முடிவுகள். ஜோ (டென்லி) மற்றும் டேவ் (டேவிட் வில்லி) ஆகியோர் அணியில் இடம்பெறாதது மிகவும் துரதிஷ்டவசமான விடயம். நான் கடைசி இரவு ஜோ மற்றும் டேவ் ஆகியோரிடம் பேசிய பொழுது இந்த உலகக் கிண்ணத் தொடர் மிகவும் நீண்டதாக இருப்பதால் நாம் உபாதைகளை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கின்றது – எனவே, அப்படியான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கே வாய்ப்பு உள்ளது அதில் சந்தேகங்கள் எதுவும் இல்லை என கூறியிருந்தேன்.”

கடைசியாக 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணியானது, எடிலைட் நகரில் இடம்பெற்ற குழுநிலைப் போட்டி ஒன்றில் பங்களாதேஷிடம் தோல்வியடைந்த காரணத்தினால் காலிறுதிப் போட்டிகளுக்கு கூட தகுதிபெற தவறியிருந்தது. எனினும், அந்த கசப்பான சம்பவத்திற்கு பின்னர் இன்று   மோர்கனினால் வழிநடாத்தப்படும் இங்கிலாந்து அணி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் காணப்படுகின்றது. அதோடு, இங்கிலாந்து அணி இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரினை வெல்ல எதிர்பார்க்கப்படும் நாடுகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.

பாகிஸ்தான் உலகக் கிண்ண குழாமில் 3 அதிரடி மாற்றங்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண ….

இவ்வாறாக அண்மைய நாட்களில் மிகவும் வெற்றிகரமான ஒரு நாள் அணிகளில் ஒன்றாக மாறியது தொடர்பிலும் இயன் மோர்கன் தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

“எங்களது சில விதிவிலக்கான நாட்கள், நாங்கள் எண்ணியதை விட மிகவும் சிறப்பாகவே அமைந்திருந்தன. (குறிப்பாக நாம் செய்த) சில உலக சாதனைகளை சொல்ல முடியும். இவற்றை நான் 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நினைத்தே பார்த்திருக்கவில்லை.”

மேலும், தமது அணியின் தற்போதைய நிலையினை முன்னுதாரணமாக கொண்டு இங்கிலாந்தின் எதிர்கால சந்ததியும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அச்சங்கள் எதுவுமின்றி விளையாடி சாதிக்கும் என மோர்கன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், இம்மாதம் 30ஆம் திகதி தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையில் லண்டன் ஓவல் மைதானத்தில் இடையில் நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகின்றது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<