இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு எப்படி இருந்தது?

429

அடிக்கடி மாறிய அணித்தலைவர்கள், மிகவும் மோசமான துடுப்பாட்டம், முக்கிய வீரர்களது உபாதைகள் என இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு வலிகளையே தந்திருந்த போதிலும் மகிழ்ச்சியடையக் கூடிய சில நிகழ்வுகளும் நடந்தே இருந்தது.

அந்தவகையில் கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எப்படி இருந்தது என்பதை ஒரு முறை மீட்டுவோம்.  

கத்துக்குட்டிகளின் தோல்விகளுக்கு பதிலடி, 2016ஆம் ஆண்டின் பின்னர் முதல் ஒரு நாள் தொடர் வெற்றி  

பங்களாதேஷ் அணி 2017ஆம் ஆண்டில் இலங்கையின் சொந்த மண்ணில் வைத்து இலங்கை அணிக்கு எதிராக தமது முதல் டெஸ்ட் வெற்றியினை பெற அதனை தொடர்ந்து ஜிம்பாப்வே அணி இலங்கை அணியை 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ஒரு நாள் தொடரில் தோற்கடித்து இலங்கை அணிக்கு எதிராக தமது முதல் ஒரு நாள் தொடர் வெற்றியினை பதிவு செய்திருந்தது. இப்படியாக கத்துக்குட்டிகளிடம் மோசமான தோல்விகளை இலங்கை அணி தழுவியது இலங்கை அணி மீதான பாரிய விமர்சனங்களுக்கு வழியமைத்திருந்தது.

இத்தருணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக 2017ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் சந்திக்க ஹதுருசிங்க பொறுப்பேற்றிருந்தார். சந்திக்க ஹதுருசிங்கவின் ஆளுகையில் இலங்கை அணி 2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பங்களாதேஷ் பயணமாகியிருந்தது.

குறித்த சுற்றுப்பயணத்தில் முதற்கட்டமாக பங்களாதேஷ், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் முக்கோண ஒரு நாள் தொடரில் மோதிய இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியினை தோற்கடித்து குறித்த முக்கோணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியதன் மூலம் 2017ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடன் கிடைத்த ஒரு நாள் தொடர் தோல்விக்கு பதிலடி தந்தது.

இதன் பின்னர் இலங்கை அணி குறித்த ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியினை தோற்கடித்து 2016ஆம் ஆண்டின் பின்னர் கிடைத்த முதலாவது ஒரு நாள் தொடர் வெற்றியினை பதிவு செய்தது.

Courtesy

முக்கோண ஒரு நாள் தொடரினை அடுத்து இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் அவ்வணியினை 1-0 எனத் தோற்கடித்து, 2017ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அணியுடன் கிடைத்த டெஸ்ட் தோல்விக்கும் பதிலடி தந்தது.

சொதப்பலாகிய சுதந்திரக் கிண்ணம்

2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கிடைத்த பங்களாதேஷ் சுற்றுப்பயண வெற்றிகளை அடுத்து இலங்கை அணியினர் தமது 70ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் விதமாக சுதந்திரக் கிண்ணத் தொடர் என்ற பெயரில் ஏற்பாடு செய்த முக்கோண T20 சுற்றுத் தொடரில் ஆடியது.

இத்தொடரில் இலங்கை அணியுடன் பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகள் மோத, தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே தெரிவாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும், நொக்அவுட் ஆட்டம் போல் அமைந்த குறித்த முக்கோண T20   தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை அணியினை தோற்கடித்த பங்களாதேஷ் அணி, இலங்கை வீரர்களை தொடரிலிருந்து வெளியேற்றியது.

இதனால், தமது நாட்டினது சுதந்திர தினத்தை நினைவு கூறும் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினையே இலங்கை அணி இழந்தது.

இதேநேரம் இத்தொடரின் போட்டிகளின் போது இலங்கை – பங்களாதேஷ் அணிகளிடையே இடம்பெற்ற சில சச்சரவுகள் இரண்டு அணிகளதும் இரசிகர்களிடையே பெரும் பகையினையும் ஏற்படுத்தியிருந்தது.

சாதனை வெற்றிக்கு முன்னர் இலங்கை அணித்தலைவர், பயிற்சியாளர் ஆகியோருக்கு ஏற்பட்ட சோதனை

இலங்கை அணி சுதந்திரக் கிண்ணத் தொடரினை அடுத்து 2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு டெஸ்ட் தொடரில் விளையாட பயணமாகியது.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பின்னர் நடந்த குறித்த டெஸ்ட் சுற்றுப் பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகளுடன் மோதிய இலங்கை அணி, அந்த டெஸ்ட் தொடரினை 1-1 என சமநிலை செய்திருந்தது.

