இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் பிரிவு III இற்கான சிங்கர் கிண்ண சுற்றுப்போட்டியில் தரம் I இல் விளையாடிவரும் யாழ் இந்துக் கல்லூரி அணி ஸ்ரான்லி கல்லூரி அணியினை, தமக்கிடையிலான பாரம்பரியமான போட்டியில் கோமைந்தனின் வீழ்த்தப்படாத சதத்தின் துணையுடன் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்ரான்லி கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இரண்டு நாட்களைக் கொண்ட போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மைதான சொந்தக்காரர்கள் விருந்தினர்களை துடுப்பெடுத்தாடுவதற்கு அழைத்திருந்தனர்.
>>ஊழல் மோசடி பற்றிய தகவல்களை வழங்குவதற்கு ஐ.சி.சி இனால் 2 வாரகால அவகாசம்
துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்த இந்துக் கல்லூரியினர் 14 ஓவர்களில் மந்தகதியில் 25 ஓட்டங்களை சேகரித்திருந்த வேளையில் முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தனர். அணி 36 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் 20 ஓட்டங்களுடன் பிருந்தாவன் ஆட்டமிழந்தார். மூன்றாவது இலக்கத்தில் களம் நுழைந்த தனுஸ்ரன் ஒரு முனையில் காத்திருக்க மறுமுனையில் விக்கெட்டுக்கள் விரைவாக சாய்க்கப்பட 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இந்துக் கல்லூரி அணியினர் தடுமாறினர்.
ஆறாவது இலக்கத்தில் களம் வந்த வலதுகை துடுப்பாட்ட வீரர் கோமைந்தன் தனுஸ்ரனுடன் இணைந்து சத இணைப்பாட்டமொன்றினை பெற்றிருந்த வேளையில் 6 ஆவது விக்கெட்டாக நிதானமாக துடுப்பாடிக்கொண்டிருந்த தனுஸ்ரன் (44) ஓய்வறை திரும்பினார்.
ஒரு முனையில் தனுஸ்ரன் காத்திருக்க மறுமுனையில் அதிரடியாக துடுப்பாடிய தனுஸ்ரன் சதம் கடந்தார். அணி 244 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் அணியின் ஏழாவது விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. தொடர்ந்தும் நேர்த்தியாக துடுப்பாடிய கோமைந்தன் 150 ஓட்டங்களை தொட இந்துக் கல்லூரி ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.
52 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய இந்துக் கல்லூரியை 172 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 151 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து மீட்டெடுத்திருந்தார்.
கிரிக்கெட்டினை தொடர்ச்சியாக விளையாடி வருகின்றபோதும் வலுவானதோர் அணியினை கட்டியெழுப்புவதற்கு தடுமாறிவரும், ஸ்ரான்லி கல்லூரி அணியினரால் 49 ஓட்டங்களை மாத்திரமே முதலாவது இன்னிங்சுக்காக பெற முடிந்தது. பந்துவீச்சில் அணியில் தலைவர் ஐங்கரன் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்க்க, கோமைந்தன், மதுமிலன் மற்றும் கோபிராமிற்கு தலா 2 விக்கெட்டுக்கள் கிடைத்திருந்தது.
தொடர்ந்தும் இரண்டாவது இன்னிங்சுக்கு துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட ஸ்ரான்லி கல்லூரியினர் 108 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் இளைய வீரர் கஜன் மற்றும் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் கோபிராம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தனர்.
ஸ்ரான்லி கல்லூரியை யாழ் இந்துக் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 111 ஓட்டங்களால் இலகுவாக வீழ்த்தியது. மார்ச் மாதம் புகழ் பூத்த கொழும்பு P. சரவணமுத்து அரங்கில் இந்துக் கல்லூரி, கொழும்பை 10 ஆவது பெரும் சமரிற்காக எதிர்கொள்ள காத்திருக்கிறார்கள். கொழும்பு இந்துக் கல்லூரி தற்போது விளையாட்டுத்துறை மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் யாழ் தரப்பிற்கு பெரும் சவால் காத்திருக்கின்றது.
13 மற்றும் 15 வயதுப் பிரிவுகளில் அசத்திவருகின்ற யாழ் இந்துக் கல்லூரி, தமது 17 வயதுப் பிரிவு அணியினையும் டிவிசன் II இற்கு தரமுயர்த்தியிருக்கின்ற போதும் பலம் வாய்ந்த ஒரு 19 வயதிற்கு உட்பட்ட அணியினை நிறுவுவதில் அண்மைக்காலமாக தடுமாறி வருகின்றது.
>>துடுப்பாட்ட உத்வேகத்துடன் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்குமா இலங்கை?
இளைய வீரர்களை உள்ளடக்கியிருக்கின்ற இந்த முதல் பதினொருவர் அணி கடந்த வாரம் ஹாட்லி கல்லூரிக்கு எதிராக தோல்வியைத் தழுவியிருந்தது. அதேவேளை 13 வயதிற்கு உட்பட்ட அணி பிரிவு II இல் கிண்ணம் வென்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு யாழ் மாவட்ட ரீதியிலான போட்டியில் பெரும் சவாலினை கொடுத்திருந்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
போட்டியின் சுருக்கம்
இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் (முதல் இன்னிங்ஸ்) – 268/7d (86) – கோமைந்தன் 151*, தனுஸ்ரன் 44, பிருந்தாவன் 20, டிலக்சன் 3/59, லஜிந்தன் 2/10 நிதுசன் 2/86
ஸ்ரான்லி கல்லூரி, யாழ்ப்பாணம் (முதல் இன்னிங்ஸ்) – 49 (36.4) – ஐங்கரன் 4/6, கோமைந்தன் 2/3, மதுமிலன் 2/9, கோபிராம் 2/12
ஸ்ரான்லி கல்லூரி, யாழ்ப்பாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 108 (38.3) – கதிரவன் 28, லஜிந்தன் 22, கஜன் 4/18, கோபிராம் 4/41
முடிவு – யாழ் இந்துக் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 111 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<