உலகக் கிண்ணத்திற்காக பாகிஸ்தான் தொடரில் ஆர்ச்சரை ஒத்திகை பார்க்கவுள்ள இங்கிலாந்து

501
Image Courtesy - GETTY IMAGES

மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாக கொண்ட, இளம் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

யார் இந்த ஜொப்ரா ஆர்ச்சர்?

வெறும் 23 வயதேயான ஜொப்ரா ஆர்ச்சர், மேற்கிந்திய தீவுகளின் பார்படோஸில் பிறந்த போதிலும் பல்வேறு நாடுகளினுடைய உள்ளூர் T20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டி வந்த ஒருவராக கடந்த காலங்களில் காணப்பட்டிருந்தார்.

150kmph வேகத்தில் பந்து வீசும் இளம் இந்திய வீரர்

ஐ.பி.எல். தொடரில் இம்முறை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும்…

ஜொப்ரா ஆர்ச்சரின் அதீத திறமையை கருத்திற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் சபை, வீரர்களுக்கான அதனது வதிவிட விதிமுறைகளை சற்று தளர்த்தியிருந்தது. இதனால், ஆர்ச்சர் இம்மாத முற்பகுதியில் இங்கிலாந்தின் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொண்டார்.

அதேநேரம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தாம் விளையாடிய கடைசி பத்து ஒரு நாள் தொடர்களிலும் வென்றிருப்பதோடு, ஒரு நாள் அணிகளின் தரவரிசையில் முதல் இடத்திலும் காணப்படுகின்றது. இதனால், இங்கிலாந்து இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை வெல்ல எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.

இப்படியான ஒரு உறுதியான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்திற்கான தமது வீரர்கள் குழாத்தில் பாரிய மாற்றங்கள் எதனையும் செய்யாது என கூறப்படுகின்ற போதிலும் ஆர்ச்சரிற்கு இங்கிலாந்து அணியினை உலகக் கிண்ணத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு வாய்ப்பு காணப்படுகின்றது.

அதன்படி ஆர்ச்சரை உலகக் கிண்ணத்தில் களமிறக்க எதிர்பார்த்துள்ள இங்கிலாந்து அணி, அதன் முதல் கட்டமாக எதிர்வரும் மே மாதம் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக நடைபெறும் பாகிஸ்தான் அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆர்ச்சரிற்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் அவரது திறமையினை பரீட்சித்து பார்க்கவிருக்கின்றது.

“(இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான) ட்ரேவர் பெய்லிஸ் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒரு நாள் தொடரினை அடுத்து, அவர் (ஆர்ச்சர்) எப்படி இருப்பார் என்பதை பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் பார்ப்போம் எனக் கூறினார். நாம் அதையே செய்யப்போகின்றோம்“ என இங்கிலாந்து அணியின் தலைவரான இயன் மோர்கன் அண்மையில் வழங்கிய செவ்வி ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இங்கிலாந்து அணித்தலைவரின் கருத்தின்படி, ஜொப்ரா ஆர்ச்சர் பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் தனது கன்னி சர்வதேச போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், ஆர்ச்சரிற்கு பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயற்படுவதன் மூலம் உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பமும் உள்ளது  என மோர்கன் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

“பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடர் நடைபெற்று முடியும் வரை, எமக்கு உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து அணியினை அறிவிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே, நாம் இது தொடர்பான அவதானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதோடு, அவர் (ஆர்ச்சர்) பாகிஸ்தான் தொடரில் எப்படி செயற்படுவார் என்பதையும் பார்க்கவிருக்கின்றோம்.“

இதுவரையில் 14 உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜொப்ரா ஆர்ச்சர் 21 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருப்பதோடு பிக் பேஷ், ஐ.பி.எல். என 82 உள்ளூர் T20 போட்டிகளில் ஆடி 105 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க