தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை T20I குழாம் அறிவிப்பு

1686

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (14) அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருடன் இலங்கை வரவுள்ள ஹத்துருசிங்க

இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை T20I குழாத்தில் ப்ரியமல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகிய புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சுரங்க லக்மால், இசுரு உதான, ஜெப்ரி வெண்டர்சே, அஞ்செலோ பெரேரா மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் மீண்டும் T20I குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ப்ரியமல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய வீரர்கள் ஏற்கனவே தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருவதுடன், டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ T20I குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கும் அஞ்செலோ பெரேரா சுமார் 4 வருடங்களுக்கு பின்னர் இலங்கை T20I குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார். இவர், 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20I போட்டியில் இறுதியாக விளையாடியிருந்தார். அதேநேரம், இறுதியாக 2016ம் T20I போட்டியில் விளையாடியிருந்த ஜெப்ரி வெண்டர்சே மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன், ஐசிசியின் தடைக்கு உள்ளாகியிருந்த அகில தனன்ஜயவும் குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்.

இவர்களை தவிற நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I குழாத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த இசுரு உதான மற்றும் கமிந்து மெண்டிஸ் மீண்டும் தங்களது இடத்தை பிடித்துள்ளதுடன், சுரங்க லக்மால் ஒருவருட காலத்துக்கு பின்னர் T20I அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தாமை காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்ட தினேஷ் சந்திமால், T20I  குழாத்திலும் நீக்கப்பட்டுள்ளார். இவருடன் உபாதைக்குள்ளாகியுள்ள அஞ்செலோ மெதிவ்ஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் உபாதைக்குள்ளாகிய குசல் பெரேரா ஆகியோரும் T20I குழாத்தில் இணைக்கப்படவில்லை.

நாம் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை: இசுரு உதான

அதேநேரம், நியூசிலாந்து தொடரில் பிரகாசிக்க தவறிய சீகுகே பிரசன்ன, அசேல குணரத்ன, தசுன் சானக ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுடன், உபாதைக்குள்ளாகிய வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார, நுவான் பிரதீப் மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்படவில்லை. இவர்களுடன் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஓசத பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித மற்றும் உபுல் தரங்க ஆகியோரும் T20I குழாத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இலங்கை T20I குழாம்

லசித் மாலிங்க (தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், அஞ்செலோ பெரேரா, தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், ப்ரியமல் பெரேரா, திசர பெரேரா, சுரங்க லக்மால், இசுரு உதான, அசித பெர்னாண்டோ, அகில தனன்ஜய, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகன்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க