போராட்ட வெற்றிக்கு பின், புதிய வரலாற்று சாதனையை எதிர்பார்த்துள்ள இலங்கை

2871

வறட்சியான நிலம் ஒன்றில் நீண்ட காலத்திற்கு பின்னர் மழை பொழிந்தால் அந்த நிலம் எந்தளவிற்கு குளிர்ச்சி அடையுமோ அந்தளவிற்கு மகிழ்ச்சியை இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி மூலம் இலங்கை இரசிகர்களுக்கு கொடுத்திருக்கின்றது.

கடந்த வாரம் டர்பன் நகரில் இடம்பெற்று முடிந்த தென்னாபிரிக்க அணியுடனான குறித்த டெஸ்ட் போட்டியில் த்ரில்லர் வெற்றி ஒன்றை பெற்ற இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

குசல் பெரேராவின் போராட்ட சதத்தோடு டர்பன் டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான …..

இதன்மூலம், தமது தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள இலங்கை அணி, இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் நாளை (21) மீண்டும் தென்னாபிரிக்க வீரர்களை சந்திக்கின்றது.    

போட்டி விபரம்

இடம்சென். ஜோர்ஜ் பார்க் மைதானம், போர்ட் எலிசபெத்

திகதிபெப்ரவரி  21 தொடக்கம் பெப்ரவரி 25ஆம் திகதி வரை

நேரம்மதியம் 1.30 மணி (இலங்கை நேரப்படி)

இலங்கை அணி

கடந்த மாதம் தென்னாபிரிக்காவை ஒத்த அதே ஆடுகளங்களை கொண்ட அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர்கள் வைட்வொஷ் செய்யப்பட்டிருந்தனர். இதனால், இலங்கை அணி பற்றிய எதிர்பார்ப்புக்கள் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் மிகவும் குறைவாகவே காணப்பட்டிருந்தது.

ஆனால், இலங்கை அணி யாருமே எதிர்பார்க்காத போட்டி முடிவு ஒன்றை, அதுவும் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிகளில் ஒன்றுக்கு எதிராக, அவர்களது சொந்த மைதானத்தில் வைத்தே, டர்பன் டெஸ்ட் போட்டி மூலம் பெற்றிருந்தது.

மேலும் இந்த வெற்றியானது, தோல்விகளையே பார்த்து துவண்டு போயிருந்த இலங்கை வீரர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும் கொடுத்திருந்தது. வெற்றி ஒரு பக்கம் இருக்க இலங்கை வீரர்கள் முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் சில பாடங்களை கற்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.

இலங்கை அணிக்காக விளையாட கிடைத்தமை அதிஷ்டம்: லசித் எம்புல்தெனிய

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது …

முதல் டெஸ்ட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா, அறிமுக வீரர் லசித் எம்புல்தெனிய, தனன்ஜய டி சில்வா மற்றும் விஷ்வ பெர்னாந்து போன்றோர் தனிநபர்களாக வழங்கியிருந்த பங்களிப்பினாலேயே வெற்றி சாத்தியமாகியிருந்தது. ஆனால், இந்த வீரர்கள் தவிர்த்து அணியின் ஏனைய ஏழு வீரர்களும் போதியளவான ஆட்டத்தை முதல் டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்த தவறியிருந்தனர்.  

அதன்படி, தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இலங்கை அணி வீரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்களது நூறு சதவீத பங்களிப்பினையும் வழங்க வேண்டும்.

அப்படிச் செய்யும் போது போர்ட் எலிசபெத் நகரில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணி தென்னாபிரிக்க மண்ணில் தாம் பெற்றுக் கொண்ட முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைக்க முடியும்.

இதேநேரம், வெற்றியை சுவைக்க முடியாவிடிலும் போட்டியை சமநிலைப்படுத்த சரி இலங்கை வீரர்கள் தங்களது முழு முயற்சிகளையும் வழங்க வேண்டும். அப்படி செய்யும் போதும், இலங்கை அணிக்கு தென்னாபிரிக்க மண்ணில் வைத்து டெஸ்ட் தொடர் ஒன்றை முதல்தடவையாக கைப்பற்றிய பெருமை கிடைக்கும்.

போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியை நோக்கும் போது அதில் ஓரிரு மாற்றங்களே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில் பயிற்சி இடைவேளை ஒன்றில் காயத்திற்கு ஆளாகிய இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இழப்பதால் அவருக்கு பதிலாக அறிமுக சகலதுறை வீரரான அஞ்செலோ பெரேரா இலங்கை அணியில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவறவிடும் குசல் மெண்டிஸ்?

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக போர்ட் ….

