இலங்கை கிரிக்கெட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு

619

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா முதற்தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனினும், அவரை எதிர்த்து ரணதுங்க தரப்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இறுதி நேரத்தில் உப தலைவர் பதவிக்காக களமிறங்கிய கே. மதிவாணன் மீண்டும் உப தலைவராகத் தெரிவானார்.  

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு வருட காலப்பகுதிக்காக தலைவர், உப தலைவர் இரண்டு பேர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர் மற்றும் உப பொருளாளர் ஆகிய 7 பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான தேர்தல் இன்று (21) காலை 10.30 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிப்பு

இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில்…..

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்த மாகாண, மாவட்ட மற்றும் விளையாட்டு சங்கங்களைச் சேர்ந்த 142 வாக்குகள் இம்முறை தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தது. எனினும், 140 வாக்குகள் மாத்திரமே பதிவுசெய்யட்டன.

இதில் சட்டசிக்கல்கள் காரணமாக தென் மாகாண கிரிக்கெட் சங்கம், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் களுத்துறை பீ.சி.சி உள்ளிட்ட சங்கங்கங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட்டின் புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு சம்மி சில்வாவும், ஜயந்த தர்மதாசவும் போட்டியிட்டிருந்தனர்.

இதில் சம்மி சில்வா 83 வாக்குகளையும், ஜயந்த தர்மதாச 56 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். இதன்படி, 27 மேலதிக வாக்குகளினால் சம்மி சில்வா வெற்றி பெற்று, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

புதிய தலைவராகத் தெரிவான சம்மி சில்வா, இதற்குமுன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளராக செயற்பட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகத்தில் பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.

நாலந்த கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சம்மி சில்வா, இலங்கையின் முன்னாள் முதல்நிலை ஸ்குவாஷ் வீரரும், தெற்காசிய கனிஷ்ட ஸ்குவாஷ் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றவராவார்.  

இலங்கை கிரிக்கெட் வளர்ச்சிக்கு நான்கு வருட வேலைத்திட்டம்

பெப்ரவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை…..

அத்துடன், கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் தலைவராகச் செயற்பட்ட அவர், ஜிம்கானா கழகத்தின் தலைவராகவும் CH&FC மற்றும் குயின்ஸ் கழகங்களின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவை பின்தள்ளி ரவீன் விக்ரமரத்ன 82 வாக்குகளையும், கே. மதிவாணன் 80 வாக்குகளையும் பெற்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர்களாக தெரிவாகினர். எனினும், உப தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அர்ஜுன ரணதுங்கவுக்கு 72 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பதவிக்காக போட்டியிட்ட மொஹான் டி சில்வா 96 வாக்குளைப் பெற்று மீண்டும் செயலாளராகத் தெரிவாகியதுடன், அவரை எதிர்த்து போட்டியிருந்த நிஷாந்த ரணதுங்க 45 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவினார்.

2003 மற்றும் 2004 காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளராக கடமையாற்றியுள்ள மொஹான் டி சில்வா, அதனைத்தொடர்ந்து 2004 மற்றும் 2005 காலப்பகுதியில் தலைவராகவும், 2013 மற்றும் 2014 காலப்பகுதியில் உப தலைவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ஈஸ்ட்மன் நாரன்கொடவை வீழ்த்தி லசந்த விக்ரமசிங்க வெற்றியீட்டினார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<