ஸ்கொட்லாந்து அணி சகலதுறை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

389
Image Courtesy - Twitter - Scotland

ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கொன் டி லேங் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (18) உயிரிழந்துள்ளார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் என்பது பொழுதுபோக்கான ஒரு விளையாட்டாகும். தற்கால உலகில் கிரிக்கெட் விளையாட்டிற்கு தனியான மரியாதை உண்டு. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் ஒரு பொழுதுபோக்காக இந்த கிரிக்கெட் விளையாட்டு காணப்படுகின்றது.

2015 உலகக் கிண்ண ஞாபகத்தை மீட்டெடுக்கும் சங்காவின் துடுப்பாட்ட சாதனை

இவ்வாறு கிரிக்கெட் உலகில் நாளுக்கு நாள் புதிய புதிய கிரிக்கெட் வீரர்கள் அறிமுகம் பெற்றுக்கொண்டே வருகின்றார்கள். இந்நிலையில் வயது முதிர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இந்த உலகை விட்டும் பிரிந்து சென்று கொண்டே இருக்கின்றார்கள். அதிலும் தற்கால உலகில் இளம் வயதுடைய கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வீராங்கனைகள் ஏதாவது ஒரு சம்பவம் மூலம் உலகை விட்டும் பிரிந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறான சம்பவம் ஒன்று மீண்டுமொரு தடவை கிரிக்கெட் உலகில் நிகழ்ந்துள்ளது. ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணியினுடைய பந்துவீச்சு சகலதுறை வீரரான கொன் டி லேங், மூளைக்கட்டி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (18) உயிரிழந்துள்ளார்.

1981ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி தென்னாபிரிக்காவின் பெல்வில்லி எனும் பிரதேசத்தில் பிறந்தார் கொன் டி லேங். பின்னர் சிறுவயதிலேயே ஸ்கொட்லாந்து நாட்டுக்கு தனது குடும்பத்துடன் சென்று அந்நாட்டு குடியுரிமையை பெற்றுக்கொண்டார். சிறுவயதிலிருந்து கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் தனது திறமையின் மூலம் ஒரு பந்துவீச்சாளராகவும், துடுப்பாட்ட வீரராகவும் மாறினார்.

1997ஆம் ஆண்டு முதல் முறையாக முதல்தர போட்டி மூலமாக கிரிக்கெட் உலகிற்கு தடம் பதித்தார். அதில் தனது திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்ட அவர் 2007ஆம் ஆண்டு டி20 போட்டியில் முதல் முறையாக விளையாடியிருந்தார். தொடர்ச்சியாக அதில் திறமைகளை வெளிக்காட்டி வந்த அவருக்கு, 2015ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் கன்னி சர்வதேச அறிமுகம் கிடைத்தது. இறுதியாக 2017 ஜனவரி 20ஆம் திகதி அயர்லாந்து அணியுடன் டி20 சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார்.

Image Courtesy – Twitter – Scotland

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் இவருக்கு ஒருநாள் அறிமுகம் கிடைத்தது. இவரது மரணத்திற்கு முன்னர் இறுதியாக 2017ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி பபுவா நியூகினியா அணியுடன் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார்.

13 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்த இவர் துடுப்பாட்டத்தில் 123 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், பந்துவீச்சில் 16 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். இதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் 8 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்த இவர் துடுப்பாட்டத்தில் 3 இன்னிங்சுகளில் 35 ஓட்டங்களை குவித்திருந்ததுடன், பந்துவீச்சில் 8 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

இவ்வாறான நிலையில் கடந்த ஆண்டு (2018) ஒக்டோபர் மாதம் இவருக்கு மூளைப்பகுதியில் கட்டி ஒன்று இருப்பதாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருந்தாலும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி தனது 38ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

கொன் டி லேங் ஸ்கொட்லாந்து, பொலன்ட், கேப் கோப்ராஸ், ஈகில்ஸ், ப்ரீ ஸ்டேட், நைட்ஸ், நோர்த்தம்டொன்ஷியர், மேற்கு மாநில பொலன்ட் போன்ற அணிகளுக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் தெரிவு குறித்து அசந்த டி மெல்

4 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்கொட்லாந்து அணிக்காக மொத்தமாக 25 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடைய மரண செய்தியை தொடர்ந்து முன்னனி கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்துலக கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<