ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தெரிவுப் போட்டிகள் 19ஆம் திகதி முதல் கொழும்பில்

212

மெய்வல்லுனர் விளையாட்டைப் பொருத்தமட்டில் பெரும்பாலான தேசிய மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்கள் இடம்பெறவுள்ள வருடமாக 2019 அமையவுள்ளது. எனவே கடந்த வருடத்தைப் போல இம்முறையும் இலங்கையின் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மெய்வல்லுனர் வீரர்களுக்கு தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அதிக சந்தர்ப்பத்தினை இது ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.

இந்த நிலையில், வருடத்தின் முதலாவது சர்வதேச மெய்வல்லுனர் தொடராக எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள 3ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.

2018இல் தேசிய, சர்வதேச மட்டத்தில் ஜொலித்த நம்மவர்கள்

2018ஆம் ஆண்டானது பல்வேறு தேசிய மற்றும்…

இந்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களுக்கான தெரிவுப் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள முதலாவது மெய்வல்லுனர் போட்டித் தொடர் இதுவென்பதால் நாடளாவிய ரீதியில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட முன்னணி கனிஷ்ட வீரர்கள் இத்தெரிவுப் போட்டிகளில் பங்குபற்றுவார்கள் எனவும், சுமார் 200 இற்கும் அதிகமான வீரர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான உத்தேச அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்கின்ற சகல வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எனினும், குறித்த அடைவுமட்டத்தினை அண்மித்ததாக திறமைகளை வெளிப்படுத்துகின்ற ஏழு வீரர்களை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபற்றச் செய்யவும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், ஒவ்வொரு வருடமும் கனிஷ்ட வீரர்களுக்காக நடத்தப்படுகின்ற முக்கியமான தெரிவுப் போட்டியாக இது கருதப்படுவதுடன், கடந்த காலங்களைக் போன்று இம்முறையும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அதிகளவான வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக மெய்வல்லுனர் சம்மேளனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் உப தலைவர் ஜி.எல்.எஸ் பெரேரா கருத்து வெளியிடுகையில், ”கடந்த முறை எமது வீரர்கள் வெளிப்படுத்திய திறமைகளை கருத்திற்கொண்டு இம்முறை போட்டிகளில் எந்தவொரு செலவுமின்றி ஏழு வீரர்களை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலவசமாகப் பங்கேற்கச் செய்வதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.

முக்கிய வீரரை இழக்கும் அபாயத்தில் இலங்கை

இலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய…

எனினும், 19ஆம் திகதி நடைபெறவுள்ள தெரிவுப் போட்டிகளில் அதனைவிட கூடுதலான வீரர்கள் அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்திருந்தால் நிச்சயம் அனைவரையும் நாம் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபறச் செய்ய நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று, நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 200 விண்ணப்பங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே இம்முறை தெரிவுப் போட்டிகள் பலத்த போட்டித் தன்மை கொண்டதாக அமையும்” எனவும் அவர் தெரவித்தார்.

இதேவேளை, கடந்த வருடம் ஏப்ரல் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 56ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் 88ஆவது சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் 16 வயதுக்கு உட்பட்ட வயதுப் பிரிவுகளில் போட்டிச் சாதனைகளுடன் பதக்கங்களை வென்ற வீரர்கள் அதிக திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, தேசிய மட்டப் போட்டிகளில் கோலூன்றிப் பாய்தல், தட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் உள்ளிட்ட மைதான நிகழ்ச்சிகளில் அண்மைக்காலமாக வட பகுதியைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் தமது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர். அதேபோல, கிழக்கு மாகாண வீரர்கள் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

எனினும், அண்மைக்காலமாக பாடசாலை மட்டப் போட்டிகளில் பின்னடைவை சந்தித்து வருகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீரர்கள், இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தெரிவுப் போட்டிகளில் பங்குபற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அங்குரார்ப்பண ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 2015ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்றதுடன், இதில் இலங்கை அணி, ஒரு தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றது. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு பெங்கொக்கில் இரண்டாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்றது. இதில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை மாத்திரமே இலங்கை பெற்றுக்கொண்டது.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்ட அடைவு மட்டங்கள்

போட்டி ஆண்கள் பெண்கள்
100 மீற்றர்  10.88 செக். 12.25 செக்.
200 மீற்றர்  21.95 செக். 25.00 செக்.
400 மீற்றர்  48.65 செக். 56.25 செக்.
800 மீற்றர் 1 நிமிடம் 55.50 2.13.50 செக்.
1500 மீற்றர் 4 நிமி 00.00 4 நிமி 40.00
3000 மீற்றர் 8 நிமி. 40.00 10 நிமி. 10.00
110/100 மீற்றர்  சட்டவேலி ஓட்டம் 14.05 செக். 14.50 செக்.
400 மீற்றர் சட்டவேலி ஓட்டம் 53.40 செக். 62.00 செக்.
2000 மீற்றர் தடைதாண்டல் 06 நிமி. 05.00 7 நிமி. 10.00
அஞ்சலோட்டம் ஒரு நிமிடம் 56.00 செக். 2 நிமி. 17.00 செக்.
10ஆயிரம் மீற்றர் மற்றும் 5 ஆயிரம் மீற்றர் வேக நடை 47 நிமி. 30.00 செக். 26 நிமி. 00.00
உயரம் பாய்தல் 2.06 மீற்றர் 1.71 மீற்றர்
கோலூன்றிப் பாய்தல் 4.70 மீற்றர் 3.50 மீற்றர்
நீளம் பாய்தல் 7.20 மீற்றர் 5.80 மீற்றர்
முப்பாய்ச்சல் 14.90 மீற்றர் 12.20 மீற்றர்
குண்டு எறிதல் 18.00 மீற்றர் 15.35 மீற்றர்
தட்டெறிதல் 51.00 மீற்றர் 42.00 மீற்றர்
சம்மெட்டி எறிதல் 67.00 மீற்றர் 52.00 மீற்றர்
ஈட்டி எறிதல் 70.00 மீற்றர் 49.50 மீற்றர்
10 அம்சம் மற்றும் 7 அம்சப் போட்டிகள் 5800 புள்ளிகள் 4200 புள்ளிகள்

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<