நியூசிலாந்துடனான முதல் டி-20 போட்டியில் இந்தியாவுக்கு படுதோல்வி

330
Image courtesy - AFP

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதலாவது போட்டியில் விக்கெட் காப்பாளரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான டிம் செய்பர்டின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியானது டி-20 அரங்கில் இந்திய அணி சந்தித்த மிக மோசமான தோல்வியாகவும் பதிவாகியது.

புதிய மாற்றங்களுடனான அணித்தெரிவு பற்றி விளக்கும் அசந்த டி மெல்

அடுத்த வாரம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க சுற்றுப்….

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 4-1 என வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி இன்று (06) வெலிங்டனில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இந்திய அணியில் இளம் வீரர் ரிஷப் பாண்ட், விஜய் சங்கர், குருணால் பாண்டியா இடம்பிடித்தனர். நியூசிலாந்து அணியில் டெரில் மிட்செல் அறிமுகமானார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.

ஆரம்ப வீரர் டிம் செய்பர்ட் அதிரடியாக 43 பந்துகளில் 84 ஓட்டங்களைக் குவித்தார். அதில் 6 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசிய அவர் கலீல் அஹமட்டின் பந்தில் போல்ட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த மன்ரோ (34), கேன் வில்லயம்சன் (34) ஆகியோர் கணிசமான ஓட்டங்களைக் குவித்து குருணால் பாண்டியா மற்றும் சஹால் ஆகியோரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை எடுத்தது.

கடந்த இரண்டரை வருடங்களில் இந்திய அணி சர்வதேச டி-20 போட்டியில் 200 ஓட்டங்களுக்கு மேல் விட்டுக்கொடுப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்கெதிராக மேற்கிந்திய தீவுகள் அணி 245 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

பந்து வீச்சில் இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுக்களையும், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமட்,, குருணால் பாண்ட்யா மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இந்திய – அவுஸ்திரேலிய டி20 தொடர் அட்டவணையில் மாற்றம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெங்களூரு வருகையை….

பின்னர் 220 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா ஒரு ஓட்டத்துடனும், ரிஷப் பாண்ட் (4), தினேஷ் கார்த்திக் (5), ஹர்திக் பாண்டியா (4) அடுத்தடுத்து ஒற்றை இலக்க ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அதிகபட்சமாக டோனி 39 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 29 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில், இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

புந்துவீச்சில் டிம் சௌத்தி 3 விக்கெட்டுக்களையும், மிட்செல் சான்ட்னர், லொக்கி பெர்கசன், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

டி-20 போட்டிகளில் ஓட்டங்கள் அடிப்படையில் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன் 2010ம் ஆண்டு 49 ஓட்டங்கள் வித்திசாயத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.

இதன்படி, நியூசிலாந்து அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி-20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 8ம் திகதி ஒக்லாந்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<