12 வயதுக்குட்பட்டவர்களுக்கான மைலோ கிண்ண கால்பந்து தொடர் மார்ச்சில்

232

சீனாவில் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதற்கான 12 வயதுக்குட்பட்டோருக்கான அகில இலங்கை பாடசாலைகள் மைலோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Road to Barcelona சம்பியன் கிண்ணம் அல்-அக்ஸா கல்லூரிக்கு

நெஸ்லே லங்காவின் மைலோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் “பார்சிலோனாவை …

உலக கால்பந்து சம்மேளனத்தின் அனுமதியுடனும், உலகின் பிரபல கால்பந்து கழகங்களில் ஒன்றாக பார்சிலோ கால்பந்து கழகத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடருக்கு கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் ஆகிய பூரண பங்களிப்பு வழங்கவுள்ளன.

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையில் இவ்வருடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மைலோ சம்பியன் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற 8 வீரர்கள் சீனாவில் நடைபெறவுள்ள மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பிறந்த மாணவர்களுக்கு மாத்திரம் நடத்தப்படுகின்ற இப்போட்டித் தொடரில் 9 மாகாணங்களையும் சேர்ந்த 822 ஆடவர் அணிகளும், 265 மகளிர் அணிகளும் உள்ளடங்கலாக சுமார் 13,000 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

அத்துடன், மேல் மாகாணத்துக்கான போட்டிகள் மாத்திரம் மூன்று வலயங்களாக நடைபெறவுள்ளன. அதேநேரம், இந்த தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி யாழ். புனித ஹென்ரியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Photo Album : Milo U12 Football Tournament 2019 | Press Conference

அத்துடன், இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் மே மாதம் 4ஆம், 5ஆம் திகதிகளில் மாத்தறை கால்பந்து மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களில் 8 பேர் மாத்திரம் இந்நாட்டிலுள்ள சிரேஷ்ட பயிற்விப்பாளர்களைக் கொண்ட குழாத்தினால் அன்றைய தினம் நடத்தப்படுகின்ற விசேட பயிற்சிமுகாம் மூலம் இலங்கை கால்பந்து அணிக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதன்பிறகு, சீனாவில் நடைபெறவுள்ள முதலாவது மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை குறித்த வீரர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

உலகின் பிரபல கால்பந்து கழகங்களில் ஒன்றாக பார்சிலோனா கால்பந்து கழகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறுகின்ற மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து, பாகிஸ்தான், கொலம்பியா, சிலி, ஜமைக்கா, ட்ரினிடாட் அன்ட் டொபேகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கவுள்ளன. அத்துடன், அணிக்கு 5 பேர் கொண்ட போட்டியாக நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு பெண் வீராங்கனையும் இடம்பெறல் வேண்டும்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கையில் நடைபெறவுள்ள 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மைலோ சம்பியன் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் குறித்து தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (11) கொழும்பில் இடம்பெற்றது.  

டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் டிபெண்டர்ஸ் வசம்

கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்ற சம்பியன் அணியை தீர்மானிக்கும் டயலொக் சம்பியன்ஸ் ..

இந்த நிகழ்வில் நெஸ்லே லங்கா நிறுவத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ப்ரெப்ரிஸ் கெவலின், மைலோ விநியோக முகாமையாளர் மொஹமட் அலீ, பிரதித் தலைவர் பந்துல எகொடகே உள்ளிட்டோரும், கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறைப் பிரிவின் ஆலோசகர் சுனில் ஜயவீர, இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஹேமன்த அபேகோன், கல்வி அமைச்சின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு பிரதிப் பணிப்பாளர் அதுல விஜேவர்தன மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் செயலாளர் நாலக திசாநாயக்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

போட்டி அட்டவணை

மார்ச் 5 – 6 வட மாகாணம் யாழ். புனித ஹென்ரியரசர் கல்லூரி மைதானம்
மார்ச் 8 – 9 வட மத்திய மாகாணம் அநுராதபுரம் சிறச்சாலைகள் மைதானம்
மார்ச் 11 – 12 வட மேல் மாகாணம் சிலாபம் சேனாநாயக்க மத்திய கல்லூரி மைதானம்
மார்ச் 14 – 15 மத்திய மாகாணம் பேராதெனிய பல்கலைக்கழக மைதானம்
மார்ச் 17 – 18 கிழக்கு மாகாணம் கிண்ணியா பொது மைதானம்
மார்ச் 20 – 21 ஊவா மாகாணம் பதுளை வின்சன் டயஸ் மைதானம்
மார்ச் 23 – 24 சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி பொது மைதானம்
மார்ச் 26 – 27 மேல் மாகாணம் (கம்பஹா வலயம்) கம்பஹா ஸ்ரீ போதி மைதானம்
மார்ச் 29 – 30 மேல் மாகாணம் (கொழும்பு வலயம்) கொழும்பு கெம்பல் மைதானம்
ஏப்ரல் 1 – 2 மேல் மாகாணம் (களுத்துறை வலயம்) களுத்துறை வேர்னன் பெர்னாண்டோ மைதானம்
ஏப்ரல 3 – 4 தென் மாகாணம் மாத்தறை கால்பந்து மைதானம்
மே 4 – 5 இறுதிப் போட்டி மாத்தறை கால்பந்து மைதானம்

 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<