நியூசிலாந்துடனான ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய இந்திய அணி

190
Photo - AFP

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நிறைவுக்கு வந்திருக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் நியூசிலாந்து வீரர்களை வீழ்த்தியுள்ளது.

அதோடு இவ்வெற்றியுடன் இந்திய அணி ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்க 3-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

மவுன்ட் மங்னாய் நகரில் இன்று (28) ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தனது தரப்பிற்காக முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

இதன்படி முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த கேன் வில்லியம்சனின் நியூசிலாந்து தரப்பு 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 243 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன் போதான நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் தனது 45ஆவது ஒரு நாள் அரைச்சதத்தினை பூர்த்தி செய்த ரொஸ் டெய்லர் 106 பந்துகளில் 9 பெளண்டரிகள் அடங்கலாக 93 ஓட்டங்களினை குவித்து சதம் பெறத் தவறியிருந்தார். இதேநேரம், டொம் லேதம் அவருடைய 12ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 64 பந்துகளில் 51 ஓட்டங்களை குவித்திருந்தார்.

மறுமுனையில் இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக மொஹமட் சமி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்க்க, புவ்னேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 244 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, குறித்த இலக்கை 43 ஓவர்களில் 3  விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 245 ஓட்டங்களுடன் அடைந்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு துடுப்பாட்டம் மூலம் உதவியிருந்த ரோஹித் சர்மா தனது 38ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 77 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை குவிக்க, அணித்தலைவர் விராத் கோலி அவரின் 48ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 60 ஓட்டங்களை பெற்று தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இவர்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அம்பதி ராயுடு 40 ஓட்டங்களைப் பெற்றும் தினேஷ் கார்த்திக் 38 ஓட்டங்களைப் பெற்றும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி திறமையினை வெளிப்படுத்திய போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சமி தெரிவாகியிருந்தார்.

நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரினை 3-0 எனக் கைப்பற்றியிருக்கும் இந்திய அணி, 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடர் ஒன்றினை வென்றது இதுவே முதல்தடவையாகும்.

இவ்வாறாக தமது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தினை ஒரு நாள் தொடர் வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இந்திய அணி, அடுத்து ஹமில்டன் நகரில் நியூசிலாந்து வீரர்களை நான்காவது ஒரு நாள் போட்டியில் வரும் வியாழக்கிழமை (31) எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து – 243 (49) : ரொஸ் டெய்லர் 93(106), டொம் லேதம் 51(64), மொஹமட் சமி 41/3(9), ஹர்திக் பாண்டியா 45/2 (10), யுஸ்வேந்திர சஹால் 51/2(9)

இந்தியா – 245/3 (43) : ரோஹித் சர்மா 62(77), விராத் கோலி 60(74), அம்பதி ராயுடு 40(42), தினேஷ் கார்த்திக் 38(38)*, ட்ரென்ட் போல்ட் 40/2(10)

முடிவுஇந்தியா 8 விக்கெட்டுக்களால் வெற்றி