மாலிங்க – திசர – மெதிவ்ஸை ஒரே மேசையில் சந்திக்கவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்

2600

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் சிரேஷ்ட வீரர்களான லசித் மாலிங்கவிற்கும், திசர பெரேராவிற்கும் இடையிலான பிரச்சினை மேலும் வலுவடைந்துள்ள நிலையில், அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மும்முரமாக செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில், இலங்கை அணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை விரைவில் நிறைவுக்கு கொண்டுவரும் நோக்கில் லசித் மாலிங்க, அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திசர பெரேரா ஆகிய சிரேஷ்ட வீரர்களை ஒரே மேசையில் வைத்து சந்தித்து உடனடி தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தலைமைத்துவத்தை விமர்சித்துள்ள திசர பெரேரா

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இவ்வருடம் ஆரம்பமாகவுள்ள…..

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேராவின் மனைவியும், இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணித் தலைவர் லசித் மாலிங்கவின் மனைவியும் சமூகவலைத்தளங்களில் அவதூறுகளை தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் இலங்கை அணி வீரர்கள் மத்தியில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மேற்கொண்ட ஒழுக்க விசாரணையின் போது குறித்த விடயம் தொடர்பில் இரண்டு வீரர்களும் மன்னிப்பு கோரியிருந்ததுடன், அணியின் ஒற்றுமையைப் பேணுவதாகவும், மேலும் பிரச்சினைகளை வளர்க்கப் போவதில்லை எனவும் கூறியதையடுத்து அவர்களுக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவுக்கு கடந்த 26ஆம் திகதி திசர பெரேரா நீண்ட கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் அணியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் மாலிங்க செயற்படுவதாகவும், அவரால் அணிக்கு ஆபத்து எனவும் சுட்டிக்காட்டியதுடன், உலகக் கிண்ணத்துக்கு முன் அவரது தலைமைப் பதவியை மாற்றவேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

இதனையடுத்து அணிக்குள் மிகப் பெரிய குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதனை உணர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ஒருநாள் மற்றும் டி-20 அணித் தலைவர் லசித் மாலிங்க ஆகியோரை கடந்த 30ஆம் திகதி வெவ்வேறாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன், நின்றுவிடாமல் தனது சொந்த செலவில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பார்வையிட கென்பரா சென்ற அவர், அங்குள்ள இலங்கை வீரர்களையும், பயிற்சியாளர்களையும் சந்தித்து அணிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, போட்டி நடைபெறுகின்ற மனுக்கா ஓவல் மைதானத்தில் இருந்து போட்டியை நேரடியாக ஒலிபரப்பு செய்துகொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் வானொலி நிறுவனமான ஏ.பி.சி செய்திச் சேவையுடனான விசேட நேர்காணலில் அவர் கலந்துகொண்டார்.

இதில் ஏ.பி.சி செய்திச் சேவையின் அறிவிப்பாளர் மெதிவ் க்ளீன்ச் இலங்கை கிரிக்கெட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர்,

அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன் அணியில் உள்ள சிரேஷ்ட வீரர்களான லசித் மாலிங்கவையும், அஞ்செலோ மெதிவ்ஸையும் நான் சந்தித்தேன். வீரர்களின் அறையில் என்ன நடக்கின்றது என அவர்களிடம் வினவினேன். மெதிவ்ஸ் தற்போது உபாதையிலிருந்து குணமடைந்து வருகின்றார். அவர் பெரும்பாலும் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இணைந்துகொள்வார் என நம்புகிறேன்.

இலங்கை அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற ஆஸி.

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…..

கடந்த டிசம்பர் மாதம் விளையாட்டுத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு இலங்கை கிரிக்கெட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கி இருந்தன. நீங்கள் சொன்னது போல இலங்கை அணியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எம்மிடம் தற்போது சிறந்த 19 வயதுக்கு உட்பட்ட அணியொன்று உள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலியா 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான தொடரை அவர்கள் வெற்றி கொண்டிருந்தார்கள். அதேபோல, எம்மிடம் திறமையான வீரர்களைக் கொண்ட வளர்ந்துவரும் அணியும், இலங்கை A அணியும் உள்ளன.

எனவே இவ்வாறு முறுகல் நிலையை ஏற்படுத்தி, திறமைகளை வெளிப்படுத்தாமல் தடுமாறி வருகின்ற வீரர்களுக்கு எதிர்வரும் காலங்களில் அணியில் இடம்கிடைக்காது என்பதை தற்போதுள்ள வீரர்களுக்கு நான் தெளிவாக கூறிவிட்டேன். அவர்களிடம் ஒழுக்கம் இல்லாவிட்டால் அதை உடனடியாக திருத்த வேண்டும். சமூகவலைத்தளங்கள் உண்மையில் எமக்கு மிகப் பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. அதை காரணம்காட்டி அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என உறுதியாக கூறமுடியாது. தனிப்பட்ட பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு விளையாட்டையும், நாட்டையும் பற்றி சிந்திக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

உண்மையில் நம் அனைவருக்கும் பேசுகின்ற சுதந்திரம் உண்டு. இதை நான் வரவேற்கின்றேன். ஆனால் இந்த நேரத்தில், இந்த இடத்தில் வீரர்கள் அல்ல, அவர்களது மனைவிமார்கள் இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள். எனவே உங்களது வேலை விளையாடுவது. மனைவிமார்களுக்குத் தேவையானதை அவர்கள் செய்யட்டும் என அவர்களிடம் சொன்னேன்.  

எம்மிடம் பஞ்சமில்லாமல் திறமையான வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். தேசிய அணியில் விளையாடுவதற்கு பல இளம் வீரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஓர் அணியாக விளையாடுகின்ற போது ஒருசில பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்கின்றன. அதை நாங்கள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்காக கிரிக்கெட் சட்டவிதிமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவரவும் எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சராக இந்தப் பிரச்சினையில் தலையிடுவதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் இவ்வாறான சூழ்நிலையில் இருந்து வெளிவருவதற்கு அவர்களை உரிய முறையில் வழிகாட்ட வேண்டும். எனவே அணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த முறுகல் நிலை விரைவில் சுமூகமாக முடிவுக்கு வரும் என நான் நம்புகிறேன்.

பங்களாதேஷ் பீரிமியர் லீக்கில் விளையாடுவதற்குச் சென்றுள்ள திசர பெரேரா, எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.அதன் பிறகு, மீண்டும் மாலிங்க, மெதிவ்ஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோரை ஒரே மேசையில் வைத்து சந்தித்து இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன். அதேபோல பயிற்சியாளர்கள் தொடர்பிலும் ஒருசில பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர்களையும் நான் இங்கு சந்தித்தேன்.

நாட்டுக்காக விளையாடாத வீரர்களை அணியிலிருந்து நீக்குவேன் – அர்ஜுன

இம்முறை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தான் உள்ளிட்ட தரப்பினர்….

எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க முடியும் என நம்புகிறேன். நாங்கள் இலங்கையர்கள். எமக்குள் ஒருசில பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் ஏன் சண்டைபிடிக்க வேண்டும். அவ்வாறு சண்டை பிடித்தாலும் நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<