இலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

394

இலங்கை கிரிக்கட் நிறுவனத் தேர்தலில் தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய மூன்று பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட மொஹான் டி சில்வா மற்றும் உப தலைவர் பதவி உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட ரவீன் விக்ரமரத்ன ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியும், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான சூலானந்த பெரேரா நேற்று (08) அறிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் தொடர்பாக சமர்பிக்கப்பட்ட ஆட்சேபனைகளை ஆராய்ந்த மேன்முறையீட்டுத் குழு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிடம் கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த அறிக்கையை சமர்பித்திருந்தது. மேற்படி, மேன்முறையீட்டு குழுவிடம் சமர்பிக்கப்பட்ட ஆட்சேபனைகளை ஆராய்ந்த பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியது.

இலங்கையுடன் மோதவுள்ள தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள்…

முன்னதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக சமர்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சரினால் மூவரடங்கிய மேன்முறையீட்டுக் குழுவொன்று கடந்த ஜனவரி 14ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நிமல் திசாநாயக்க தலைமையிலான மேன்முறையீட்டுக் குழுவில் ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தேவிக்கா டி லிவேரா தென்னக்கோன், ஓய்வுபெற்ற மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் தர்மசேன கஹதவ ஆகியோரும் இடம்பெற்றனர்.

இது இவ்வாறிக்க, மேன்முறையீட்டுக் குழுவினர் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர் அதன் இறுதி அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிடம் கடந்த புதன்கிழமை கையளித்திருந்தனர்.

இதனையடுத்து, மேன்முறையீட்டுக் குழுவினால் சமர்பிக்கப்பட்ட பரிந்துரைகளை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதன்படி, இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் ஆறு பேருக்கு எதிராக ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன. இதில் ஜயந்த தர்மதாச, சம்மி சில்வா, பந்துல திசாநாயக்க மற்றும் லலித் ரம்புக்வெல்ல ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டன.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மொஹான் டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளரான ரவீன் விக்ரமரத்ன ஆகியோரின் வேட்பு மனுக்களை நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் நேற்று அறிவித்தார்.

இதில் மொஹான் டி சில்வா, தலைவர், உப தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கும், ரவீன் விக்ரமரத்ன உப தலைவர், பொருளாளர் மற்றும் உப செயலாளர் பதவிக்கும் போட்டியிடுவதற்கு தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, இம்முறை தேர்தலில் சுமதிபால தரப்பில் உப தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமதிபால தரப்பில் உப தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று உப தலைவர் பதவிக்கு எதிர் தரப்பில் போட்டியிடுகின்ற அர்ஜுன ரணதுங்க மற்றும் பிரமோத்ய விக்ரமசிங்க ஆகியோருக்கு எந்தவொரு போட்டியுமின்றி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

>>அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ரிக்கி பொன்டிங்

இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ஜயந்த தர்மதாச, மொஹான் டி சில்வா, கே மதிவானன் மற்றும் சம்மி சில்வா உள்ளிட்ட நால்வரது வேட்பு மனுக்களில் தற்போது மொஹான் டி சில்வாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே சுமதிபால தரப்பில் சம்மி சில்வா மாத்திரமே எதிர்வரும் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதுடன், ரணதுங்க தரப்பில் ஜயந்த தர்மதாச மற்றும் கே. மதிவானன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுமதிபால தரப்பினர் தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை,  இலங்கை கிரிக்கட் நிறுவனத் தேர்தல்  எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<