இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டியில் நடைபெற்று வரும் நான்கு அணிகள் மோதும் வலைப்பந்து சுற்றுத் தொடரில் நேற்று (09) நடைபெற்ற இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் இலங்கை சிரேஷ்ட அணிகள் வெற்றிகளை பெற்றுள்ளன.
இலங்கை சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அணிகளை வீழ்த்திய கென்யா, மலேசியா
சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (08) ……..
நேற்று முன்தினம் (08) ஆரம்பமான இந்தப் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இலங்கை சிரேஷ்ட அணி, கென்யாவிடம் தோல்வியினை தழுவியிருந்ததுடன், இலங்கை கனிஷ்ட அணி மலேசியாவிடம் தோல்வியடைந்திருந்தது.
இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் இலங்கை சிரேஷ்ட அணி, இலங்கை கனிஷ்ட அணியை எதிர்கொண்டு வெற்றியை தக்கவைத்ததுடன், கென்யாவை வீழ்த்தி மலேசிய அணி வெற்றி பெற்றிருந்தது.
இலங்கை சிரேஷ்ட அணி எதிர் இலங்கை கனிஷ்ட அணி
இலங்கை கனிஷ்ட அணிக்கு எதிரான போட்டியில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை சிரேஷ்ட அணி 73-34 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.
போட்டியின் முதல் காற்பகுதியில் இலங்கை சிரேஷ்ட அணி 22-08 என்ற புள்ளிகளால் முன்னிலை பெற்றது. தொடர்ந்து கனிஷ்ட அணிக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் முன்னேறிய சிரேஷ்ட அணி முதற்பாதியில் 40-19 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை அடைந்தது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை சிரேஷ்ட அணி, மூன்றாவது காற்பகுதி நிறைவில் 60 புள்ளிகளை பெற்றதுடன், நான்காவது காற்பகுதி நிறைவில் 73 புள்ளிகளை குவித்து, 73-34 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
மலேசியா எதிர் கென்யா
மலேசியா மற்றும் கென்யா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் மலேசிய அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன. குறிப்பாக முதல் காற்பகுதியில் 12-11 என்ற புள்ளிகள் கணக்கில் மலேசிய அணி முன்னிலைபெற, இரண்டாவது காற்பகுதியில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் 23-19 புள்ளிகள் என்ற கணக்கில் மலேசிய அணி முன்னிலை பெற்றது.
Photo Album : Sri Lanka v Kenya | Quadrangular Netball Tournament 2019
பின்னர், இடம்பெற்ற மூன்றாவது காற்பகுதியிலும் அதே நான்கு புள்ளிகள் முன்னிலையுடன் மலேசிய அணி 34-30 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னேற, நான்காவது காற்பகுதியில் கென்யா அணி, மலேசிய அணியின் முன்னிலையை குறைக்க தொடங்கியது. இறுதியில் 44-42 என்ற 2 புள்ளிகள் வித்தியாசத்தில் மலேசிய அணி வெற்றியை தக்கவைத்தது.
இதேவேளை, இன்றைய தினம் (10) இரண்டு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இலங்கை சிரேஷ்ட அணி, மலேசிய அணியை (பிற்பகல் 03.00 மணி) எதிர்கொள்ளவுள்ளதுடன், இலங்கை கனிஷ்ட அணி, கென்யா அணியை (மாலை 05.00 மணி) எதிர்கொள்ளவுள்ளது. குறித்த இரண்டு போட்டிகளையும், www.thepapare.com இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக கண்டுகளிக்க முடியும்.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<