இலங்கையின் முதலாவது கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்துவைப்பு

392
Image Courtesy - SLC

கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கின்ற இலங்கை அணியின் வரலாற்று சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தலைமையில் குறித்த அருங்காட்சியகம் புதன்கிழமை (20) காலை இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்திற்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை அணி தொடர்பில் வெளியான காணொளிக்கு விளையாட்டு அமைச்சரின் பதில்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் பொய்யான………..

இலங்கை கிரிக்கெட் அணியின் மகத்தான சாதனைகள் மற்றும் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்த்தைப் பெற்றுக் கொண்ட நாள் முதல் இன்று வரை கைப்பற்றிய அனைத்து வெற்றிக் கிண்ணங்கள், சாதனை வீரர்களின் புகைப்படங்கள், வீரர்களினால் கையொப்படமிடப்பட்ட பந்து மற்றும் துடுப்பு மட்டைகள் உள்ளிட்ட பல அரிய விடயங்கள் அங்கு பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, 1996 ஆம் ஆண்டில் இலங்கை அணி பெற்றுக் கொண்ட உலகக் கிண்ணம், 2014 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட டி-20 உலகக் கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் பெற்றுக் கொண்ட வெற்றிக் கிண்ணங்கள் என்பன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணிக்கு அன்று முதல் இன்று வரை தலைவர்களாக கடமையாற்றிய வீரர்களின் பெயர் குறிப்பிடப்பட்ட நினைவுப் படிவமும், இதுவரை இலங்கை அணிக்காக டெஸ்ட் வரம் பெற்றுக் கொண்ட வீரர்களின் நினைவுப் படிவமும் பிரத்தியேகமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, உண்மையில் இது மனதை தொடுகின்ற நல்லதொரு முயற்சியாகும். இலங்கையிலுள்ள மக்களுக்கு கிரிக்கெட் என்பது மதம் போன்றது. இலங்கை அணி விளையாடுகின்ற போட்டியொன்றை இன்றும்கூட எமது மக்கள் பஸ்களிலும், முச்சக்கர வண்டிகளிலும் இருந்துகொண்டு கேட்பார்கள். கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் தொடர்பில் கசப்பான விடயங்களை கேட்க முடிந்தாலும், எமது மக்கள் இன்றும் கிரிக்கெட்டை விரும்புகின்றனர். 1996 உலகக் கிண்ணப் போட்டிகளின் போது சமூகவலைத்தளங்கள் இல்லாமல் போனது மிகப் பெரிய புண்ணியமாகும். இன்று இலங்கை அணியின் பின்னடைவுக்கு சமூகவலைத்தளங்களும் முக்கிய காரணமாகும்.

  • Image Courtesy - SLC
  • Image Courtesy - SLC
  • Image Courtesy - SLC

எனவே இந்த இடத்திற்கு வந்தபோது இலங்கை அணி இவ்வளவு வெற்றிக் கிண்ணங்களை வென்றுள்ளது என்பதை நினைத்து பூரிப்படைந்தேன். ஆகவே எங்களுடைய கிரிக்கெட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நாம் இலங்கை கிரிக்கெட்டுக்கும், வீரர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்போம் என தெரிவித்தார்.  

குறித்த நிகழ்வில் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணியின் தலைவர் லசித் மாலிங்க, முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்புமிக்க அதிகாரி சூலானந்த பெரேரா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, பிரதான ஒருங்கிணைப்பு அதிகாரி ஜெரம் ஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிப்பு

இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில்…….

தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக இந்த அருங்காட்சியகம் திறக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அருங்காட்சியகத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<