இலங்கை கிரிக்கெட் வளர்ச்சிக்கு நான்கு வருட வேலைத்திட்டம்

358

பெப்ரவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதில் தலைவர் பதவிக்கு இரண்டு தரப்புகளில் நால்வர் களமிறங்கியுள்ள நிலையில், அவர்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கவுள்ள ரணதுங்க தரப்பினர்

ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும்…….

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தரப்பில் இருந்து இம்முறை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தலைவர் பதவிக்கு களமிறங்கிய சம்மி சில்வா, அதே தரப்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற மொஹான் டி சில்வாவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ள நிலையில், ரணதுங்க தரப்பில் தலைவர் பதவிக்காக களமிறங்கியுள்ள கே. மதிவாணன், அதே தரப்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற ஜயந்த தர்மதாஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் பெரும்பாண்மை வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியினைப் பெற்றுக்கொள்வோம் என தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன், தமது நிர்வாகக் காலத்தில் நஷ்டத்தில் இயங்கிய இலங்கை கிரிக்கெட்டுக்கு 2 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக் கொடுத்தோம். எனவே மீண்டும் இதேபோல இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற தயாராகவுள்ளோம் எனவும், இதற்காக 100 இற்கும் அதிகமான கிரிக்கெட் சங்கங்கள் இம்முறை தேர்தலில் தமக்கு ஆதரவளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2018 முதல் 2021 வரையான 4 வருட காலப்பகுதிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்திருந்தது.

இலங்கை கிரிக்கெட் தேர்தல் இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டது

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை பெப்ரவரி மாதம் 21ஆம்…..

இந்த நிலையில், இலங்கை நிறுவனத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள மொஹான் டி சில்வா தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது, மொஹான் டி சில்வா தரப்பினர் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக நான்கு வருட வேலைத்திட்டமொன்றையும் வெளியிட்டனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மொஹான் டி சில்வா கருத்து வெளியிடுகையில், “நாங்கள் நிர்வாகத்தில் இருந்தபோது இலங்கை கிரிக்கெட்டுக்கு பாரிய சேவைகளை ஆற்றியுள்ளோம். அதேபோல, நாங்கள் நிர்வாகத்துக்கு வருவதற்கு முன் 2 பில்லியன் ரூபா கடனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அந்த அனைத்து கடன்களையும் செலுத்தி மேலும் 2 பில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால் இன்று அந்தப் பணம் இருக்கின்றதா? இல்லையா? என்பது பற்றி தெரியாது.  

நாங்கள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஸ்ரீலங்கன் ப்ரீமியர் லீக் டி-20 தொடரை இடைநிறுத்தியதால் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இந்த தொடருக்காக 45 வீரர்களை இலங்கைக்கு அழைத்துவர திட்டமிட்டிருந்தோம். 20 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் நிர்வாகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற எனக்கு எவருடைய பின்னாலும் செல்ல வேண்டிய தேவை கிடையாது. எமது அங்கத்தவர்கள் தொடர்பில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். நாங்கள் நிர்வாகத்தில் இருந்தபோது இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அவர்கள் நன்கு அறிவர். எனவே நாங்கள் தான் வெற்றிபெறுவோம் என்பதை தெரிந்துவைத்துள்ள எதிரணியினர் எமக்கெதிராக பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு குறுக்கு வழியில் செல்லாமல் நேருக்கு நேர் எம்முடன் களத்தில் குதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

டேவிட் வோர்னருக்கு நாடு திரும்புமாறு அதிரடி உத்தரவு..!

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில்…….

மேலும், ”எமது நிர்வாகத்தின் கீழ் ஒழுக்க விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றியிருந்தோம். விதிமுறைகளை மீறி செயற்பட்ட வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் அனுஷ சமரநாயக்கவை பதவி நீக்கம் செய்தோம். அதேபோல, கிரிக்கெட் அணியிலும் அதே நடைமுறைகளைப் பின்பற்றினோம். இம்முறை உலகக் கிண்ணத்துக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்த போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அதேபோல, தவறுகள் செய்த எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். எமது காலத்தில் கிரிக்கெட் விளையாட்டை பரிசுத்தமாக வைத்திருந்தோம். தற்போது கிரிக்கெட் விழுந்துவிட்டது. இதற்கு ஒருசிலர் பொறுப்புக்கூற வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை தொடர்ந்து நடத்தாமல் பிற்போட்டு இலங்கை கிரிக்கெட் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்யுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற மொஹான் டி சில்வா தரப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், ”இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். தேர்தலில் போட்டியிடுகின்ற எங்களுக்கோ அல்லது தேர்தல் செயற்குழுவுக்கோ இதுதொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் இலங்கை கிரிக்கெட் மீண்டும் மிகப் பெரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இதனால், இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இரத்து செய்வதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. அவ்வாறு இலங்கை தடை செய்யப்பட்டால் அதற்கான அனைத்து பொறுப்புக்களையும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

ஹரீனின் புது வியூகம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சாதகமாக அமையுமா?

