நியூசிலாந்துக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று (13) நேபியர் மைதானத்தில் இடம் பெற்றது. இப்போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் உட்பட முன்வரிசை வீரர்களின் மோசமான ஆட்டம் காரணமாக தமது இன்னிங்சுக்காக 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பெட் கம்மின்ஸ்
ஒரு சந்தர்ப்பத்தில் 94 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த பங்களாதேஷ் அணிக்கு மொஹமட் மித்துன் மற்றும் மொஹமட் ஷைபுத்தீன் ஆகியோரின் துடுப்பாட்டம் அணிக்கு வலுச்சேர்த்தது. மித்துன் அதிகபட்சமாக அரைச்சதம் கடந்து 62 ஓட்டங்களையும் ஷைபுத்தீன் 41 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் ட்ரென்ட போல்ட் மற்றும் மிட்செல் ஸான்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஹென்ரி மற்றும் பேர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் இணைந்து வெற்றிக்கான சிறந்த அடித்தளத்தை இட்டு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். இருவரும் இணைந்து 103 ஓட்டங்கள் பெற்றிருந்த போது நிக்கோல்ஸ் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் வெறும் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஏமாற்றம் அளித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ரொஸ் டெய்லர் மற்றும் கப்டில் ஆகியோர் இணைந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 96 ஓட்டங்ளை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கப்டில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது 15 ஆவது சதத்தை பூர்த்தி செய்து 117 ஓட்டங்களை பெற்று ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது நியூசிலாந்து அணி கைப்பற்றுமா என தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
பங்களாதேஷ் – 232 (48.5) – மித்துன் 62, ஷைபுத்தீன் 41, ட்ரெண்ட்போல்ட் 40/3, மிச்சல் ஸான்ட்னர் 45/3
நியூசிலாந்து – 233/2 (44.3) – மார்டின் கப்டில் 117*, ஹென்றி நிக்கலோஸ் 53, ரொஸ் டெய்லர் 45*
முடிவு – நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<