தொடர் தோல்வியால் டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்துக்கு பாரிய பின்னடைவு

271

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணி புதிய டெஸ்ட் தரவரிசையின்படி 4 புள்ளிகளை இழந்து மூன்றாமிடத்திலிருந்து ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ICC) ஒவ்வொரு தொடரும் நிறைவடைந்ததன் பின்னர் அந்தந்த அணிகள் பெறுகின்ற அடைவு மட்டங்களை கொண்டு தரவரிசையை புதுப்பித்து வருகின்றது. அந்த அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பின்னரான டெஸ்ட் அணிகளின் புதிய தரப்படுத்தலை ICC நேற்று (12) வெளியிட்டிருந்தது.   

இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு …

இரு அணிகளுக்கிடையிலான குறித்த தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் இங்கிலாந்து அணி டெஸ்ட் தரவரிசையில் 108 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி 70 புள்ளிகளுடன் தரவரிசையில் எட்டாமிடத்தில் காணப்பட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த மாதம் 23-26 வரை பிரிஜ்டவுனில் நடைபெற்றிருந்தது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 381 ஓட்டங்களினால் வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31 தொடக்கம் இம்மாதம் 2ஆம் திகதி வரை அண்டிகாவில் நடைபெற்றிருந்தது. இதிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்டுகளினால் இலகு வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியிருந்தது.

இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்திருந்த நிலையில் மூன்றாவது இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை (09) சென்ட்லூசியாவில் ஆரம்பமாகியது. இந்த போட்டியில் இங்கிலாந்து 232 ஓட்டங்களினால் வெற்றிபெற்று ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 எனும் அடிப்படையில் கைப்பற்றியது.

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் குல்தீப் யாதவ் இரண்டாமிடத்தில்

குல்தீப் யாதவ், டிம் சீபெர்ட், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், சஹீன் அப்ரிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ ..

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய நியதியின் படி தரவரிசையில் மேலிடத்தில் காணப்படுகின்ற அணியை கீழிடத்தில் காணப்படுகின்ற அணி வீழ்த்துகின்ற போது அவ்வணிக்கு அதிக புள்ளிகளும் வழங்கப்படும். அந்த அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 7 புள்ளிகள் அதிகரித்திருக்கின்ற அதேவேளை, இங்கிலாந்து அணிக்கு 4 புள்ளிகள் குறைவடைந்திருக்கின்றது.  

ஒரு அணியினுடைய தரவரிசையில் ஏற்படுகின்ற மாற்றம் ஏனைய அணிகளின் தரவரிசையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த அடிப்படையில் இந்த தொடரின் பின்னரான தரவரிசையிலும் அவ்வாறானதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி மூன்றாமிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்போது ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து அணி நான்காமிடத்திலிருந்து மூன்றாமிடத்திற்கும், அவுஸ்திரேலியா ஐந்தாமிடத்திலிருந்து நான்காமிடத்திற்கும் முன்னேறியுள்ளது.   

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு குறித்த தொடர் வெற்றியின் மூலம் 7 புள்ளிகள் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தாலும், அவ்வணிக்கும் முன் உள்ள அணிக்கும் இடையில் பாரிய புள்ளிகள் வித்தியாசம் காணப்படுகின்றதன் காரணமாக தொடர்ந்தும் எட்டாமிடத்திலேயே அவ்வணி காணப்படுகின்றது.  

சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த மடவளை வேகப்புயல் சிராஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பின்னடைவுகளுக்கு …

புதிய டெஸ்ட் தரப்படுத்தலின் படி இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தில் தென்னாபிரிக்க அணி 110 புள்ளிகளுடன் காணப்படுகின்றது.

.சி.சியின் புதிய டெஸ்ட் தரவரிசை

  1. இந்தியா – 116 புள்ளிகள்
  2. தென்னாபிரிக்கா – 110 புள்ளிகள்
  3. நியூசிலாந்து – 107 புள்ளிகள்
  4. அவுஸ்திரேலியா – 104 புள்ளிகள்
  5. இங்கிலாந்து – 104 புள்ளிகள்
  6. இலங்கை – 89 புள்ளிகள்
  7. பாகிஸ்தான் – 88 புள்ளிகள்
  8. மேற்கிந்திய தீவுகள் – 77 புள்ளிகள்
  9. பங்களாதேஷ் – 69 புள்ளிகள்
  10. ஜிம்பாம்வே – 13 புள்ளிகள்

இரு அணிகளுக்குமிடையிலான சுற்றுத்தொடரின் அடுத்த தொடரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் அடுத்த புதன்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய அடுத்த டெஸ்ட் தொடர் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இன்று (13) ஆரம்பமாகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<