இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 சர்வதேச தொடரின் பின்னரான புதிய தரவரிசையை ஐ.சி.சி இன்று (12) வெளியிட்டதற்கமைய இங்கிலாந்து அணி தரவரிசையில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு நீண்ட நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி அங்கு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 டெஸ்ட், 5 ஒருநாள் சர்வதேச மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகள் போன்ற அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியிருந்தது.
மேற்கிந்திய தீவுகளை தும்சம் செய்த இங்கிலாந்து வைட்வொஷ் வெற்றி
மேற்கிந்திய தீவுகளை 71 ஓட்டங்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து, அந்த அணியுடனான…
டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என கைப்பற்றியிருந்த நிலையில், ஒருநாள் தொடரின் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட ஒருநாள் தொடர் 2-2 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில் இறுதி தொடரான டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வைட் வொஷ் செய்திருந்தது. நேற்று முன்தினம் (10) இறுதி டி20 போட்டியானது நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் (12) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டி20 அணிகள் மற்றும் வீரர்களுக்கான புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
அணிகளின் தரவரிசை
3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் இங்கிலாந்து அணி 118 புள்ளிகளுடன் தரவரிசையில் ஐந்தாமிடத்தில் காணப்பட்டதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி 101 புள்ளிகளுடன் ஏழாமிடத்தில் காணப்பட்டது.
குறித்த தொடரை வைட் வொஷ் செய்து கைப்பற்றிய இங்கிலாந்து அணி தற்போது புதிய அணிகளுக்கான தரவரிசையில் 3 புள்ளிகளை மேலதிகமாக பெற்று மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேவேளை தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி காணப்பட்ட புள்ளிகளுடன் 3 புள்ளிகளை மேலதிகமாக இழந்து தொடர்ந்தும் ஏழாமிடத்திலேயே நீடிக்கின்றது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரே அடுத்த டி20 தொடராக அமைந்துள்ளது.
அணிகளின் புதிய டி20 சர்வதேச தரப்படுத்தல்
- பாகிஸ்தான் – 135 புள்ளிகள்
- இந்தியா – 122 புள்ளிகள்
- இங்கிலாந்து – 121 புள்ளிகள்
- அவுஸ்திரேலியா – 120 புள்ளிகள்
- தென்னாபிரிக்கா – 118 புள்ளிகள்
- நியூஸிலாந்து – 116 புள்ளிகள்
- மேற்கிந்திய தீவுகள் – 98 புள்ளிகள்
- ஆப்கானிஸ்தான் – 93 புள்ளிகள்
- இலங்கை – 86 புள்ளிகள்
- பங்களாதேஷ் – 77 புள்ளிகள்
- ஸ்கொட்லாந்து – 61 புள்ளிகள்
- ஜிம்பாப்வே – 55 புள்ளிகள்
- நெதர்லாந்து – 52 புள்ளிகள்
- நேபாளம் – 43 புள்ளிகள்
- ஐக்கிய அரபு இராச்சியம் – 43 புள்ளிகள்
- ஹொங்கொங் – 42 புள்ளிகள்
- அயர்லாந்து – 37 புள்ளிகள்
- ஓமான் – 27 புள்ளிகள்
வீரர்களின் தரவரிசை (துடுப்பாட்டம்)
வெளியிடப்பட்டுள்ள புதிய துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையின் படி தொடரில் மொத்தமாக 117 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளரான ஜொனி பெயர்ஸ்ட்டோ 38 நிலைகள் உயர்ந்து தற்போது 55 ஆவது நிலைக்கு வந்துள்ளார். அத்துடன் அவர் 445 தரவரிசை புள்ளிகளை பெற்று வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளையும் பதிவு செய்துள்ளார்.
டைய்லரின் இரட்டை சதத்துடன் டெஸ்ட் தொடர் நியூசிலாந்து வசம்
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது…
இங்கிலாந்து அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான சேம் பில்லிங்ஸ் 56 நிலைகள் உயர்ந்து 339 புள்ளிகளுடன் 84 ஆவது நிலைக்கு வந்துள்ளார். மேலும் ஜோ ரூட் 3 நிலைகள் உயர்ந்து 592 புள்ளிகளுடன் 21 ஆவது நிலைக்கு வந்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சார்பாக இளம் வீரர் நிக்கொலஸ் பூராண் 18 நிலைகள் உயர்ந்து 353 புள்ளிகளுடன் 79 ஆவது நிலைக்கு வந்துள்ளார். இதேவேளை குறித்த தொடரில் விளையாடாத எவின் லூவிஸ் ஐந்தாமிடத்திலிருந்து எட்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீரர்களின் தரவரிசை (பந்துவீச்சு)
சுழல் பந்துவீச்சில் எதிரணியினருக்கு சவாலாக விளங்கிய ஆதில் ரஷீட் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து தற்போது 709 தரவரிசை புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் குறித்த தொடர் மூலமாக முதன்முறையாக 700 இற்கும் மேற்பட்ட தரவரிசை புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தொடரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி தொடர் ஆட்ட நாயகன் விருது வென்ற கிறிஸ் ஜோர்டன் 4 இடங்கள் உயர்ந்துள்ளதுடன் இத்தொடர் மூலமாக வாழ்நாள் அதிகூடிய புள்ளிகளையும் பெற்று 642 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்திற்கு வந்துள்ளார். மேலும் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்ட நாயகள் விருது வென்ற டேவிட் வில்லி 7 நிலைகள் உயர்ந்து 640 புள்ளிகளுடன் 11 ஆவது நிலையை அடைந்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பாக இடதுகை சுழல் பந்துவீச்சாளரான பேபியன் எலென் 33 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் (408) 72 ஆவது நிலையை அடைந்துள்ளதுடன், வேகப்பந்துவீச்சாளரான சில்டொன் கொட்ரெல் 15 நிலைகள் உயர்ந்து 79 ஆவது நிலையை அடைந்து குறித்த தொடர் மூலம் வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளையும் (393) பெற்றுள்ளார்.
சகலதுறை வீரர்களுக்காக தரவரிசையில் இந்த தொடர் மூலமாகவும் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<