மாலிங்கவின் அபார பந்து வீச்சின் மூலம் மும்பை அணிக்கு வெற்றி

767
IPLT20.COM

ஐ.பி.எல். தொடரில் நேற்று (05) நடைபெற்ற இறுதி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய முமு்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில், முதலிடத்துக்கு முன்னேறியதுடன், முதலாவது குவாலிபையரில் (தகுதிப் போட்டியில்) சென்னை அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

ப்ளே-ஓஃப் சுற்றை நோக்கி முன்னேறும் கொல்கத்தா அணி

ஐ.பி.எல். தொடரில் நேற்று (09) நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான…

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி முதலாவது பவர் ப்ளே ஓவர்களில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. க்ரிஸ் லின் அதிரடியாக துடுப்பெடுத்தாட கொல்கத்தா அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட்டிழப்பின்றி 49 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும், இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்த கொல்கத்தா அணி விக்கெட்டுகளை பறிகொடுத்ததுடன், அவர்களின் ஓட்ட எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து லசித் மாலிங்க அபார பந்து வீச்சை வெளிப்படுத்தி தனது இரண்டாவது ஓவரில் கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் என்ரே ரசல் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இவர்களின் விக்கெட்டுகள் சரிந்தமைக்கு பின்னர், கொல்கத்தா அணியின் ஓட்ட எண்ணிக்கை மேலும் குறையத் தொடங்கியது. எனினும், நிதிஷ் ராணா அதிரடியாக ஆட, மறுமுனையில் இரண்டாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரொபின் உத்தப்பா மந்தமான ஓட்ட வேகத்துடன் துடுப்பெடுத்தாடினார்.

இறுதியில் 20 ஓவர்களை முழுமையாக துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியால் 133 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக க்ரிஸ் லின் 29 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ரொபின் உத்தப்பா 47 பந்துகளில் வெறும் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 13 பந்துகளில் 26 ஓட்டங்களை விளாசினார். பந்து வீச்சில் லசித் மாலிங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர். 

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோரின் துடுப்பாட்ட பங்களிப்புடன் 16.1 ஓவர்களில் இலகுவாக வெற்றியிலக்கை அடைந்தது.  இந்த பருவகாலத்தில் தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தை பூர்த்திசெய்த ரோஹித் சர்மா 48 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற, சூர்யகுமார் யாதவர் 27 பந்துகளில் 46 ஓட்டங்களையும், குயிண்டன் டி கொக் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் பிரசித் கிரிஷ்னா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்துடன் முதலாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றது. அதேநேரம், கொல்கத்தா அணி தோல்வியடைந்ததன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ப்ளே-ஓஃப் வாய்ப்பை பெற்றுள்ளது. முக்கியமாக ஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளிகளுடன் ப்ளே-ஓஃப் செல்லும் முதல் அணியாகவும் ஹைதராபாத் அணி பதிவாகியது. 

இதேவேளை, ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதுடன், ப்ளே-ஓஃ சுற்றின் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. இதில், முதலாவது குவாலிபையர் போட்டி எதிர்வரும் 7ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக நடைபெறவுள்ள எலிமினேட்டர் (விலகல்) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி விஷாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ளது. 

மேலும், ஐ.பி.எல். தொடரில் அடுத்து நடைபெறவுள்ள ப்ளே-ஓஃப் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 133/7 (20), க்ரிஸ் லின் 41 (29), ரொபின் உத்தப்பா 40 (47), நிதிஷ் ராணா 26 (13), லசித் மாலிங்க 35/3, ஹர்திக் பாண்டியா 20/2, ஜஸ்பிரிட் பும்ரா 31/2

மும்பை இந்தியன்ஸ் – 134/1 (16.1), ரோஹித் சர்மா 55 (48), சூர்யகுமார் யாதவ் 46 (27), குயிண்டன் டி கொக் 30 (23), பிரசித் கிரிஷ்னா 22/1

முடிவு – மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<