பார்படோஸ் நகரில் நடைபெற்ற  தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றே டெஸ்ட் தொடரினை சமநிலை செய்திருந்த இலங்கை அணி, அதன் மூலம் பார்படோஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து டெஸ்ட் வெற்றியினை பெற்ற முதல் ஆசிய அணியாக பதிவாகியிருந்தது.

AFP

இது ஒரு புறமிருக்க, சென்.லூசியா நகரில் இடம்பெற்ற குறித்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் பந்தினை சேதப்படுத்தியது, நடுவருடன் முரண்பட்டது, போட்டியினை தாமதம் செய்தது போன்ற குற்றச்சாட்டுக்களுடன் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கும், இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்கவுக்கும் போட்டித்தடைகள் கிடைத்திருந்தன.

இதுவே, சாதனை வெற்றியொன்றுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர், பயிற்சியாளர் ஆகியோருக்கு ஏற்பட்டிருந்த சோதனைகளாக இருந்தன.

வெற்றி, தோல்வி, வெற்றி என முடிவடைந்த தென்னாபிரிக்க தொடர்

மிகவும் பலம்வாய்ந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்கா கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இலங்கை மண்ணுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கை வீரர்களுடன், முதற்கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியிருந்தது.

டேல் ஸ்டெய்ன், ககிஸோ றபாடா போன்ற உலகத் தரமிக்க பந்துவீச்சாளர்களை தென்னாபிரிக்கா இந்த டெஸ்ட் தொடரில் கொண்டிருந்த காரணத்தினால் இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு மூலம் பாரிய நெருக்கடி ஒன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த தொடரில் நடந்ததோ வேறு, இலங்கை அணியின் சுழலுக்கு சின்னாபின்னமாகிய தென்னாபிரிக்க அணி மிகவும் குறைவான மொத்த ஓட்டங்களான 126, 73, 124 என்பவற்றினை பெற்று டெஸ்ட் தொடரினை 2-0 என இழந்தது.

இதேநேரம், இந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி பெற்றுக் கொண்ட மொத்த ஓட்டங்களில் ஒன்றான 74 ஓட்டங்கள், கிரிக்கெட் விளையாட்டுக்கு அவர்கள் 1991ஆம் ஆண்டில் மறுபிரவேசம் மேற்கொண்டதன் பின்னர் பெற்றுக் கொண்ட குறைந்த ஓட்டங்களாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான தில்ருவான் பெரேரா (16), ரங்கன ஹேரத் (12), அகில தனன்ஞய (7) மற்றும் லக்ஷான் சந்தகன் (2) ஆகியோர் மொத்தமாக 37 விக்கெட்டுக்களை பகிர்ந்து தென்னாபிரிக்க அணியினை டெஸ்ட் தொடரில் தோற்கடிக்க உதவியிருந்தனர்.

டெஸ்ட் தொடரினை அடுத்து இலங்கை அணி, தென்னாபிரிக்க வீரர்களுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதியது. இந்த ஒரு நாள் தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டிருந்த போதிலும் தொடர் 3-2 என தென்னாபிரிக்கா வசமாகியது.

இதன்பின்னர் இரு அணிகளுக்கும் இடையே ஒரு போட்டியினைக் கொண்ட T20 தொடர் நடைபெற்றதுடன் குறித்த தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

இதன்படி கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்க அணியுடனான தொடர்களை இலங்கை அணி வெற்றி, தோல்வி, வெற்றி என நிறைவு செய்து கொண்டது.

மூன்று நாட்களில் கலைந்த ஆசியக் கிண்ண கனவு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் இடம்பெற்றிருந்த 14ஆவது ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இருந்த குழுவில் இலங்கை அணி  கிண்ணக் கனவுகளுடன் போட்டியிட்டிருந்தது.

ஆசியக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் மோதியிருந்த இலங்கை அணி, 17ஆம் திகதி தமது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை எதிர்கொண்டிருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி முறையே 137 மற்றும் 37 ஓட்டங்களால் தோல்வியடைந்ததோடு செப்டம்பர் 18ஆம் திகதி பாரிய ஏமாற்றத்துடன் நாட்டினையும் வந்தடைந்தது.

இதனால், ஐந்து தடவைகள் ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் 2018ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கனவு வெறும் மூன்று நாட்களுடன் கலைந்தது.  

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய இங்கிலாந்து

ஆசியக் கிண்ணத்தில் மோசமான பதிவுகளுடன் நாடு திரும்பிய இலங்கை அணி, இங்கிலாந்து வீரர்களை மூன்று வகைப் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் தமது சொந்த மண்ணில் வைத்து எதிர்கொண்டது.

