இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிப்பு

324

இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடவுள்ள இரண்டு தரப்பினர்களின் இணக்கப்பாட்டிற்கு அமைய நாளைய தினம் (21) இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அனுமதி வழங்கியது.

இலங்கை கிரிக்கட் நிறுவனத் தேர்தலுக்காக தாம் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோர் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜயசுந்தர, அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று (20) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கவுள்ள ரணதுங்க தரப்பினர்

ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை….

இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக இன்றைய தினம் இரண்டு தரப்பினரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன், மொஹான் டி சில்வா செயலாளர் பதவிக்கும், ரவீன் விக்ரமரத்ன உப தலைவர் பதவிக்கும் போட்டியிடுவதற்கு தடையில்லை என்று இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் சார்பில் ஆஜரான அரச மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் சன்ஜய ராஜரத்னம் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

இதில் மொஹான் டி சில்வாவினால் தலைவர் பதவிக்கு தாக்கல் செய்திருந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்துக்கு தெரிவித்த அரச மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல், அவருக்கு செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தடையில்லை என அறிவித்தார்.

அதேபோன்று, உப தலைவர் மற்றும் உப செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தாக்கல் செய்திருந்த ரவீன் விக்ரமரத்னவின் மனுவும் தேர்தல் செயற்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய மொஹான் டி சில்வா செயலாளர் பதவிக்கும், ரவீன் விக்ரமரத்ன உப தலைவர் அல்லது உப செயலாளர் பதவிக்கும் போட்டியிடுவதற்கு சந்தரப்பம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் அடுத்த மாதம் 21ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இலங்கை கிரிக்கட் நிறுவனத் தேர்தலில் தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய மூன்று பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட மொஹான் டி சில்வா மற்றும் உப தலைவர் பதவி உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட ரவீன் விக்ரமரத்ன ஆகியோரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த 8ஆம் திகதி அறிவித்திருந்தது.

இதனையடுத்து மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்ததுடன், அது தொடர்பிலான விசாரணைகள் கடந்த 18ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சட்டசிக்கல்கள் காரணமாக கடந்த 10 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (21) காலை 10.00 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வளர்ச்சிக்கு நான்கு வருட வேலைத்திட்டம்

பெப்ரவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை…..

இதில் தலைவர் பதவிக்காக திலங்க சுமதிபால தரப்பில் முன்னாள் பொருளாளரான சம்மி சில்வாவும், ரணதுங்க தரப்பில் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஜயந்த தர்மதாச மற்றும் முன்னாள் உப தலைவரான கே. மதிவாணன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இரண்டு உப தலைவர் பதவிக்கு 6 பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 1996 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க மற்றும் அதே உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக விளையாடிய பிரமோத்ய விக்ரமசிங்க ஆகியோர் இப்பதவிக்காக போட்டியிடுகின்ற முக்கிய வேட்பாளர்களாவர்.

அத்துடன், செயலாளர் பதவிக்கு நால்வர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ரணதுங்க தரப்பில் இருந்து முன்னாள் செயலாளரான நிஷாந்த ரணதுங்கவும், திலங்க சுமதிபால தரப்பிலிருந்து பந்துல திசாநாயக்க, சம்மி சில்வா மற்றும் மொஹான் டி சில்வா ஆகியோர் இப்பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.

பொருளாளர் பதவிக்கு ரணதுங்க தரப்பிலிருந்து ரிஸ்மன் நாரங்கொடவும், நளீன் விக்ரமசிங்கவும் போட்டியிடவுள்ளதுடன், சுமதிபால தரப்பிலிருந்து லசந்த விக்ரமசிங்க, ரவீன் விக்ரமரத்ன மற்றும் சம்மி சில்வா ஆகியோர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ள மாகாண, மாவட்ட மற்றும் விளையாட்டு சங்கங்கள் என 147 வாக்குகளில் 142 வாக்குகள் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுக் கொண்டுள்ளன. இதில் தென் மாகாண கிரிக்கெட் சங்கம், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் களுத்துறை பீ.சி.சி உள்ளிட்ட சங்கங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதிகளான சந்திரா ஜயதிலக்க தலைமையிலான தேர்தல் செயற்குழு தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், தேர்தலை மேற்பார்வை செய்வதற்காக இலங்கை தேர்தல் ஆணையகத்தின் 10 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை அணி தொடர்பில் வெளியான காணொளிக்கு விளையாட்டு அமைச்சரின் பதில்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் பொய்யான…..

இது இவ்வாறிருக்க, தேர்தலுக்கான சகலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குருந்துவத்த பொலிஸ் நிலையம் முன்னெடுக்கவுள்ளது. இதற்காக 100 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், தேவையேற்படும் பட்சத்தில் விசேட அதிரடிப்படையின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே, இம்முறை தேர்தலில் ரணதுங்க தரப்பில் உப தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள 1996 உலகக் கிண்ண சம்பியன் அணியின் தலைவரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க நீர்கொழும்பு விளையாட்டுக் கழகம் சார்பாகவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால, மேல் மாகாண கிரிக்கெட் சங்கம் சார்பாகவும் தத்தமது வாக்குகளை பதிவுசெய்யவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<