பெங்களூரில் சிக்ஸர் மழை பொழிந்த என்ரே ரசல்

192
IPLT20.COM

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், என்ரே ரசலின் தனித்துவமான அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்திருந்த பெங்களூர் அணி, தங்களுடைய சொந்த மைதானத்தில் கொல்கத்தா அணியை நேற்று எதிர்கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கடந்த போட்டிகளில் பிரகாசிக்க தவறியிருந்த விராட் கோஹ்லி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் தங்களது அதிரடியை மீண்டும் ஞாபகப்படுத்தியிருந்தனர்.

உலகக் கிண்ண இலங்கை அணி குறித்து தேர்வுக் குழுத் தலைவர் சூசகம்

விராட் கோஹ்லி 49 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாச, மறுமுனையில் டி வில்லியர்ஸ் 32 பந்துகளுக்கு 63 ஓட்டங்களை விளாசினார். இதில், விராட் கோஹ்லி ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வீரர்கள் பட்டியலில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னாவினை பின்தள்ளி முதலிடம் பிடித்தார். இவர், மொத்தமாக 5110 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், ரெய்னா 5086 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

பின்னர், மிக சவாலான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணிக்கு க்ரிஸ் லின், ரொபின் உத்தப்பா மற்றும் நித்திஷ் ரானா ஆகியோர் ஓட்டங்களை குவித்து வலுவளித்தனர். எனினும், கொல்கத்தா அணியால், ஓட்ட வேகத்தை அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. கடந்த போட்டிகளில் மோசமாக பந்து வீசிய பெங்களூர் அணி பந்து வீச்சாளர்கள் 16 ஆவது ஓவர் வரை கொல்கத்தா அணியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

இதன்படி, கொல்கத்தா அணி 24 பந்துகளுக்கு 66 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் என்ரே ரசல் களமிறங்கினார். எனினும், 17 ஆவது ஓவரில் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க, 3 ஓவர்களில் 53 ஓட்டங்கள் கொல்கத்தா அணிக்கு தேவைப்பட்டது. இதன் போது பந்து வீசிய மொஹமட் சிராஜ், துடுப்பாட்ட வீரருக்கு அச்சுறுத்தலான முறையில் பந்து வீசியதால், அவருக்கு பந்து வீச நடுவர்களால் தடை விதிக்கப்பட்டது.

இதன் பின்னர் தனது தனித்துவமான அதிரடியை வெளிப்படுத்திய ரசல், மார்கஸ் ஸ்டொயிஸின் ஓவருக்கு 2 சிக்ஸர்களை விளாசியதுடன், 19 ஆவது ஓவரில் (டிம் சௌதி) 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 29 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை இலகுவாக்கினார். இவர், 13 பந்துகளில் 7 சிக்ஸர்கள் ஒரு பௌண்டரியினை விளாசியிருந்தார். இறுதி ஓவரில் ஒரு ஓட்டம் தேவைப்பட சுப்மன் கில் குறித்த ஓட்டத்தினை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில், பெங்களூர் அணி தங்களுடைய தொடர்ச்சியான 5 ஆவது தோல்வியை நேற்று சந்தித்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் – 205/3 (20) – விராட் கோஹ்லி 84(49), வில்லியர்ஸ் 63(32), நித்திஷ் ரானா 22/1

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 206/5 (19.1) – என்ரே ரசல் 48(13), க்ரிஸ் லின் 43(31), பவன் நெகி 22/2

முடிவு – கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க