சர்வதேச மட்டத்தில் வெற்றி பெற்ற இலங்கை வீரர்களுக்கு பணப்பரிசு

229

இலங்கை தேசிய அணியைப் பிரிதிநிதித்துவப்படுத்தி 2018இல் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் சுமார் ஒரு கோடி ரூபா பணப்பரிசு நேற்று (18) விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் கையளிக்கப்பட்டது.

2019இன் முதலாது மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் இவ்வாரம் ஆரம்பம்

இவ்வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய, ஆசிய மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற உலக இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, தென்கொரியாவில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை ஆடவர் கெரம் அணி, பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கெரம் மகளிர் அணி மற்றும் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சம்பியன்களாகத் தெரிவாகிய இலங்கை வலைப்பந்தாட்ட அணி உள்ளிட்ட அணிகளில் இடம்பெற்ற வீரர்கள் மற்றும் அதன் பயிற்சியாளர்களுக்கு இதன்போது பணப்பரிசு வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிலையில், ”இலங்கையில் பதக்கங்களை வெல்கின்ற சில விளையாட்டுக்கள் இருக்கின்றன. அவ்வாறான விளையாட்டுக்களில் அதி சிறந்த வீரர்களை இனங்கண்டு சிறப்பு குழாம் ஒன்றை அமைத்து விளையாட்டுத்துறை பேரவை மூலம் நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். இதனால் எமக்கு பதக்கங்ளை வெல்ல முடியும்” என குறித்த நிகழ்வின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த வைபவத்தில் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ,

சர்வதேசப் போட்டிகளில் மிக இலகுவாக பதக்கங்களை வெல்கின்ற முக்கிய சில விளையாட்டுக்கள் இலங்கையில் உள்ளன. ஆனால் அவற்றில் வெற்றி பெறுவதென்பது இலகுவான விடயமல்ல. எனவே, அவ்வாறான விளையாட்டுக்களை ஊக்குவித்து அதிசிறந்த வீர வீராங்கனைகளைக் கொண்ட சிறப்பு குழாத்தினை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான சங்கங்களின் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளினால் வீரர்கள்தான் பலிக்கடாவாக்கப்படுகின்றனர். இதனை முற்றாக இல்லாதொழிக்க வீரர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவர்களை உயரிய இடத்துக்கு கொண்டு செல்வதே எமது அமைச்சின் பிரதான நோக்கமாகும். அதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதல்முறை தேசிய கெரம் சம்பியனாக தெரிவாகிய சஹீட் ஹில்மி

தேசிய கெரம் சம்பியன் பட்டத்தை மூன்று தடவைகள் வென்றவரும், நடப்பு உலக கெரம்…

குறித்த வைபவத்தில் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லாவுக்கு 15 இலட்சமும், அவருடைய பயிற்சியாளர் ஜே.என் ஜயசிங்கவுக்கு 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவும் கையளிக்கப்பட்டது. அத்துடன், ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் விளையாடிய 12 வீராங்கனைகளுக்கும் தலா 3 இலட்சம் ரூபா வீதமும், பயிற்சியாளர் திலகா ஜினதாசவுக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கிவைக்கப்பட்டது.

இதேநேரம், உலக கெரம் சம்பியன்ஷிப் தொடரில் சம்பியனாகத் தெரிவாகிய இலங்கை ஆடவர் கெரம் அணியைச் சேர்ந்த சமில் குரே மற்றும் தினேஷ் நிஷாந்தவுக்கு தலா 6 இலட்சம் ரூபாவும், மொஹமட் சஹீட் ஹில்மி மற்றும் உதேஷ் சந்திம பெரேரா ஆகியோருக்கு தலா 3 இலட்சம் ரூபாவும், கெரம் மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த யசிகா ராஹுபத்த மற்றும் ஜோசப் ரொஷிட்டாவுக்கு தலா 2 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாவும், சலனி லக்மாலி மற்றும் மதுகா தில்ஷானி ஆகியோருக்கு தலா ஒரு இலட்சத்து 12,500 ரூபாவும் கைளிக்கப்பட்டன.

இதேவேளை, கெரம் அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட கமலா விக்ரமசிங்க (225,000), ரன்ஜன் பெர்னாந்து (150,000), லசந்த சமிந்த ரணதுங்க (75,000), சுஜாதா மதுரேகொட (39,375) ஆகியோருக்கும் இவ்வாறு பணப்பரிசு வழங்கிவைக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<