தன்னம்பிக்கையுடன் உலகக் கிண்ணத்தை எதிர்கொள்வோம் – திமுத் கருணாரத்ன

600

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற துர்ப்பாக்கிய சம்பவத்தால் தான் உள்ளிட்ட இலங்கை வீரர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உலகக் கிண்ணம் போன்ற முக்கியமான தொடர்களில் விளையாடுகின்ற போது அனைத்து வீரர்களும் தமக்குள்ளே தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இங்கிலாந்தில் இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக்க கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

உலகக் கிண்ணத்தில் சுற்றாடல் காப்பிற்கான ஜேர்சியை பயன்படுத்தவுள்ள இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டு…

இந்த நிலையில், உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் ஆடை மற்றும் அனுசரணையாளர் என்பன நேற்று (03) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் பிறகு விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன,

”உயிர்த்த ஞாயிறன்று காலை நாட்டில் இடம்பெற்ற துர்ப்பாக்கிய சம்பவத்தினால் நாட்டிலுள்ள அனைவரும் அச்சத்துக்கு உள்ளாகினர். அதேபோல தான் கிரிக்கெட் வீரர்களும். எமது மனதிலும் அந்தப் பயம் இன்னமும் இருக்கின்றது. இதனால் அனைவரது அன்றாட வேலைகளும் தடைப்பட்டன.

அத்துடன், இந்த தாக்குதலினால் எமக்கு திட்டமிட்டபடி பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. ஆனாலும் நாம் கிடைத்த காலத்தைப் பயன்படுத்தி உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தோம்.

உலகக் கிண்ணம் போன்ற முக்கியமான தொடர்களில் விளையாடுகின்ற போது அனைத்து வீரர்களுக்கும் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். எமக்கான பயிற்சிகள் ஆரம்பமான நாளைவிட தற்போது அனைத்து வீரர்களினதும் மனநிலை நல்ல நிலையில் இருக்கின்றது என நான் நம்புகிறேன்.

உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நாம் அங்கு சென்று ஒருசில போட்டிகளில் விளையாடவுள்ளோம். அதனால் அங்குள்ள காலநிலைக்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். முதலில் ஸ்கொட்லாந்து அணியுடன் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளோம். அதன்பிறகு உலகக் கிண்ணத்துக்கான 2 பயிற்சி போட்டிகள் உள்ளது. அந்தப் போட்டிகளுக்கான பயிற்சிகளில் தான் தற்போது நாங்கள் ஈடுபட்டோம். எனவே, உலகக் கிண்ணத்தில் எமக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு போட்டியையும் வெற்றியுடன் முடிப்பதுதான எமது திட்டமாக உள்ளது. இம்முறை உலகக் கிண்ணத்தில் எமது அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என அவர் தெரிவித்தார்.

இதேநேரம், லசித் மாலிங்க மற்றும் குசல் ஜனித் பெரேரா குறித்து கருத்து வெளியிட்ட திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க பெரும்பாலும் ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்த உடனே அணியுடன் இணைந்துகொள்ள இங்கிலாந்துக்கு வருகை தரவுள்ளார். தற்போது பூரண குணமடைந்துள்ள குசல் ஜனித் பெரேரா வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இன்றும் எம்முடன் பயிற்சிகளில் ஈடுபட்டார் எனவே குசல் பெரேரா மீண்டும் விளையாடுவதற்கு தயாரகிவிடுவார் என அவர் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<