மேசன் தொழில் செய்பவருக்கு தச்சுத் தொழிலும், தச்சுத் தொழில்…..

அத்துடன், “இலங்கை கிரிக்கெட் தேர்தல் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குகின்ற ஒருசிலர் உள்ளனர். அவர்களுக்கு ஜனநாயக முறையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு வரமுடியாது. எந்தவொரு கிரிக்கெட் சங்கத்தினது ஆதரவும் அவர்களுக்கு இல்லை. பின்கதவால் வருவதற்கு தான் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வைத்தால் பிரச்சினை இல்லை. ஆனால், நாங்கள் தேர்தலில் நிச்சயம் களமிறங்குவோம். அதேபோல, நானும் இந்த நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பல சேவைகளை ஆற்றியுள்ளேன். எனவே, எமக்கு தற்போது 100இற்கும் அதிகமான சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாங்கள் திலங்க சுமதிபாலவின் சகாக்கள் என சொல்லித் திரிகின்றனர். அரசியல் விடயங்களை ஏன் கிரிக்கெட்டில் புகுத்துகிறீர்கள். அரசியலை வைத்துவிட்டு கிரிக்கெட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல முன்வாருங்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், .சி.சியினால் முன்னெடுக்கப்படுகின்ற ஊழல் மோசடி விசாரணைகள் தொடர்பில் மொஹான் டி சில்வா கருத்து வெளியிடுகையில்,

.சி.சியினால் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதுவரை எம்மீது எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. இலங்கையில் மாத்திரமல்ல. ஏனைய நாடுகளிலும் இவ்வாறு பல ஊழல்கள் இடம்பெறுகின்றன. எனவே, கிரிக்கெட் உலகில் அதிக ஊழல் மோசடிகள் இடம்பெறுவது இங்கையில்தான் என எப்படி கூறமுடியும் என அவர் கேள்வி எழுப்பினார். அதேபோல, தான் தலைவராக தெரிவாகியவுடன், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேள்வி எழுப்புவேன் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற மொஹான் டி சில்வா, 2003 மற்றும் 2004 காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளராக செயற்பட்டுள்ளார். தொடர்ந்து 2004 மற்றும் 2005 காலப்பகுதியில் தலைவராகவும், 2013 மற்றும் 2014 காலப்பகுதியில் உப தலைவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் தேர்தலில் அர்ஜுன களமிறங்க திலங்க விலகல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக ஜயந்த…..

இதேநேரம், இம்முறை தேர்தலில் மொஹான் டி சில்வா தரப்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் பொருளாளரான சம்மி சில்வா, எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிடுகையில்,

முன்னாள் அமைச்சரைப் போல ஹரீன் பெர்னாண்டோவுக்கும் கிரிக்கெட் அமைச்சராக இருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன். விளையாட்டுத்துறை அமைச்சராக மாத்திரம் இருங்கள். சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு தடைவிதித்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நாலந்த கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சம்மி சில்வா, இலங்கையின் முன்னாள் முதல்நிலை ஸ்குவாஷ் வீரரும், தெற்காசிய கனிஷ்ட ஸ்குவாஷ் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றவராவார்.  அத்துடன், கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் தலைவராகச் செயற்பட்ட அவர், ஜிம்கானா கழகத்தின் தலைவராகவும், கொழும்பு கிரிக்கெட் கழகம், CH & FC மற்றும் குயீன்ஸ் கழகங்களின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும், கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகத்தில் பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இவ் ஊடகவியலாளர் சந்தப்பில் மொஹான் டி சில்வா தரப்பில் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற பந்துல திசாநாயக்க, உப தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்ற ரவீன் திசாநாயக்க, உப பொருளாளர் பதவிக்காக போட்டியிடுகின்ற லலித் ரம்புக்வெல்ல, பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற லசந்த விக்ரமசிங்க மற்றும் க்ரிஷாந்த கபுவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<