இலங்கை அணியினை இங்கிலாந்து வீரர்கள், மூன்று வகைப்போட்டிகள் கொண்ட தொடர்களிலும் தோற்கடித்து இலங்கை அணிக்கு ஆசியக் கிண்ணத் தொடரில் ஏற்பட்ட புண்ணின் மேல் மீண்டும் வேல் பாய்ச்சினர்.

இங்கிலாந்து அணியினால் டெஸ்ட் தொடரில் 3-0 என வைட்வொஷ் செய்யப்பட்ட இலங்கை அணி, ஒரு நாள் தொடரை 4-1 என இழந்து ஒரு போட்டி கொண்ட T20 தொடரினையும் பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணியின் இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த ஒரே ஆறுதலாக, இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையே கொழும்பில் இடம்பெற்ற ஒரு நாள் போட்டியினை மட்டுமே கூற முடியும்.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 366 ஓட்டங்களை குவித்ததுடன், இங்கிலாந்து அணியினையும் 219 ஓட்டங்களால் டக்வெத் லூயிஸ் முறையில் தோற்கடித்திருந்தது.  

குறித்த போட்டியில் இலங்கை அணி பெற்ற மொத்த ஓட்டங்கள் இலங்கை 2018ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் பெற்ற அதிக ஓட்டங்களாக அமைந்ததோடு, இங்கிலாந்து அணி தோல்வியடைந்த ஓட்ட வித்தியாசம் அவ்வணிக்கு ஓட்ட ரீதியில் கிடைத்த மிகப் பெரிய தோல்வியாகவும் அமைந்திருந்தது.

ரங்கன ஹேரத்தின் ஓய்வு  

இதேநேரம், இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் போது கிட்டத்தட்ட 20 வருடங்கள் இலங்கை அணிக்காக சேவை புரிந்த சுழல் ஜாம்பவனாகிய ரங்கன ஹேரத், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கை அணி இங்கிலாந்து அணியுடனான தொடர்களை இழந்தததனை விட ரங்கன ஹேரத் சர்வதேசப் போட்டிகளிலிருந்து பிரியாவிடை பெற்றதே பெரிய இழப்பாக இருந்தது.

வருட இறுதியில் கிடைத்த ஆறுதல்

இங்கிலாந்து அணியுடனான தொடர்களை அடுத்து கடந்த ஆண்டின் கடைசிப்பகுதியில் மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் ஆட நியூசிலாந்துக்கு பயணமாகியிருந்த இலங்கை அணி, அதில் முதற்கட்டமாக தொடங்கிய டெஸ்ட் தொடரில் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றினை தழுவ இருந்த டெஸ்ட் போட்டியினை சமநிலை செய்திருந்தது.

இந்த டெஸ்ட் போட்டியினை சமநிலை செய்வதற்காக இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் (141*) மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் (120*) ஜோடி அபார சதங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று உதவியதுடன், குறித்த போட்டியின் நான்காம் நாளில் தங்களது விக்கெட்டுக்களை பறிகொடுக்காமல் நின்று துடுப்பாடி பல்வேறு சாதனைகளுக்கும் அடித்தளம் போட்டிருந்தனர்.

GETTY IMAGES

ஆசியக் கிண்ணத் தொடர், இங்கிலாந்து அணியுடனான தொடர்கள் என காயப்பட்டிருந்த இலங்கை அணிக்கு குறித்த டெஸ்ட் போட்டியினை சமநிலைப்படுத்தியது ஒரு சிறிய ஆறுதலாக இருந்தது. எனினும், இலங்கை அணி குறித்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 423 ஓட்டங்களால் மோசமாக தோல்வியடைந்து தொடரினை 1-0 என பறிகொடுத்தது கவலைக்குரிய விடயமாகும்.    

கடந்த ஆண்டில் புள்ளி விபர ரீதியில் இலங்கை அணி வீரர்களின் சிறந்த பதிவுகள்

  • கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில்  ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்த வீரராக திமுத் கருணாரத்ன காணப்படுகின்றார். திமுத் கடந்த ஆண்டில் டெஸ்ட் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக 743 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது துடுப்பாட்ட சராசரி 46.43 ஆகும்.
  • இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 1,000 ஓட்டங்களை குவித்த இரண்டாவது வீரராக மாறியிருந்ததோடு, கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் இரண்டாம் இடத்தினையும் 1,023 ஓட்டங்களுடன் பெற்றிருந்தார்.  
  • இதேநேரம் டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஆண்டில் அதிக பிடியெடுப்புக்களை எடுத்த வீரராகவும் குசல் மெண்டிஸ்  21 பிடியெடுப்புக்களுடன் காணப்படுகின்றார்.
  • இலங்கை அணியின் சுழல் வீரரான தில்ருவான் பெரேரா கடந்த ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்த முதல் வீரராக ஆகியிருந்ததோடு, கடந்த ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்த இரண்டாவது வீரராகவும் காணப்படுகின்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<