இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான, 15 பேர் அடங்கிய உத்தேச இங்கிலாந்து குழாத்தினை இன்று (17) வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்தொடரை நடாத்தும் நாடான இங்கிலாந்து, கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை வெல்ல எதிர்பார்க்கப்படும் முக்கிய அணிகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. இவ்வாறனதொரு நிலையில் உலகக் கிண்ணத் தொடருக்காக வெளியிடப்பட்டுள்ள உத்தேச இங்கிலாந்து குழாத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பந்துவீச்சு சகலதுறை வீரரான ஜொப்ரா ஆர்ச்சரிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பாக். இளையோர் அணி அறிவிப்பு
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள பாகிஸ்தான் இளையோர்…
மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாக கொண்ட ஆர்ச்சர், பல்வேறு நாடுகளின் உள்ளூர் T20 தொடர்களில் சிறப்பாக செயற்பட்டதன் மூலம் இங்கிலாந்தின் தேசிய அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தினை கடந்த மாதம் பெற்றுக் கொண்டார். ஜொப்ரா ஆர்ச்சர் உலகக் கிண்ணத்திற்கான உத்தேச இங்கிலாந்து குழாத்தில் இடம்பெறாது போனாலும், உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் ஒரு நாள் தொடருக்கான 17 பேர் அடங்கிய இங்கிலாந்து குழாத்தில் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் உடன் இணைந்து இடம்பெற்றிருக்கின்றார்.
தற்போது உலகக் கிண்ணத்திற்கான உத்தேச குழாத்தினை அறிவித்துள்ள இங்கிலாந்து அணி, உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள இறுதி இங்கிலாந்து வீரர்கள் குழாத்தினை பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறும் ஒரு நாள் தொடரை அடுத்து, மே மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்ச்சர், ஜோர்டன் போன்றோர் பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் ஜொலிக்கும் சந்தர்ப்பத்தில் உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து குழாத்தில் இணையும் வாய்ப்பு காணப்படுகின்றது.
கடந்த நான்கு வருடங்களாக ஒரு நாள் போட்டிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக உள்ள இங்கிலாந்தின் உத்தேச உலகக் கிண்ண குழாத்தில் அதன் பந்துவீச்சுத்துறை வேகப் பந்துவீச்சாளர்களான டேவிட் வில்லி, லியம் ப்ளன்கெட், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் டொம் கர்ரன் ஆகியோரினால் பலப்படுத்தப்படுகின்றது. இம்முறை உலகக் கிண்ணம் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளங்களில் இடம்பெறும் காரணத்தினாலேயே இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து வேகப் பந்துவீச்சாளர்களை உலகக் கிண்ண குழாத்தில் இணைத்திருக்கின்றது.
கடைசியாக 2009ஆம் ஆண்டிலேயே ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சுழல் பந்துவீச்சாளரான ஜோ டென்லி, உலகக் கிண்ணத்திற்கான உத்தேச இங்கிலாந்து குழாத்தில் மேலதிக சுழல்பந்து சகலதுறை வீரராக இணைக்கப்பட்டுள்ளார். இதேநேரம், இங்கிலாந்தின் உத்தேச உலகக் கிண்ண குழாம் அதன் பிரதான சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீத், பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர் மொயின் அலி ஆகியோருடன் பலம் பெறுகின்றது.
உலகக் கிண்ண உத்தேச குழாத்திலும் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்துறையினை வழமை போன்று அதன் தலைவர் இயன் மோர்கன், ஜொஸ் பட்லர், ஜேசன் ரோய், ஜோ ரூட் மற்றும் ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆகியோர் வலுப்படுத்துகின்றனர். அதேநேரம், மேலதிக துடுப்பாட்ட வீரராக அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ணத்தின் போது பலம் சேர்க்கின்றார்.
இவர்களோடு இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோர் சகலதுறை வீரர்களாக பலம் சேர்க்கின்றனர்.
பங்களாதேஷ் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு: சகீபுக்கு அவசர அழைப்பு
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகீப்…
உலகக் கிண்ணத் தொடரினை தென்னாபிரிக்க அணியுடன் மே மாதம் 30ஆம் திகதி இடம்பெறும் போட்டியுடன் ஆரம்பிக்கும் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் ஒரு நாள் தொடரிற்கு மேலதிகமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு T20 போட்டி கொண்ட தொடர், அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் என்பவற்றிலும் விளையாடுகின்றது.
இந்த இரு தொடர்களுக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து குழாமும் இங்கிலாந்து கிரிக்கெட் தேர்வாளர்களினால் உலகக் கிண்ண உத்தேச குழாத்துடன் சேர்த்து அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த இரு தொடர்களிலும் சிரேஷ்ட வீரர்களான மொயின் அலி, ஜோனி பெயர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொஸ் பட்லர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் சேம் பில்லிங்ஸ் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் இரு தொடர்களுக்குமான இங்கிலாந்து குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியுடனான ஒரு போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் மே மாதம் 03ஆம் திகதி விளையாடுவதோடு, பாகிஸ்தான் அணியுடனான ஒரு போட்டி கொண்ட T20 தொடரில் மே மாதம் 05ஆம் திகதி மோதுகின்றது.
இதன் பின்னர் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், மே மாதம் 08ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து உத்தேச குழாம் – ஜேசன் ரோய், இயன் மோர்கன் (அணித்தலைவர்), ஜோனி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ டென்லி, ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், லியம் ப்ளன்கெட், மார்க் வூட், டொம் கர்ரன், ஆதில் ரஷீத், டேவிட் வில்லி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இங்கிலாந்து ஒரு நாள் குழாம் – ஜேசன் ரோய், இயன் மோர்கன் (அணித்தலைவர்), ஜோனி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ டென்லி, ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், லியம் ப்ளன்கெட், மார்க் வூட், டொம் கர்ரன், ஆதில் ரஷீத், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டன், ஜொப்ரா ஆர்ச்சர்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 போட்டி/அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி போன்றவற்றிற்கான இங்கிலாந்து குழாம் – இயன் மோர்கன் (அணித்தலைவர்), ஜொப்ரா ஆர்ச்சர், சேம் பில்லிங்ஸ், டொம் கர்ரன், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் ப்ளன்கெட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ரோய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க் வூட்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<