சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி ஐ.பி.எல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
12 ஆவது ஐ.பி.எல் டி.20 தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றியீட்டிய டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, அடுத்ததாக இன்று (31) ஞாயிறுக்கிழமை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை சென்னையில் எதிர்கொள்ளவுள்ளது.
இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாகவே காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி விலகியிருந்த நிலையில், சென்னை அணியின் மற்றொரு வெளிநாட்டு வீரரான இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் வில்லியும் நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகும் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள்
ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த லுங்கி….
இதுவரை இந்தியா வராத டேவிட் வில்லி, அடுத்த சில தினங்களில் சென்னை அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டேவிட் வில்லியின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால் அவர் நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
இது தொடர்பில் டேவிட் வில்லி கருத்து வெளியிடுகையில், ”எனது மனைவி இரண்டாவது குழந்தை பிரசவத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றாள். எனவே இந்த நேரத்தில் நான் மனைவியுடன் இருக்க வேண்டும். இது மிகவும் கடினமான முடிவுதான். ஆனாலும், கிரிக்கெட்டைவிட எனது குடும்பத்துக்காக முதலில் முன்னுரிமை கொடுப்பதற்கு தீர்மானித்தேன். கடந்த இரண்டு வருடங்களாக இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றேன். எனவே இம்முறை உலகக் கிண்ணத்திலும் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் இருப்பதாக” அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் முதல் தடவையாக விளையாடியிருந்த 29 வயதான டேவிட் வில்லி, அந்த அணிக்காக 3 போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, துடுப்பாட்டத்தில் பலமிக்க அணியாக வலம்வந்து கொண்டிருக்கும் சென்னை அணி, வேகப்பந்து வீச்சில் சற்று பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணியில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
மொத்தம் 8 வெளிநாட்டு வீரர்களை கொண்டிருந்த சென்னை அணியில் இருந்து இரண்டு வெளிநாட்டு வீரர்கள் விலகியுள்ளதால் அந்த அணியில் இடம்பெற்றிக்கும் வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.
இந்த இருவரின் இடத்திற்கான மாற்று வீரர்கள் குறித்த எந்த அறிவிப்பையும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இதுவரை வெளியிடவில்லை. சென்னை அணியில் தற்பொழுது இருக்கும் ஒரே வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் டுவைன் பிராவோ மட்டும் தான்.
டேவிட் வில்லி மற்றும் நிகிடிக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை இணைத்துக்கொள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நடவடிக்கை எடுக்கும் என ஐ.பி.எல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<