இலங்கை அணியின் தற்காலிக துடுப்பாட்ட பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன

1109
Photo - AFP

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் பெற்றிருந்த இங்கிலாந்தின் ஜோன் லூயிஸ் குடும்ப விடயம் ஒன்றின் காரணமாக விடுமுறை எடுத்திருக்கின்றார்.  

இதனால், அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தற்காலிக துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க குணவர்தன செயற்படவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று (30) தெரிவித்திருக்கின்றது.

இலங்கை அணியின் தலைமைத்துவத்தை விமர்சித்துள்ள திசர பெரேரா

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இவ்வருடம் ஆரம்பமாகவுள்ள….

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னதாக செயற்பட்ட அனுபவத்தினை கொண்டிருக்கும் அவிஷ்க குணவர்தன, இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள் என இரண்டு வகைப் போட்டிகளிலும் ஆடி 2,000 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக பயிற்றுவிப்பாளர் பொறுப்பினை பெற்றுக் கொண்டிருக்கும் அவிஷ்க குணவர்தன இலங்கைஅவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாக முன்னர் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக பயணமாகியிருக்கும் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியினை தழுவியிருப்பதால், தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.

அந்த வகையில் கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்து இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியுடன் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி கன்பரா நகரில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.