குசல் மெண்டிசின் துடுப்பாட்ட திறனை புகழும் ஸ்டீவ் ரிக்ஸன்

1738

இலங்கை அணி,  தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் குசல் பெரேராவின் அபார சதத்தோடு (153) ஒரு விக்கெட்டினால் த்ரில்லர் வெற்றி பெற்றது. இதன் பின்னர், தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குசல் மெண்டிஸும் அறிமுக துடுப்பாட்ட வீரரான ஓஷத பெர்னாந்துவும் மூன்றாம் விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக பகிர்ந்த 163 ஓட்டங்களால் இலங்கை அணி தென்னாபிரிக்காவை டெஸ்ட் தொடரில் 2-0 என வைட்வொஷ் செய்து தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றை வென்ற முதல் ஆசிய அணியாக மாறியது.

இலங்கை அணியின் இந்த அபார டெஸ்ட் தொடர் வெற்றி தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்டீவ் ரிக்சன், இரண்டாம் டெஸ்ட் போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அந்த முக்கிய இணைப்பாட்டத்திற்கு பங்களிப்பு செய்த வீரர்களில் ஒருவரான குசல் மெண்டிஸ் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில், எதிர்காலத்தில் மெண்டிஸிடம் நாம் எவ்வளவு விடயங்களை பார்க்கின்றோமோ அந்தளவிற்கு அவரை பாராட்டுவோம் எனக் கூறினார்.

ஆயிரம் ஓட்டங்களை தாண்டுவதை இலக்காக வைத்துள்ள குசல் மெண்டிஸ்

“தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்க அனைவரையும் ஆறுதலாகவும், பொறுமையாகவும் இருக்கும் படி அறிவுறுத்தினார். இதனாலேயே, வீரர்கள் தலையில் பாரம் எதனையும் வைத்துக்கொள்ளாமல் களத்தில் போய் விளையாடினர். குசல் மெண்டிஸ் எதிர்காலத்தில் நிச்சயமாக ஒரு சிறந்த கிரிக்கெட் (class cricketer) வீரராக வருவார். மெண்டிஸ் மிக அற்புதமான சில துடுப்பாட்ட தெரிவுகளுடன் விளையாடியிருந்தார். இதைவிட உலகில் இவர்கள் (இலங்கை) வேறு எங்கும் நன்றாக விளையாடியதை நான் பார்த்ததில்லை. குசல் மெண்டிஸிடம் சிறிது கிரிக்கெட் கம்பீரத்தை நான் பார்க்கின்றேன். எங்களுக்கு அவரை பொறுமையாகவும், ஆறுதலாகவும் தயாராக்க வேண்டியுள்ளது. அதன் போதே, எம்மால் அவரது கிரிக்கெட் திறனை பார்க்க முடியும்“ என ஸ்டீவ் ரிக்சன் மேலும் பேசும் போது தெரிவித்திருந்தார்.

“இந்த சிறுவனுக்கு (மெண்டிஸிற்கு) இப்போது 24 வயது மட்டுமே ஆகின்றது. அவரை இன்னும் அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும். உங்களுக்கு அவரிடம் இருக்கும் எந்த தனிப்படுத்தப்பட்ட விடயத்தையும் எடுக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த சிறுவனிடம் விசேடமான ஏதோ ஒன்று இருக்கின்றது. காலம் செல்லச்செல்ல அந்த விஷேடமான விடயம் பெரிதாகி கொண்டு செல்வதையே அவதானிக்க முடியும்“ என ஸ்டீவ் ரிக்சன் மேலும் கூறினார்.

குசல் மெண்டிஸ் இலங்கை அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒருவர் என்பது உணரப்பட்டது 2016ஆம் ஆண்டிலேயே, அப்போது இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மிகப் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் மெண்டிஸ் 176 ஓட்டங்களை குவித்ததுடன், இலங்கை அணி குறித்த போட்டியில் வெற்றி பெறவும் உதவியிருந்தார்.

இதேநேரம் மெண்டிஸ் தனது இளம் வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் 36.65 என்ற துடுப்பாட்ட சராசரியை காட்டியிருப்பதால் அவருக்கு தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள இன்னும் காலம் காணப்படுகின்றது.

“அவர் இன்னும் வளர்ச்சிப் பருவத்திலேயே இருப்பதோடு, சில நேரங்களில் தன்னைத்தானே சந்தேகத்துக்கொள்ளும் பழக்கத்தினையும் கொண்டிருக்கின்றார். ஆனால், உண்மை என்னவெனில் அவரிடம் கிரிக்கெட் கம்பீரம் இருக்கின்றது. காலம் செல்லும் போது மக்கள் அவரிடம் இன்னும் பெரிய விடயங்களை பார்ப்பார்கள். அதாவது, (எதிர்காலத்தில்) நாம் அவரை எவ்வளவு பார்ப்போமோ அவ்வளவு பாராட்டுக்களை வழங்குவோம்.“

மெண்டிஸ் ஒருபுறமிருக்க, ஸ்டீவ் ரிக்சன் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தனது கன்னி அரைச்சதம் மூலம் உதவிய 26 வயதான ஓஷத பெர்னாந்துவையும் பாராட்டியிருந்தார்.

“மற்றைய பையனும் (பெர்னாந்துவும்) அற்புதமாக செயற்பட்டிருந்தார். அவர் மிகவும் அழகிய முறையில் துடுப்பாடியதாக நினைக்கின்றேன்.“

மேலும் ரிக்சன் நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுடனான டெஸ்ட் தொடர் தோல்விகளின் பின்னர் இலங்கை அணி தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடர் ஒன்றினை கைப்பற்றியது மகிழ்ச்சி தரும் விடயமாக உள்ளது என்றார்.

இலங்கையின் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியை போற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்

“நியூசிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் நான் மாற்றங்கள் எதனையும் அவதானிக்கவில்லை. எனினும், அவுஸ்திரேலியாவில் இருந்து தென்னாபிரிக்கா வரை வீரர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதேநேரம் நாம் அவர்களை தயார்படுத்திய விதமும் அவர்களை சதூர்யமானவர்களாக மாற்றியிருக்கின்றது“ என இலங்கை அணி தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் வெற்றி பெற காரணமான மாற்றங்களில் ஒன்றை குறிப்பிட்டிருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<