இலங்கை அணியில் தற்போது விளையாடி வருகின்ற எந்தவொரு வீரரும் ஊழல் மோசடியில் ஈடுபடவில்லை என ஐ.சி.சி தனக்கு அறிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, அண்மையில் தான் சந்தித்த நான்கு சிரேஷ்ட வீரர்கள் குறித்தும் எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமன்னிப்புக் காலத்தில் புதிய தகவல் கிடைத்துள்ளதாக ஐ.சி.சி அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்…
விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்களுடன் நேற்று (14) விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதை ஐ.சி.சி விசாரணை செய்ய ஆரம்பித்த நாள் முதல் அதை மிகப் பெரிய பிரச்சினையாக காட்டுவதற்கு பலர் முயற்சி செய்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் வீரர்களை இலக்காகக் கொண்டு பல பொய்யான செய்தகளை பரப்பி வருகின்றனர். எனினும், இலங்கை அணியில் உள்ள எந்தவொரு வீரரும் பாரியளவு ஊழல் மோசடியில் ஈடுபடவில்லை என ஐ.சி.சி என்னிடம் தெரிவித்தது.
இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற ஜயந்த தர்மதாசவிடம் இருந்து 50 மில்லியன்களைப் பெற்றுக்கொண்டதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதுவும் கிரிக்கெட் ஊழல் போன்ற செய்தியாக மாறிவிட்டன.
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத்துவம் மற்றும் பயிற்சியாளர் தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,
”நான் கடந்த வாரம் லசித் மாலிங்க, திசர பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். தற்போது அவர்களுக்கிடையில் எந்தவொரு முரண்பாடும் கிடையாது. எமது அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கிடையில் புரிந்துணர்வும், நம்பிக்கையும் ஏற்படவில்லை. இவையனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தால் இலங்கை அணி உலகின் முன்னிலை கிரிக்கெட் அணியாக மாறும்.
அதேபோன்று, பயிற்றுவிப்பாளர் தொடர்பிலும் உடனடியாக தீர்மானமொன்றை எடுக்க முடியாது. அவருக்கும் சில காலம் கொடுக்க வேண்டும். எனினும், பயிற்றுவிப்பாளருக்கு மிகப் பெரிய தொகை பணத்தை சம்பளமாகக் கொடுத்து அவர் அந்தப் பொறுப்பை உரிய முறையில் செய்யாவிட்டால் அல்லது எதிர்பார்த்த பெறுபேற்றைப் பெற்றுக் கொடுக்க தவறும்பட்சத்தில் அதுபற்றி யோசிக்க வேண்டும். ஏனெனில் அவர் மாதாந்தம் 6 அல்லது 7 மில்லியன் ரூபாய் பணத்தை சம்பளமாகப் பெற்றுக்கொள்கின்றார். ஆகவே அவருக்கு கொடுக்கின்ற பணத்துக்கு 60 சதவீத பெறுபேறுகளையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும். அவ்வாறு செய்யாவிட்டால் பயிற்றுவிப்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நான்கு சிரேஷ்ட வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கிய சந்திப்பு
இலங்கை கிரிக்கெட் அணிக்குள் நிலவி வருகின்ற முறுகல் …
நாட்டில் 66 விளையாட்டுச் சங்கங்கள் உள்ளன. அதில் 28 சங்கங்கள் இதுவரை நிர்வாக சபை தேர்தலை நடத்தாமல் உள்ளன. அதிலும் குறிப்பாக வருட இறுதி நிதி அறிக்கையை விளையாட்டு அமைச்சுக்கு இதுவரை சமர்ப்பிக்கவில்லை. எனவே, அந்தந்த சங்கங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், புதிய விளையாட்டு யாப்பை தயாரிக்கும் நோக்கிலும் அனைத்து சங்கங்களையும் சேர்ந்த அதிகாரிகளையும் இம்மாத இறுதியில் சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
இன்று இலங்கையில் உள்ள பெரும்பாலான சங்கங்களில் உள்ள அதிகாரிகள் இறக்கும் வரை அதே பதவிகளில் இருக்கின்றார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அதேபோன்று விளையாட்டில் புதிய அனுகமுறைகளை கொண்டுவர வேண்டும். ஆனால் இலங்கையில் மாத்திரம் பாரம்பரிய முறையில் விளையாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர். ஆகவே இனிவரும் காலங்களில் அதற்கு இடமளிக்க முடியாது.
இதேநேரம், இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் முறையில் பல சிக்கல்கள் உள்ளன. முதலில் அதன் யாப்பை மாற்றியமைக்க வேண்டும். இதற்காக சங்கக்கார மற்றும் மஹேல ஆகியோரால் தயாரிக்கப்பட்ட புதிய யாப்பை இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளேன். அதன்பிறகு குறித்த யாப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அதற்கு அரசியல் கட்சிகள் வேறுபாடின்றி ஆதரவளிக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<