நியூசிலாந்து அணியிலிருந்து வெளியேறவுள்ள கிரைக் மெக்மிலன்

239
Image courtesy - Espncricinfo

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வரும் கிரைக் மெக்மிலன், எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருடன் தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட்…

கிரைக் மெக்மிலன் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். மைக் ஹெசன் நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த காலப்பகுதியில், கிரைக் மெக்மிலனை துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்திருந்தார். இதன் பின்னர் கடந்த வருடம் ஹெசன் பதிவியிலிருந்து விலகிய போதும், மெக்மிலன் தொடர்ச்சியாக நியூசிலாந்து அணியுடன் பணியாற்றினார்.

இந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக கடமையாற்றிய கிரைக் மெக்மிலன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிக பணிச்சுமையின் காரணமாக எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருடன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்ட கிரைக் மெக்மிலன்,

“எனது குடும்பத்தார் எனக்காக கடந்த சில வருடங்களாக அதிக விடயங்களில் தியாகம் செய்து வருகின்றனர். அவர்களிடம் நான் கலந்துரையாடினேன். நியூசிலாந்து அணியை பொருத்தவரை கடந்த சில வருடங்களாக அதிக போட்டிகளில் விளையாடி வருகின்றது.  போட்டிகள் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன.  எனது வாழ்வில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு சரியான தருணம் இதுவென நினைக்கிறேன். அதற்காக தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்”

கிரைக் மெக்மிலன் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் காலத்தில், நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் மிகச் சிறந்த வளர்ச்சிப் பாதையினை எட்டியுள்ளது. குறிப்பாக 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில், நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கும் அவர்களது துடுப்பாட்டம் முக்கிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“எமது அணி, 2015ம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், போட்டிகளில் சிறப்பாக விளையாடிய விதம் என்பன எனது வாழ்வில் மறக்க முடியாத விடயங்கள். அத்துடன், பிரெண்டன் மெக்கலம், கேன் வில்லியம்சன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகிய முன்னணி வீரர்களுடன் பணியாற்றியமையை பெருமையாக நினைக்கிறேன். அத்துடன் டொம் லேத்தம் மற்றும் ஹென்ரி நிக்கோலஸ் போன்ற இளம் துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கியதும் எனக்கு மன நிறைவை ஏற்படுத்தியுள்ளது” என கிரைக் மெக்மிலன் குறிப்பிட்டார்.

பங்களாதேஷுடனான ஒருநாள் குழாமில் மார்டின் கப்டிலுக்கு அழைப்பு

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான அணியில் உபாதையிலிருந்த…

மெக்மிலனின் ஓய்வு குறித்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் குறிப்பிடுகையில், “மெக்மிலன் கிரிக்கெட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அவர், துடுப்பாட்ட வீரர்களை மேலும் வலுப்படுத்துவதற்காக நிறைய முயற்சிகளை மேற்கொள்வார். அத்துடன், கிரிக்கெட் தொடர்பான அதிக விடயங்களை தெரிந்து வைத்துள்ளவர்” என்றார்.

இதேவேளை, கிரைக் மெக்மிலனின் இடத்துக்கான புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் எதிர்வரும், ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னர் நியமிக்கப்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் வைட் தெரிவித்துள்ளார்.