இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக ரஞ்சித் மதுருசிங்கவை நியமிக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரஞ்சித் மதுருசிங்க இதற்கு முன் 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கனிஷ்ட தெரிவுக் குழுவின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.
எனினும், கடந்த ஒரு வருடங்களாக கனிஷ்ட தெரிவுக் குழுவின் பொறுப்புக்கள் அனைத்தும் தேசிய தெரிவுக் குழுவிடம் ஒப்படைக்க திலங்க சுமதிபால தலைமையிலான முன்னாள் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் ரஞ்சித் மதுருசிங்க தலைமையிலான கனிஷ்ட தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Video – தெரிவுக்குழுவில் பிழையில்லை, வீரர்கள் முன்னேற வேண்டும் – Cricket Kalam 06
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம்…
இது இவ்வாறிருக்க, ரஞ்சித் மதுருசிங்க தலைமையிலான முன்னாள் கனிஷ்ட தெரிவுக் குழுவின் முயற்சியால் லஹிரு குமார, சரித் அசலங்க, பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சம்மு அஷான் மற்றும் வனிந்து ஹசரங்க போன்ற இளம் வீரர்கள் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி தற்போது இலங்கை A மற்றும் தேசிய அணிகளுக்காக பிராகாசித்து வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேநேரம், கனிஷ்ட தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டமை குறித்து ரஞ்சித் மதுருசிங்க எமது இணையத்தளத்திற்கு கருத்து வெளியிடுகையில்,
”நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களிலும் 15 வயதின் கீழ் முதல் 23 வயதின் கீழ் வரையான வயதுப் பிரிவுகளில் தேசியமட்ட தேர்வுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதே எமது பிரதான இலக்காகும். அத்தோடு, தேசிய அணிக்கு வீரர்களை உருவாக்குவதற்கான சிறந்த பாதையாகவும் இது அமையும்” என அவர் தெரிவித்தார்.
அத்தோடு, விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய கனிஷ்ட கிரிக்கெட் தெரிவுக் குழுவில் 9 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் இலங்கையின் முதல்தரப் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரரும், போட்டி நடுவரான கே.எச் நந்தசேன, முன்னாள் டெஸ்ட் வீரரும், பிரபல விளையாட்டு ஊடகவியலாளருமான ரஞ்சன் பரணவிதாரன மற்றும் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரும், போட்டி வர்ணனையாளருமான பர்விஸ் மஹ்ரூப் உள்ளிட்டோர் கனிஷ்ட தெரிவுக்குழு உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணியை கட்டியெழுப்புவதே இப்புதிய தெரிவுக் குழுவின் பிரதான பணியாக அமையவுள்ளது.
கனிஷ்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் விபரம்
ரஞ்சித் மதுருசிங்க (தலைவர்), ரஞ்சன் பரணவிதாரன, கஜபா பிடகல, ஏ.எஸ் நிஷாந்தன், கே.எச் நந்தசேன, காமினி விக்ரமசிங்க, டில்ஷான் டி சில்வா, நிலந்த ரத்னாயக்க, பர்வீஸ் மஹ்ரூப்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<