அதிக சூரிய வெளிச்சத்தால் தடைப்பட்ட நியூசிலாந்து இந்திய ஒருநாள் போட்டி

499

கிரிக்கெட் போட்டிகள் மழை, பனி, வெளிச்சமின்மை, மின்னல் போன்ற காரணங்களால் தடைப்படுவது உண்டு. ஒருசில சந்தர்ப்பங்களில் வித்தியாசமான காரணங்களுக்காக போட்டி தடைபட்ட சம்பவங்களும் இடம்பெறுள்ளன. ஒருமுறை கார் மைதானத்துக்குள் நுழைந்தது, சமைக்கும் இயந்திரம் புகைந்தது போன்ற காரணங்களால் போட்டி தடைப்பட்டதும் உண்டு. அதேபோன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்று அதிக சூரிய ஒளியால் 30 நிமிடங்கள் தடைப்பட்ட விசித்திர சம்பவமொன்று இன்று (23) நியூசிலாந்தில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலேய தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (23) நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது.

நியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது இந்தியா

அவுஸ்திரேலிய தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு அதே உத்வேகத்துடன் ஐந்து ஒருநாள் சர்வதேச…

இதில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என சகலதுறையிலும் பிரகாசித்த இந்திய அணி இலகு வெற்றியுடன் 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடி நியூசிலாந்து அணி, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 38 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனைத் தொடர்ந்து 158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா தனது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ஓட்டங்களை எடுத்து இருந்தது. ஷிகர் தவான் 29 ஓட்டங்களுடனும், விராட் கோஹ்லி ஒரு ஓட்டத்துடனும் ஆடுகளத்தில் இருந்தனர்.

அப்போது, திடீரென சூரிய ஒளியால் துடுப்பாட்ட வீரர்கள் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். இதனால் பந்தை எதிர்கொள்ளும்போது கண்கள் கூசுவதுபோல் இருந்ததால், தவான் நடுவரிடம் முறையிட்டார். இதனை உணர்ந்த நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினர்.

இதனால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ரசிகர்கள் மட்டுமல்ல, நடுவரும் நான் இதுவரை சூரிய ஒளியால் ஆட்டம் நிறுத்தப்பட்டதை கேள்விப்பட்டதில்லை என்றார்.

இவ்வாறு சூரிய ஒளியால் போட்டி இடைநிறுத்தப்பட்டது குறித்து விளக்கம் அளித்த கள நடுவர் ஷோன் ஹைக், மறையும் போது சூரிய ஒளி துடுப்பாட்ட வீரர்களின் கண்களை நேரடியாக தாக்கியது. எனவே, வீரர்களின் பாதுகாப்புக் கருதி, சூரிய ஒளி சரியாகும் வரை போட்டியை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்தோம். கிரிக்கெட் போட்டியொன்றில் இது போன்ற விசித்திர சம்பவமொன்று நடைபெற்று இருப்பது எனது 14 ஆண்டு கால அனுபவத்தில் இதுதான் முதல் முறை என தெரிவித்தார். அதேபோன்று, இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷ போக்லேவும், தனக்கு தெரிந்து, இப்படி ஒரு சம்பவம் கிரிக்கெட்டில் நடைபெற்றது இல்லை என தெரிவித்தார்.

முன்னதாக 1995ஆம் ஆண்டு ஓல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இதேபோல் வெயில் அதிகமாக இருந்ததால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அனைத்தொடர்ந்து 1996ஆம் ஆண்டு குஜிரன்வாலா மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியும், 2006ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டேர்பைஷயார் மற்றும் நொட்டிங்ஹம்ஷெயார் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியும் இவ்வாறு அதிக வெயில் காரணமாக தடைப்பட்டிருந்தது.

ஐ.சி.சி இன் ஒருநாள், டெஸ்ட் அணியின் தலைவராக விராட் கோஹ்லி

ஐ.சி.சி இன் 2018ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் விபரம்…

இதன்படி, சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு சர்வதேசப் போட்டியொன்று தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும், சர்வதேச கிரிக்கெட்டில், சூரிய வெளிச்சத்தால், போட்டியொன்று 30 நிமிடங்கள் தாமதமானது இதுவேமுதல் முறையாகும்.

இதற்கிடையில், அரை மணி நேரம் கழித்து மீண்டும் போட்டி தொடங்கியது. சிறிய மாற்றமாக போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டு டக்வர்த் லூவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 156 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, களமிறங்கிய இந்திய அணி 34.5 ஓவர்களில், 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 156 ஓட்டங்களை எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொதுவாக மைதானத்தில் ஆடுகளம் வடக்கு தெற்காகத்தான் அமைக்கப்படும். அப்போதுதான் சூரிய ஒளி தாக்காது. ஆனால் நேப்பியரில் ஆடுகளம் கிழக்கு மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளதால் ஆட்டத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நேப்பியரின் மெக்லீன் பார்க் மைதானத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி இதேபோன்று எதிர் வெயில் காரணமாக சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெற்ற சுப்பர் ஸ்மாஷ் டி-20 போட்டி ஒன்றும் இதே காரணத்துக்காக தாமதமானது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம், இந்த மைதானம் கட்டப்பட்ட விதம் தான் என கூறப்படுகிறது. விரைவில் அது மாற்றப்படாவிட்டால் இன்னும் சில போட்டிகள் இது போன்ற அசௌகரியங்களை சந்திக்க நேரிடும் என ஆடுகள பராமரிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஸியை வீழ்த்த இந்தியாவின் யுக்திகளைக் கையாளவுள்ள இலங்கை அணி

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது போல தங்களாலும்…

எனினும், நேப்பியர் நகர மேயர் பில் டோல்டன் போட்டியின் பிறகு இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், அண்மையில் தான் இந்த மைதானம் 36 கோடி ரூபா செலவில் மீள்நிர்மானம் செய்யப்பட்டது. கிரிக்கெட், றக்பி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறும் நியூசிலாந்தின் சிறந்த மைதானமாக இதை மாற்றம் செய்ய எதிர்பார்த்துள்ளோம். கிரிக்கெட்டில் இதுபோன்ற நிலை ஏற்படும் என எதிர்பார்த்ததுதான். இருப்பினும், மைதானத்தில் மேற்கூரைப் பகுதி சூரிய ஒளியை தடுக்கும் என எதிர்பார்த்தோம். விரைவில் இதை சரிசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.

கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்ட விசித்திர சம்பவங்கள்

* 2017 இல் டெல்லி, உத்தர பிரதேச அணிகள் மோதிய ரஞ்சி கிரிக்கெட்டில் மைதானத்துக்குள் ரசிகர் ஒருவர் காரை ஓட்டி வந்ததால் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.

* 1995ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் டேரில் கலினன், சிக்ஸருக்கு அனுப்பிய பந்து சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்த உணவில் விழுந்தது. இதனால் போட்டி 10 நிமிடங்கள் தாமதமாகியது.

* 1983ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியின் போது மைதானத்துக்குள் பன்றி புகுந்ததால், போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.

* 2007ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ரசிகர் ஒருவர் சிகரெட் வடிவில் உடை அணிந்து வந்தார். அவர் பந்துவீச்சாளர்களின் பின்னால் நின்றதால், துடுப்பாட்ட வீரர்களுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.

* 2011ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சௌத் வேல்ஸில் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு அருகே உள்ள கோல்ப் மைதானத்துக்குள் புலி புகுந்ததாக வெளியாகிய வதந்தியால், வீரர்கள் மைதானத்தில் இருந்து தலை தெரிக்க ஓடினர். அதன்பின் வெறும் வதந்தி என தெரிந்த பின் போட்டிகள் 20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<