டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வீரர்களுக்கான ஜேர்சி இலக்கம் விரைவில்

350

விளையாட்டு உலகைப் பொறுத்தமட்டில் முன்னணி நட்சத்திர வீரர்களின் ஜேர்சி இலக்கங்கள் எப்போதும் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீரர்களின் இலக்கத்துடன் அந்த ஜேர்சியை வாங்கி அணிந்து கொள்வது வழக்கம். இவ்வாறு வீரர்களின் இலக்கங்களுடனான ஜேர்சியை வாங்கி அணிவது கால்பந்து விளையாட்டில் பிரபலமாக இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை, கிரிக்கெட் ரசிகர்களை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகளிலும் வீரர்களுக்கான ஜேர்சி இலக்கங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

தனது விருதுகள் அனைத்தையும் நலத்திட்டத்திற்காக கொடுக்கும் முரளிதரன்

இலங்கை அணியின் சுழல் ஜாம்பவனாகிய முத்தையா முரளிதரன் டெஸ்ட், ஒரு நாள், T20I என சர்வதேசப்…

இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஆரம்பமாகவுள்ள .சி.சியின் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் கீழ் நடைபெறும் ஆஷஸ் கிண்ணத்துடன் இப்புதிய நடைமுறையைப் பின்பற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் கிரிக்கெட் வீரர்கள் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் ஜேர்சியில் பயன்படுத்துகின்ற இலக்கங்களை டெஸ்ட் ஜேர்சியிலும் பெறுவார்கள்.

உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு இங்கிலாந்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆஷஸ் கிண்ணம் ஆரம்பமாகவுள்ளது. இதில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக முன்மொழியப்பட்ட பரிந்துரைகளின் ஓர் அங்கமாக, டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஜேர்சிகளின் பின்பக்கத்தில் இலக்கங்களுடன் விளையாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவுஸ்திரேலிய அணி இதனை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்றுவரும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்ற வீரர்கள் இலக்கங்களைக் கொண்ட ஜேர்சிகளுடன் விளையாடி வருகின்றனர். ஆனால் ஏனைய நாடுகளில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. இதன்படி, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஷெபில்ட் ஷீல்ட் கிரிக்கெட்டில் பின்பற்றுகின்ற விதிமுறைகளின் படி, குறித்த இலக்கங்கள் இரட்டை இலக்கத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சுமார் 140 வருடங்களைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அதாவது 1877ஆம் ஆண்டு முதல் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து விளையாடி வருகின்றனர். அதேநேரம், டெஸ்ட் போட்டிகளுக்கான தொப்பி மற்றும் மார்பில் பதியப்பட்ட இலச்சினையுடனான டெஸ்ட் இலக்கம் என்பன சில வருடங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்ற வீரர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதில் அவுஸ்திரேலிய உள்ளிட்ட சில நாடுகள், வீரர்களின் கைகளிலும் அந்த டெஸ்ட் இலக்கத்தை பதிந்துள்ளன.

முதல் T20I போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட இலங்கை

கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது T20I போட்டியில் இலங்கை…

எனினும், டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு ஒருசில மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், கிரிக்கெட் விளையாட்டின் முன்னோர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்த மாற்றங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை பாதிக்கும் என இந்த முறைமைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இருப்பினும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், புதிய மாற்றங்கள் கொண்டுவருவது தற்போதுள்ள இளம் ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்த வீரர்களை அடையாளம் காண உதவுகின்றது. அதன் காரணமாகவே ஷெபில்ட் ஷீல்ட் கிரிக்கெட்டில் ஜேர்சி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது, இளம் நட்சத்திரங்கள் தங்களுக்கு விருப்பமான நட்சத்திர வீரர்களை சிறிது எளிதாகக் கண்டறிய உதவுவதற்கு ஒரு நல்ல அறிகுறியாகும். இது கொஞ்சம்கூட தொந்தரவு இல்லை. அது ரசிகர்களுக்கு உதவுகிறது என்றால் அது ஒரு நல்ல விடயம் என்று நான் நினைக்கிறேன் அவர் கூறினார் .

இடதுகை துடுப்பாட்ட வீரரான டிராவிஸ் ஹெட், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் தனது ஜேர்சியில் 62 என்ற இலக்கத்துடன் விளையாடி வருகின்றார். இனிவரும் காலங்களில் டெஸ்ட் ஜேர்சியிலும் அவர் அதே இலகத்தைப் பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க