ஐ.பி.எல் தொடரிலிருந்து அனைத்து ஆஸி. வீரர்களும் வெளியேற்றம்

522
catchnews.com

உலகக்கிண்ண தொடருக்கான ஆஸி. குழாமில் இடம்பெற்ற வோர்னர், ஸ்மித், ஸ்டொய்னிஸ் மற்றும் பெஹ்ரென்ட்ரெப் ஆகிய வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக இடைநடுவில் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி நாடு செல்கின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் 12ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்குகின்ற நிலையில் ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக அமைகின்ற நிலையில் ஒவ்வொரு அணிகளுக்கும் ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

>>எதிர்பார்க்காத முடிவுகளை காட்டக்கூடிய இலங்கை அணிக்கு ஒற்றுமை தேவை – சமிந்த வாஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளை பொருத்தவரையில் குறித்த தொடருக்காக ஒவ்வொரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்யப்படுவர். அதில் வெளிநாட்டு வீரர்களுக்கு, அதாவது இந்திய நாட்டு வீரர்கள் தவிர்ந்த ஏனைய நாட்டு வீரர்களுக்கு கடுமையான மதிப்பு குறித்த தொடரில் வழங்கப்படும். இருந்தாலும் அவர்களது தங்களது நாட்டு கிரிக்கெட் சபையினுடைய அறிவுறுத்தல்களுக்கு அமைய விடுவிக்கப்பட்டே தொடரில் பங்கேற்பர்.

இந்நிலையில் ஒவ்வொரு அணிகளினாலும் கொள்வனவு செய்யப்படும் வெளிநாட்டு வீரர்கள், ஒரு போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் அடங்கிய அணியில் நான்கு வீரர்களுக்கு மாத்திரம் குறித்த போட்டியில் விளையாடுவதற்கு ஐ.பி.எல் தொடரின் விதிமுறைகளின்படி சந்தர்ப்பம் கிடைக்கும்.

இவ்வாறான நிலையில் குறித்த வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாட்டு கிரிக்கெட் சபைகளின் அழைப்புக்கு அமைய தொடரின் இடைநடுவில் வெளியேறுகின்ற சந்தர்ப்பங்களும் ஏற்படும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான உலகக்கிண்ண தொடர் இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறவுள்ள காரணத்தினால் இவ்வருட ஐ.பி.எல் தொடரில் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் இடைநடுவில் வெளியேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

அந்த வகையில் அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஐந்து வீரர்கள் ஐந்து அணிகளினால் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டனர். இதில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் அழைப்பினால் உலகக்கிண்ண குழாமில் இடம்பெற்ற இவர்கள் நால்வரில் இருவர் தற்போது தொடரின் இடைநடுவில் வெளியேறியுள்ள நிலையில் மீதமுள்ள இருவரும் இன்றையதினம் நடைபெறவுள்ள போட்டியுடன் தாயகம் திரும்பவுள்ளனர்.

உலகக்கிண்ண தொடருக்காக அவுஸ்திரேலிய அணியானது வீரர்களுக்கு விசேட பயிற்சி முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. குறித்த பயிற்சி முகாமானது நாளை மறுதினம் (02) ஆரம்பமாகவுள்ளது. இதற்காவே ஐ.பி.எல் தொடரிலிருந்து வீரர்கள் தாயகம் அழைக்கப்பட்டுள்னர்.

ஸ்டீவ் ஸ்மித்

பந்து சேதப்படுத்திய விவகாரம் தொடர்பிலான தடையிலிருந்து மீண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிவந்தார். இந்நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பங்குபற்றுவதற்காக இன்றைய தினம் (30) நடைபெறவுள்ள ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான போட்டியுடன் நாடு திரும்புகின்றார்.

>>வோர்னரின் அசத்தல் துடுப்பாட்டத்தால் ஹைதராபாத் அணிக்கு வெற்றி

இவ்வருடம் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 319 ஓட்டங்களைக் குவித்துள்ளார். மேலும் சில போட்டிகளுக்கு அணியின் தலைவராக செயற்பட்டு அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

டேவிட் வோர்னர்

டேவிட் வோர்னரும் பந்து சேதப்படுத்திய விவகாரம் தொடர்பிலான தடையிலிருந்து மீண்டு சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரராக விளையாடி வந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி தனது துடுப்பாட்ட வல்லமையை ஐ.பி.எல் தொடர் மூலமாக நிரூபித்து காட்டியிருந்தார். இவர் நேற்று (29) பஞ்சாப் அணியுடன் நடைபெற்ற போட்டியில் துடுப்பாட்டத்தில் அதிரடிகாட்டி வெற்றியை பெற்றுக்கொடுத்துவிட்டு தாயகம் திரும்பியுள்ளார்.

இவ்வருடம் 12 போட்டிகளில் விளையாடியிருந்த வோர்னர் 692 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவரையில் நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் வோர்னரே முதலிடத்தில் காணப்படுகின்றார். இவ்வருடத்துக்கான இவரின் துடுப்பாட்ட சராசரி 69.2 வீதமாகும். இவரது ஐ.பி.எல் வரலாற்றில் ஆண்டு அடிப்படையில் இதுவே அதிகூடிய துடுப்பாட்ட சராசரி என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கஸ் ஸ்டொய்னிஸ்

இவ்வருட ஐ.பி.எல் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒரு சகலதுறை வீரராக விளையாடியிருந்தார். இன்று (30)  நடைபெறவுள்ள ராஜஸ்தான் அணியுடனான போட்டியுடன் உலகக்கிண்ண தொடருக்காக பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக நாடு திரும்பவுள்ளார்.

இவ்வருடம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் துடுப்பாட்டத்தில் 211 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜேசன் பெஹ்ரென்ட்ரெப்

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இவர் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டார்.

இவ்வருடம் 5 போட்டிகளில் விளையாடிய இவர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். நேற்று முன்தினம் (28) கொல்கத்தா அணியுடன் நடைபெற்ற போட்டியுடன் தொடரை விடுவித்து உலகக்கிண்ண தொடருக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக ஆஸி. பயணமாகியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<