அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் தொடர்ந்தும் விளையாட முடியும் – திமுத் கருணாரத்ன

937

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பெளன்சர் பந்து ஒன்றினால் மிகப்பெரிய உபாதை ஆபத்து ஒன்றினை எதிர்கொண்டிருந்த திமுத் கருணாரத்ன, தனது உபாதையில் இருந்து மீண்டிருப்பதை தொடர்ந்து தன் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் தான் நலத்தோடு இருப்பதை உறுதி செய்திருக்கின்றார்.

அந்த வகையில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் பேசிய திமுத் கருணாரத்ன “இலங்கை தொடக்கம் உலகம் பூராகவும் உள்ள என் ரசிகர்களுக்கு நான் சொல்ல வருவது யாதெனில், வாழ்க்கையில் எப்போதும் வலி இல்லாமல் எந்த பலனையும் அடைய முடியாது. உங்களது மூச்சை ஒரு கணம் நிறுத்தி என்னை இன்றைய நாளின் மதிய வேளையில் நீங்கள் நினைத்து கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு நான் சுறுசுறுப்பாக இருப்பதனை உறுதி செய்து கொள்கின்றேன். உண்மையச் சொல்லப்போனால் எனக்கு பசியாக இருந்தது.  இப்போது நன்றாக சமைக்கப்பட்ட சோறும், கறியும் உண்ட வண்ணம் (மகிழ்ச்சியுடன்) இருக்கின்றேன்“ எனக் குறிப்பிட்டார்.

பெளன்சர் பந்து தாக்குதலுக்கு உள்ளான கருணாரத்ன வைத்தியசாலையில்

மேலும் கருணாரத்ன அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில் தனக்காக காத்திருக்கும் சவாலை எதிர்கொள்ள ஆர்வத்துடன் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

“இப்போது எனக்கு இன்றைய இரவில் தூங்கப்போவது மட்டுமே தேவையாக இருக்கின்றது. அதன் பிறகு நாளை தயராகி அவுஸ்திரேலிய அணியுடனான சவாலை தொடர எதிர்பார்த்துள்ளேன்.“

இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 31 ஆவது ஓவரினை எதிர்கொண்ட போது பெட் கம்மின்ஸ் வீசிய பெளன்சர் பந்து ஒன்று கருணாரத்னவின் கழுத்தின் பின்புறம் தாக்கியிருந்தது. மணிக்கு (அண்ணளவாக) 140 கிலோமீட்டர் வேகத்தில் வந்த குறித்த பந்தின் தாக்கம் காரணமாக கருணாரத்ன உடனடியாக மைதானத்தில் சுருண்டு விழுந்திருந்ததோடு வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

வைத்தியசாலை பரிசோதனை முடிவுகள் கருணாரத்னவிற்கு உடலில் வேறு பாதிப்புக்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த போதிலும் அவர் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஆடுவாரா? இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவி வந்திருந்தது. எனினும், தற்போது அவரின் முகநூல் பதிவினை பார்க்கும் போது அவர் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஆடுவார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<