ஐ.சி.சியின் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறேன்: நுவன் சொய்ஸா

457
Nuwan zoysa

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடிக்கெதிரான கோவையின் மூன்று சரத்துகளை மீறியதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றிலும் மறுப்பதாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பந்துவீச்சு பயிற்சியாளருமான நுவன் சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையில் எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்காமல் ஐ.சி.சியின் குற்றச்சாட்டுகளை மாத்திரம் கருத்திற்கொண்டு தனது சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தியமை தொடர்பில் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நுவன் சொய்சா மீது ஐ.சி.சி. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு

ஐ.சி.சி.யின் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை மீறி..

சர்வதேசப் போட்டியொன்றை ஆட்டநிர்ணயம் செய்ய முயன்றமை அல்லது முடிவில் அல்லது வேறெந்த விடயங்களில் தவறான முறையில் தாக்கம் செலுத்த முயன்றமை, சக தொழில்முறை வீரர்களை அல்லது பயிற்சியாளர்களை இவ்வாறு ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுமாறு வினவியமை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடிக்கெதிரான பிரிவுக்கு போட்டி நிர்ணயிப்பாளர்களாக இருக்கக் கூடியவர்களை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நுவன் சொய்ஸா மீது கடந்த ஒக்டோபர் மாதம் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, 14 நாட்களுக்குள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு நுவன் சொய்ஸா பதிலளிக்க வேண்டும் என ஐ.சி.சி அறிவித்திருந்ததுடன், பந்துவீச்சுப் பயிற்சியாளராகக் கடமையாற்றியிருந்த அவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணைகளையும் முன்னெடுக்காமல் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது சேவையை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் ஊடகங்களைத் தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று அண்மையில் (28) கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய நுவன் சொய்ஸா, எனக்கு எதிராக ஐ.சி.சியினால் ஊழல் மோசடிக்கெதிரான கோவையின் மூன்று சரத்துகளை மீறியதாக குற்றப் பத்திரிகையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் முற்றாக மறுக்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருபோதும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை. அதேபோல, ஆட்டநிர்ணயத்திலும் ஈடுபடவில்லை.

எனினும், கடந்த வருட நடுப்பகுதியில் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்தவொரு விசாரணைகளையும் முன்னெடுக்காமல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் எனது சேவையை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோல, குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த போதிலும், அப்போது நிர்வாகக் குழு கலைக்கப்பட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட்டின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் இருந்தார். ஆனால் தற்போது புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதால் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.

எனக்கு எதிராக ஐ.சி.சியினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான் பேசுவதற்கு விரும்பவில்லை. ஏனெனில், எனக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக நான் நீதிமன்றத்தை நாடுவதற்கு தீர்மானித்துள்ளேன். எனவே, அதுதொடர்பில் எந்தவொரு தகவலையும் தற்போது வழங்க முடியாது.

ICC யினால் சனத் ஜனசூரியவுக்கு இரண்டு ஆண்டு தடை

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஊழல் தடுப்பு…

இதனிடையே, இலங்கையின் முன்னாள் பயிற்சியாளர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவைச் சேர்ந்த சூதாட்ட முகவர் ஒருவரை சந்தித்தமை தொடர்பில் ஐ.சி.சிக்கு அறிவிக்கத் தவறியமை தான் நான் செய்த குற்றமாகும். ஆனால், அதுதொடர்பில் ஐ.சி.சிக்கு நீண்ட அறிக்கையொன்றை வழங்கியுள்ளேன்.

எனவே, நான் ஆட்ட நிர்ணயத்திலும், சூதாட்டத்திலும் ஈடுபடவில்லை. அதேபோல, கிரிக்கெட்டை வைத்து முறைகேடான முறையில் ஒரு சதமும் சம்பாதிக்கவில்லை. எனக்கு பாடசாலை செல்கின்ற 2 பிள்ளைகள் உள்ளனர். எனது குடும்பத்தை நான் தான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் தற்போது எனது சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகிறேன்.

அதேபோல, ஐ.சி.சியின் நடத்தை தொடர்பிலும் ஒருசில வார்த்தைகளை முன்வைக்க விரும்புகிறேன். நான் கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் உள்ள உயர் செயற்றிறன் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற போது ஐ.சி.சியின் அதிகாரிகள் என்று சொல்லி 2 பேர் என்னை சந்தித்து வற்புறுத்தலுடன் கொழும்பு சினமென்ட் கிரேனட் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். அதேபோல, என்னிடம் இருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் பலாத்காரமாக எடுத்துக் கொண்டனர். அதற்குமுன் நான் எனது மனைவியுடன் சிங்களத்தில் பேசிக் கொண்டிருந்த போது என்னை ஆங்கிலத்தில் கதைக்குமாறு வற்புறுத்தி இருந்தனர். அதன்பிறகு என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று கெமராக்களைப் பொறுத்தி என்னிடம் நீண்ட நேரம் விசாரணை செய்தார்கள். அந்த நேரத்தில் எனக்கு மொழிபெயர்ப்பாளர் அல்லது சட்டத்தரணி ஒருவரின் சேவையையோ பெற்றுக் கொடுக்கவில்லை. ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு என்னை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியிருந்தனர். அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். மறுபுறத்தில் அவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்வியும் எனக்கு புரியவில்லை.

உலகக்கிண்ண வாய்ப்பு கிட்டுமா? – மனம் திறந்தார் உபுல் தரங்க

இலங்கை அணியின் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரரான…

இந்த தருணத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் என்னுடைய தொழிலை இல்லாமல் செய்வதாக அச்சுறுத்தியிருந்தனர். ஆனால் இந்த விசாரணைகளில் இரகசியம் பேணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவத்தால் தற்போது நான் தொழிலை இழந்துவிட்டேன் என்றார்.  

இந்த சம்பவத்தை அடுத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எனக்கு எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. தற்போது தொழில் இல்லாமல் இருப்பதால் எனது குடும்பம் நிர்க்கதியாகியுள்ளது. நான் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடினேன். அதேபோல கிரிக்கெட் விளையாடி கோடிக் கணக்கில் உழைக்கவில்லை.

இதேபோல இன்னும் சில வீரர்கள் இவ்வாறான விசாரணைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள் என்று எனக்கு தெரியும். எனவே எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்து தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டால் 5 வருட சிறைத்தண்டணை: ஹரீன்

விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்கள் ஆட்டநிர்ணயம்..

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான நுவான் சொய்ஸா, ஒருசில சந்தர்ப்பங்களில் இலங்கை ஏ அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக் கடமையாற்றியுள்ளார். 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த நுவான் சொய்ஸா, அதற்கு முன்னர் இந்தியாவின் கோவா அணியின் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை அணியின் ஐ.சி.சி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இதில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடிப் பிரிவின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த குற்றச்சாட்டில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜயசூரியா மற்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரரான தில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்கள் போட்டித் தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்திருந்தது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க