ஆஸி. கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் திடீர் இராஜனாமா

445
Image Courtesy - cricket.com.au

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரதி பயிற்றுவிப்பாளரும், வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளருமாக செயற்பட்டுவந்த டேவிட் சாகர் தான் வகித்துவந்த குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக இன்று (07) திடீர் அறிவிப்பை விடுத்துள்ளார்.

1966 மே 29 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் பிறந்த இவர் 1995 ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்தார். 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில் விக்டோரியா அணிக்காவும், 2000 – 2002 வரையான காலப்பகுதியில் தஸ்மானியன் டைகர்ஸ் அணிக்காவும் விளையாடியிருந்தார். இவர் ஒரு வேகப்பந்துவீச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1998-99 காலப்பகுதியில் அவுஸ்திரேலிய முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக பதிவானார்.

தேசிய அணிக்காக விளையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் முதல்தர போட்டிகளுடன் கிரிக்கெட் விளையாட்டு வாழ்க்கையை இடைநிறுத்திக்கொண்டு பயிற்றுவிப்பாளராக வருவதற்கான ஆயத்தங்களை ஆரம்பித்தார்.

மேற்கிந்திய தீவுகளின் ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ள கெயில், ஈவின் லூயிஸ்

2004 ஆம் ஆண்டு முதல் முறையாக விக்டோரியா அணிக்காக அதன் பயிற்றுவிப்பாளர் கிரேக் ஷெப்பேட்டின் கீழ் அந்த அணியின் பிரதி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஒரு சர்வதேச அளவில் பயிற்றுவிப்பாளராக உருவானார்.

2010 ஏப்ரல் 8 ஆம் திகதி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக தனது கடமைகளை தொடர்ந்தார். இவருடைய காலப்பகுதிலேயே இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரை (2010-11) 3-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.

2015 ஆம் ஆண்டு இலங்கிலாந்து அணியின் குறித்த பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகி இரண்டு மாதகால இடைவெளியின் பின்னர் பிக் பேஷ் லீக் தொடரில் மெல்பேர்ன் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் 2016 ஜூலை மாதம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக தனது கடமைகளை தொடர்ந்து வந்தார்.

இந்நிலையிலே இன்று (07) தனது 52 ஆவது வயதில் திடீரென தான் இராஜனாமா செய்வதாக தெரிவித்து ஆஸி. கிரிக்கெட் சபைக்கு திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இம்மாத  இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில் இவரின் இராஜனாமா காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக மீண்டும் ட்ரோய் கூலேய் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸி. கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

53 வயதாகும் ட்ரோய் கூலேய் தஸ்மானியன் டைகர்ஸ் அணியின் முதல்தர கிரிக்கெட் வீரராவார். மேலும் 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார். அத்துடன் 2006 ஆம் ஆண்டு ஒரு வருடகால இடைவெளியில் ஆஸி. கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் ட்ரோய் கூலேய் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க