இலங்கை அணிக்காக முன்னதாக ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் அஞ்செலோ பெரேரா, அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற உள்ளூர் முதல்தரப் போட்டி ஒன்றின் இரு இன்னிங்ஸ்களிலும் இரட்டைச் சதங்கள் விளாசி புதிய சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலுக்கு அவரது அதிக பணிச்சுமை காரணமாக போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்படும் என முன்னர் இலங்கை அணித்தேர்வாளர் அசந்த டி மெல் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, லக்மாலிற்கு பதிலாக அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸிற்கு போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன, ஒசத பெர்னாந்து, அஞ்செலோ பெரேரா, குசல் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாந்து, கசுன் ராஜித

தென்னாபிரிக்க அணி

தென்னாபிரிக்க அணியினர், இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் துரதிஷ்டவசமான தோல்வி ஒன்றை தழுவியிருந்த போதிலும் போர்ட் எலிசபெத் நகரில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் தமது தவறுகளை திருத்திக்கொண்டு இலங்கை வீரர்களுக்கு பதிலடி தரும் நோக்கத்துடன் காணப்படுகின்றனர்.

Photo Album : Sri Lanka Practices ahead of 2nd Test Match in St. George’s Park, Port Elizabeth 

தம்மிடையே பந்துவீச்சு, துடுப்பாட்டம் என பலம் வாய்ந்த வீரர்கள் குழாத்தையும் கொண்டிருக்கும் தென்னாபிரிக்க அணி, தொடரை தக்க வைக்க இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றி ஒன்றினை பெற வேண்டி இருப்பதால் இலங்கை வீரர்களுக்கு மிகப்பெரிய சவால் ஒன்று காத்திருக்கின்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணியை நோக்கும் போது அதில் அறிமுக சகலதுறை வீரரான வியான் முல்டர், முதல் டெஸ்ட் போட்டியின் போது காயத்திற்கு உள்ளாகிய வெர்னன் பிலாந்தரின் இடத்தினை எடுத்துக் கொள்வார் எனக் கூறப்படுகின்றது. இதுதவிர வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறாது.

எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி

டீன் எல்கர், எய்டன் மார்க்ரம், ஹஷிம் அம்லா, டெம்பா பெவுமா, பாப் டூ ப்ளெசிஸ் (அணித்தலைவர்), குயின்டன் டி கொக், வியான் முல்டர், கேசவ் மஹராஜ், டேல்  ஸ்டெய்ன், டுஆன்னே ஒலிவர், ககிஸோ றபாடா  

எதிர்பார்ப்பு வீரர்கள்

தனனஜய டி சில்வா (இலங்கை) – தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னர் இலங்கை அணிக்காக ஜொலிக்கத் தவறியிருந்த தனன்ஜய டி சில்வா, இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற குசல் பெரேராவுடன் இணைந்து மிக முக்கிய இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இதேநேரம், கடந்த ஆண்டு இலங்கையின் சொந்த மண்ணில் இடம்பெற்ற  தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும், துடுப்பாட்டத்தில் ஜொலித்து இலங்கை அணி குறித்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற உதவிய தனன்ஜய டி சில்வா நாளைய போட்டியிலும் இலங்கை அணிக்காக பிரகாசிக்க எதிர்பார்க்கப்படுகின்றார்.

எய்டன் மார்க்ரம் (தென்னாபிரிக்கா) – இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்காது போனாலும் தென்னாபிரிக்க மண்ணில் அண்மையில் இடம்பெற்றிருந்த டெஸ்ட் போட்டிகளில் அபாரம் காண்பித்திருந்த இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான எய்டன் மார்க்ரம் இலங்கை அணிக்கு நாளைய டெஸ்ட் போட்டியில் நெருக்கடி தரக்கூடியவராக இருப்பதோடு, தனது தரப்பிற்காக ஜொலிக்க எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரராகவும் இருக்கின்றார்.

 

தென்னாபிரிக்க அணி அண்மையில் இடம்பெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களை 3-0 என வைட்வொஷ் செய்ய, மார்க்ரம் இரண்டு அரைச்சதங்களுடன் உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டி நடைபெறும் மைதானத்தில் இரு அணிகளதும் கடந்த காலம்

இரண்டு அணிகளும் போட்டி நடைபெறும் போர்ட் எலிசபெத் மைதானத்தில் இதற்கு முன்னர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளன. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இலங்கை வீரர்களை தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

மைதான நிலைமைகள்

போர்ட் எலிசபெத் மைதானம் வழமை போன்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு இடமாக இருக்கின்றது. இதேநேரம், போட்டி நடைபெறும் ஐந்து நாட்களிலும் மழையின் எதிர்வு கூறல் இல்லை என்பதால் கிரிக்கெட் இரசிகர்கள் அனைவருக்கும் விருந்துதரக்கூடிய ஒரு டெஸ்ட் போட்டி காத்திருக்கின்றது.     

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<