யாழ் மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் வட மாகாண பாடசாலை அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நாளைய தினம் (15) மாலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான புனித பத்திரிசியார் கல்லூரி அணியினை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதவுள்ளது.
இன்று (14) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் அரையிறுதிப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
கோல் மழையுடன் கிண்ணியா மத்தியை வீழ்த்திய ஸாஹிராவுக்கு மூன்றாமிடம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எதிர் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி
கடந்த வருடம் 20 வயதிற்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான தொடரில் தேசிய சம்பியனான மகாஜனா கல்லூரி அணி சிரேஷ்ட வீரர்கள் பலர் இன்றி களம் கண்டது. மறுபக்கம் 18 வயதிற்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான பிரிவு 3 இன் அரையிறுதிப்போட்டியில் மோதக் காத்திருக்கும் மத்திய கல்லூரி அணி இன்றைய தினம் மோதியிருந்தது.
போதிய பயிற்சிகள் ஏதுமின்றி களம் கண்ட மகாஜனா கல்லூரி அணி மத்திய கல்லூரியின் தாக்குல் ஆட்டத்திற்கு, பதிலாக தாங்களும் விரைவான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். எனினும், 10 நிமிடங்களிற்கு மேலாக அவர்களால் மத்தியின் முன்கள வீரர்களை தடுக்க முடியவில்லை.
விக்னேஷ் முதலாவது கோலையும், றேம்சன் ப்ரீ கிக் மூலமாக இரண்டாவது கோலையும் பதிவுசெய்ய, வேகமாக அடுத்தடுத்து முன் களம் நோக்கி பந்தை நகர்த்திய மத்திய கல்லூரியினர் முதல் பாதியில் 06 கோல்களைப் பதிவு செய்தனர்.
மகாஜனா வீரர்களினால் ஒரேயொரு கோலை மட்டுமே பெறமுடிந்தது.
இரண்டாவது பாதியிலும் மத்திய கல்லூரி அணி தாக்குதல் ஆட்டத்தினை தொடர கோல் பெறும் முயற்சியிலேயே மகாஜானா வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். மாறாக, தடுத்தாடுவதற்கு முயற்சிக்கவில்லை. ரவிவர்மன், டிலக்சன் ஜோடி தொடர்ந்தும் பந்தினை வலையினுள் செலுத்த மகாஜான கல்லூரியினரால் கோல்காப்பாளரை பிரதியீடு செய்வது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. களத்தில் வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறுகையில் மூன்று முறை கோல்காப்பாளரை மாற்றியும் மத்திய கல்லூரியின் கழக மட்ட அனுபவம் வாய்ந்த முன்வரிசை வீரர்களை தடுக்க முடியவில்லை.
மத்திய கல்லூரியின் ரவிவர்மன் 5 கோல்களை போட்டிருந்தார்.
முழு நேரம்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 14 – 01 தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி
கோல் பெற்றவர்கள்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – ரவிவர்மன் 35’, 50’, 65’, 78’ & 80’, விக்னேஷ் 10’, 25’ & 36’, டிலக்சன் 40’, 49’ & 68’, றேம்சன் 18′ & 66′, ஆர்த்திகன் 54’
தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி – தனுஜன் 31′
Thepapare.com இன் ஆட்டநாயகன் – ரவிவர்மன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)
புனித பத்திரிசியார் கல்லூரி எதிர் மானிப்பாய் இந்துக் கல்லூரி
Thepapare உதைப்பந்தாட்ட தொடரில் மூன்றாவது இடத்தினை தமதாக்கியிருந்த புனித பத்திரிசியார் கல்லூரியினை எதிர்த்து, ஸாஹிரா சுப்பர் 7s உதைப்பந்தாட்ட தொடரில் மூன்றாவது இடத்தினை தமதாக்கியிருந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியினர் மோதியிருந்தனர்.
சொந்த மைதானத்தில் இராணுவப் படையிடம் வீழ்ந்த கண்டி அணி
இரு அணிகளும் வேகமான ஆட்டத்தினை வெளிப்படுத்த போட்டி ஆரம்பத்திலேயே சூடி பிடித்தது. பத்திரிசியார் கல்லூரியின் முன்களத்தில் சாந்தன் மற்றும் கிறிஸ்டீபன் பந்தை கோல் நோக்கி நகர்த்துவதற்கு முயற்சித்த போதும் அபினேஷ் தனியொருவராக தடுத்தார்.
மறுபக்கம் தில்லைகாந்தனின் முயற்சிகளும் தடுக்கப்பட்டது. நிர்மல கிறிஸ்டீபன் கோல் நோக்கி எடுத்துச் சென்ற பந்தினை கோல்காப்பாளர் முன்னேறி தடுத்தார். அடுத்த நிமிடத்திலேயே மத்திய களத்திலிருந்து கிடைத்த பந்தினை வலையினுள் செலுத்தி போட்டியின் முதலாவது கோலினை பதிவுசெய்தார் அணியின் தலைவர் கிறிஸ்டீபன். அடுத்த நிமிடத்திலேயே உஷாந்தன் கோல் கணக்கினை சமன் செய்தார்.
இரண்டாவது பாதியில் இரு அணியினரும் தமது அணியை முன்னிலைப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக போராடிய போதும் பின்கள வீரர்கள் லாவகமாக தடுத்தனர்.
எனினும், தொடர் முயற்சியின் பலனாக 72 ஆவது நிமிடத்தில் அபினேஷினது தடுப்பினை தாண்டி பத்திரிசியார் அணியின் தலைவர் நிர்மல கிறிஸ்டீபன் இரண்டாவது கோலினை போட்டார்.
கோல் கணக்கை சமன் செய்வதற்கு மானிப்பாயின் முன்கள வீரர்கள் போராடிய போதும் பத்திரிசியார் பின்கள வீரர்கள் பந்தை வலை நோக்கி செலுத்தவிடாது தடுத்தனர்.
போட்டியின் எஞ்சிய நேரத்தில் கோல்கள் ஏதும் பெறப்படாத நிலையில் இறுதிப்போட்டியில் பத்திரிசியார் கல்லூரி தடம்பதித்தது.
முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 2 – 1 மானிப்பாய் இந்துக் கல்லூரி
கோல் பெற்றவர்கள்
புனித பத்திரிசியார் கல்லூரி – நிர்மல கிறிஸ்டீபன் 42′ & 72′
மானிப்பாய் இந்துக் கல்லூரி – உசாந்தன் 44′
Thepapare.com இன் ஆட்டநாயகன் – நிர்மல கிறிஸ்டீபன் (புனித பத்திரிசியார் கல்லூரி)
நடப்புச் சம்பியன்களான புனித பத்திரிசியார் கல்லூரி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்குடன் 2017 ஆம் ஆண்டின் வெற்றியாளர்களான மத்திய கல்லூரியை எதிர்த்து நாளை மாலை 7 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியின் கீழ் போட்டியிடவுள்ளது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<