த்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி

247
IPLT20.COM

ஐ.பி.எல். தொடரில் நேற்று (08) நடைபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் (qualifier) போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

ஹைதராபாத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாக முடியும் என்ற நிலையில் இரண்டு அணிகளும் தங்களுடைய முழுமையான பலத்தை போட்டியில் காண்பித்திருந்தன.

சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (07) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான

குறிப்பாக டேவிட் வோர்னர் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் இல்லாமல் ஹைதராபாத் அணி களமிறங்கியிருக்க, முன்னணி பந்து வீச்சாளரான ககிஸோ ரபாடா இல்லாமல் டெல்லி அணி களமிறங்கியிருந்தது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணிக்கு மார்ட்டின் கப்டில் அதிரடியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரிதிமன் சஹா ஆட்டமிழந்த போதும், மனிஷ் பாண்டேவுடன் இணைந்து கப்டில் ஓட்டங்களை வேகமாக குவித்தார். இவரின் அதிரடி துடுப்பாட்டம் காரணமாக ஹைதராபாத் அணி முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும், இதற்கு பின்னர் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஓட்டத்தை கட்டுப்படுத்தியதுடன் கப்டில், மிஷ்ரா வீசிய டெல்லி அணியின் 7 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், தடுமாறிய ஹைதராபாத் அணி, இறுதிக்கட்டத்தில் விஜய் சங்கர் மற்றும் மொஹமட் நபி ஆகியோரது அதிரடியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றறது.

ஹைதராபாத் அணி சார்பாக அதிகபட்சமாக கப்டில்  36 ஓட்டங்களையும், மனிஷ் பாண்டே 30 ஓட்டங்களையும் பெற, தங்களது பங்கிற்கு வில்லியம்சன் 28 ஓட்டங்கள், விஜய் சங்கர் 25 ஓட்டங்கள் மற்றும் மொஹமட் நபி 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் கிமோ போல் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பெடுத்தாடியது. குறிப்பாக இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ப்ரிதிவி ஷாவ், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு அதிகமான நெருக்கடியை வழங்கினார்.  இவரின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் முதல் ஆறு ஓவர்களில் டெல்லி அணி விக்கெட்டிழப்பின்றி 55 ஓட்டங்களை குவித்தது. தொடர்ந்து ப்ரிதிவ் ஷாவ் அதிரடியாக ஆடினாலும், தீபக் ஹுடாவின் பந்து வீச்சில் சிக்கர் தவான் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ஓட்டங்களுடன் வெளியேற, ப்ரிதிவ் ஷாவ் 38 பந்துகளுக்கு 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கொலின் மன்ரோவும் ஆட்டமிழக்க டெல்லி அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும், தனியாளாக தனது அதிரடியை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் போட்டியின் திசையை மாற்றத் தொடங்கினார். ஹைதராபாத் அணியின் பெசில் தம்பி வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகள் மற்றும் 19 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் என விளாசி போட்டியின் திசையை மாற்றினார்.  ஆனால், வெற்றிக்கு 5 ஓட்டங்கள் மாத்திரமே என்ற நிலையில், பண்ட் 21 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் விறுவிறுப்பாகிய இந்தப் போட்டியில் 6 பந்துகளுக்கு 5 ஓட்டங்கள் என்ற நிலையில், முதல் நான்கு பந்துகளில் ஒரு விக்கெட் இழக்கப்பட்டதுடன், 3 ஓட்டங்கள் பெறப்பட்டது.  இறுதியில் கிமோ போல் 5 ஆவது பந்தில் பௌண்டரி விளாசி டெல்லி அணியை இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஹைதராபாத் அணியின் பந்து வீச்சில், ரஷீட் கான் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, நாளை மறுதினம் (10) நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிபையரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 162/8 (20) – மார்ட்டின் கப்டில்  36, மனிஷ் பாண்டே 30, கேன் வில்லியம்சன் 28, வில்லியம்சன் 28, மொஹமட் நபி 20, கிமோ போல் 32/3

டெல்லி கெப்பிட்டல்ஸ் –165/8 (19.5) – ப்ரிதிவ் ஷாவ் 56 (38), ரிஷப் பண்ட் 49 (21), ரஷீட் கான் 15/3

முடிவு – டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க