இந்திய – அவுஸ்திரேலிய டி20 தொடர் அட்டவணையில் மாற்றம்

651
Image - Cricket Australia

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெங்களூரு வருகையை தொடர்ந்து இந்திய – ஆஸி. அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போட்டி நடைபெறவுள்ள மைதானங்களில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நெருங்குகின்ற காரணத்தினால் ஒவ்வொரு அணிகளும் அதற்கான பயிற்சிகளாக இரு தரப்பு தொடர்களில் ஆடி வருகின்றது. அந்த அடிப்படையில் ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இந்தியா கிரிக்கெட் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் போன்றவற்றில் விளையாடவுள்ளது.

இந்திய அணி தற்போது நியூஸிலாந்து நாட்டில் அவ்வணியுடனும், ஆஸி. அணி சொந்த மண்ணில் இலங்கை அணியுடனும் தற்சமயம் விளையாடி வருகின்றது. இந்திய அணி இன்றுடன் (03) நிறைவுக்குவந்த ஒருநாள் தொடரை 4-1 எனும் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. ஆஸி. அணி முதல் டெஸ்ட் போட்டியை வெற்றி கொண்டு, தொடரில் முன்னிலை பெற்று தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது.

நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

அடுத்து நடைபெறவுள்ள இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடரின் அனைத்து போட்டிகளுக்குமான திகதி, மைதானங்கள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான போட்டி மைதானங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னர் முதல் டி20 போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்திலும், இரண்டாவது டி20 போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி விசாகப்பட்டினம் வை.எஸ் ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்திலும் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியாவுக்கு சொந்தமான விமான சேவையான ‘ஏயார் இந்தியா’ விமான கண்காட்சி ஒன்றை பெங்களூருவில் ஆரம்பிக்கவுள்ளது. குறித்த கண்காட்சிக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருக்கு வருகை வருகைதரவுள்ளார்.

இதன் காரணமாக பெங்களூரு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதானால், பெங்களூரில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த முதல் டி20 ஆட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க முடியாது என இந்திய காவல்துறை அறிவித்துள்ளது.

இதனால் வீரர்களுக்கான சரியான பாதுகாப்பு இல்லாமல் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் நடாத்த முடியாத நிலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கம் என்பவற்றுக்கிடையில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டு குறித்த இரு டி20 போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்கள் ஒன்றுக்கொன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி முதல் டி20 சர்வதேச போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி விசாகப்பட்டினத்திலும், இரண்டாவது டி20 சர்வதேச போட்டி 27 ஆம் திகதி பெங்களூரிலும் நடைபெறவுள்ளது.  

நடைமுறையிலுள்ள டி20 சர்வதேச தரப்படுத்தலின்படி இந்திய அணி 126 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலிய அணி 117 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் உள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<