ரமேஷ், ரவிந்து ஆகியோரின் சதங்களால் வலுப்பெற்ற துறைமுக அதிகார சபை

455

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே ஏற்பாடு செய்த மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரிமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் இன்று (22) ஒரு போட்டி நிறைவுக்கு வர ஐந்து போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன.

இன்றைய நாளில் அவிஷ்க பெர்னாந்து, சுப்ரமணியம் ஆனந்த், ரமேஷ் நிமன்த மற்றும் ரவிந்து குணசேகர ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க மொஹமட் சிராஸ் மற்றும் தரிந்து கெளஷால் ஆகியோர் பந்துவீச்சில் ஜொலித்திருந்தனர்.

NCC அணிக்காக இரட்டைச் சதமடித்து அசத்திய பெதும் நிஸ்ஸங்க

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் NCC

NCC அணியின் சொந்த மைதானத்தில் வியாழன் (20) தொடங்கியிருந்த இப்போட்டி சமநிலையில் முடிந்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய NCC அணி பெத்தும் நிஸ்ஸங்கவின் கன்னி இரட்டை சதத்தோடு 500 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது முதல் இன்னிங்ஸினை நிறுத்தியது. பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 385 ஓட்டங்களை மட்டும் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

>>Photos : NCC Vs Army SC | Major League Tier A Tournament 2018/2019<<

இதன் பின்னர், போட்டியின் இன்றைய மூன்றாம் நாளில் 115 ஓட்டங்கள் முன்னிலையோடு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய NCC அணி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேரம் நிறைவுக்கு வந்து போட்டி சமநிலை அடைந்த போது, 229 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து மிகவும் வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது. NCC அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு உதார 99 ஓட்டங்கள் பெற்று ஒரு ஓட்டத்தினால் சதத்தை தவறவிட சத்துரங்க டி சில்வா அரைச்சதம் தாண்டி 66 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 500/5d (96.3) – பெத்தும் நிஸ்ஸங்க 206*, சத்துரங்க டி சில்வா 102, மஹேல உடவத்த 61, உபுல் தரங்க 53

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 385 (142) – லக்ஷான் எதிரிசிங்க 84, துஷான் விமுக்தி 71, சஞ்சிக்க ரித்ம 76, சத்துரங்க டி சில்வா 4/50

NCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 229/4 (33) – லஹிரு உதார 99, சத்துரங்க டி சில்வா 66*, யசோத மெண்டிஸ் 2/74

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.


இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

சோனகர் கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இன்று 268 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழக அணி ரமேஷ் நிமன்த, ரவிந்து குணசேகர ஆகியோரின் சதங்களோடு 427 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தவாறு தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

மெதிவ்ஸுக்கு துடுப்பாட்ட ஆலோசனை வழங்கிய குமார் சங்கக்கார

இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த றாகம கிரிக்கெட் கழகம் தினேத் திமோத்ய ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்ட அவரது கன்னி சதத்துடன் (101*) ஒரு விக்கெட்டினை மாத்திரம் பறிகொடுத்து 177 ஓட்டங்களுடன் ஸ்திர நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 427/9d (138) – ரமேஷ் நிமன்த 120, ரவிந்து குணசேகர 105, கயான் மனீஷன் 60, அமில அபொன்சோ 3/107, நிசான் பீரிஸ் 4/137

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 177/1 (43) – தினேத் திமோத்ய 101*, சஞ்சய சத்துரங்க 39

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் SSC

SSC அணியின் சொந்த மைதானத்தில் நேற்று தொடங்கியிருந்த இப்போட்டியில், 227 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருந்த பதுரெலிய கிரிக்கெட் கழகம் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தினை தொடர்ந்தது.

>>Photos: SSC v Badureliya CC | Major League Tier A Tournament 2018/19<<

இன்றைய ஆட்டத்தில் தமிழ் நாட்டு பிரிமியர் லீக் (TNPL) தொடரில் ஆடும் சுப்ரமணியம் ஆனந்த் அபார சதமொன்றை (127) விளாசினார். இந்த சதத்தின் உதவியோடு பதுரெலிய கிரிக்கெட் கழகம் 372 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸில் பெற்றது. பின்னர், தம்முடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய SSC அணி இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் ஆகாஷ் சேனாரத்ன (90), கிரிஷான் ஆராச்சிகே (70) ஆகியோர் பெற்ற அரைச்சதங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 372 (95.5) – சுப்ரமணியம் ஆனந்த் 127, தெனுவன் ராஜகருண 58, சச்சித்ர சேனநாயக்க 5/94

SSC (முதல் இன்னிங்ஸ்) – 289/5 (68.2) – ஆகாஷ் சேனாரத்ன 90, கிரிஷான் ஆராச்சிகே 70, சச்சித் பத்திரன 3/93

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

நேற்று கோல்ட்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் இன்று தமது முதல் இன்னிங்ஸினை தொடர்ந்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 243 ஓட்டங்களை குவித்தது. கோல்ட்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாந்து சதம் (101) ஒன்றை விளாசினார். பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழக அணியினர் 230 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.

Photos: Ragama CC Vs. SLPA SC | Major League Tier A Tournament 2018/19

இதனை அடுத்து சிறிய முன்னிலை (13 ஓட்டங்கள்) ஒன்றோடு இரண்டாம் இன்னிங்ஸை மீண்டும் தொடங்கிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் நிறைவில் 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 243 (69.4) – அவிஷ்க பெர்னாந்து 101, விசாத் ரன்திக்க 40, உபுல் இந்திரசிறி 4/85

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 230 (76.1) – ஷெஹான் திலசிறி 57, ரொஹான் சஞ்சய 5/80

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 62/3 (21)

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்


செரசன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC

BRC அணியின் சொந்த மைதானத்தில் நேற்றிலிருந்து நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று தமது முதல் இன்னிங்ஸினை தொடர்ந்த BRC அணி 453 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. BRC அணியின் துடுப்பாட்டத்தில் ருமேஷ் புத்திக்க சதம் (119) குவிக்க, டயஸ் சதத்தினை (98) இரண்டு ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார்.

நான் செய்த குற்றத்தின் தன்மை இப்போது புரிகிறது – ஸ்மித்

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் மிலிந்த சிறிவர்தனவின் சதத்தோடு (102) 197 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. BRC அணியின் பந்துவீச்சு சார்பாக மொஹமட்ஷிராஸ் 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

>>Photos: BRC v Saracens SC | Major League Tier A Tournament 2018/19<<

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 453/8d (104.4) – ருமேஷ் புத்திக்க 119, டயஸ் 98, பானுக ராஜபக்ஷ 86, TN சம்பத் 64

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 197/4 (70) – மிலிந்த சிறிவர்தன 102, அஷேன் பண்டார 44*, மொஹமட் ஷிராஸ் 3/60

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் சோனகர் கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் இடம்பெற்று வரும் இப்போட்டியில் இன்று 286 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது முதல் இன்னிங்ஸினை தொடர்ந்த சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 428 ஓட்டங்களை குவித்தது. சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பாக ஓஷத பெர்னாந்து 147 ஓட்டங்கள் விளாச சோனகர் அணிக்காக தரிந்து கெளஷால் 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

>>Photos: Chilaw MCC v Moors SC – Major League Tier A Tournament 2018/19<<

இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய சோனகர் விளையாட்டுக் கழகம் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் 90 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 428 (98.2) – ஓஷத பெர்னாந்து 147, தரிந்து கெளஷால் 5/118

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 90/2 (31.5) – இரோஷ் சமரசூரிய 57*

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<